போக்சோ போதாது… காட்டு மிராண்டிகளுக்கு உட்சபட்ச தண்டனை வழங்குக ; புதுச்சேரி சிறுமி கொலை சம்பவம்.. இபிஎஸ் ஆவேசம்

Author: Babu Lakshmanan
6 March 2024, 4:15 pm
Quick Share

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காட்டுமிராண்டிகளுக்கு உட்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீட்டின் அருகே சாக்கடையில் வீசி சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,19 வயது இளைஞனும், 60 வயதான ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 19 வயது இளைஞனும், சிறுமியை தேடுவதாக கடந்த 2 நாட்களாக நாடகமாடியதும் அம்பலமானது.

சிறுமி கை கால்கள் கட்டப்பட்டு சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியும், குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்கு பிறகு பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். சிறுமியின் பெற்றோரை நேரில் அழைத்து புதுச்சேரி முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் போராட்டமும் கைவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது, இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உட்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- புதுச்சேரி மாநிலம், சோலை நகர் பகுதியில் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி, கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது, இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உட்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதுவே இது போன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கும் எனவும் வலியுறுத்துவதுடன்.

பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் உங்களது குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.

Views: - 534

0

0