மருத்துவமனைகளில் உயிர்காக்கும் வசதிகளை உறுதி செய்க : முதலமைச்சருக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

14 May 2021, 1:40 pm
EPS - stalin - updatenews360
Quick Share

சென்னை : அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்களின் உயரை காக்கும் வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக, படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனிடையே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வசதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கில் கொரோனா பாதித்த மக்கள் அல்லல்படுவதையும், படுக்கை வசதியின்றி தவிப்பதையும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதையும் அறிந்து ஆற்றொனாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைகிறேன்.

மக்களை காக்கின்ற பெரும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருப்பதால், மாண்புமிகு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களின் விலைமதிப்பில்லா இன்னுயிரை பாதுகாத்திடும் வகையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், தடுப்பு மருந்துகள் கிடைக்கவும், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 184

0

0