EPS விடுத்த திடீர் அழைப்பு…? OPS அதிமுகவில் இணைகிறாரா…? அடுத்தடுத்து காத்திருக்கும் டுவிஸ்ட்..!!

Author: Babu Lakshmanan
12 July 2023, 4:59 pm
Quick Share

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் அதிமுகவில் சேரலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது புதியதொரு அணுகு முறையாக பார்க்கப்படுகிறது.

இது ஓபிஎஸ்சுக்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் விடுக்கப்பட்ட மறைமுக அழைப்பு போலவே உள்ளது என்றும் இதற்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உண்டு என்ற விமர்சனமும் பொதுவெளியில் எழுந்துள்ளது.

ஏனென்றால் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பின்பு கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட்டார்.

அன்று காலை நடந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ளாமல் தனது ஆதரவாளர்களுடன் சென்று அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடி, கட்சியின் சொத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்ற காரணத்திற்காக ஓபிஎஸ் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட சிலரை உடனடியாக நீக்கும் முடிவை அதிமுக பொதுக்குழு எடுத்தது.

300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கட்சி அலுவலகத்தை தாக்கிய கொடூர செயலை கண்டு அதிமுக தொண்டர்கள் கொந்தளித்துப் போனார்கள். இதனால் ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீது அதிமுக பொதுக்குழு எடுத்த நடவடிக்கை நியாயமானதுதான் என்ற எண்ணம் கட்சி தொண்டர்களை கடந்து பொதுமக்களிடமும் ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் ஓபிஎஸ் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நான்தான், எனது அனுமதியின்றி பொதுக்குழுவை கூட்ட முடியாது, அதற்கு அதிகாரமும் கிடையாது. என்னைக் கட்சியிலிருந்து நீக்கவும் முடியாது என்று கூறி கோர்ட்டுக்கு போனார். ஆனால் அதிமுகவில் பொதுக்குழுவே உச்சப்பட்ச அதிகாரம் கொண்டது என்பதால் அவருக்கு ஆதரவாக இதுவரை
எந்த தீர்ப்பும் கிடைக்கவில்லை.

இதற்கிடையே கடந்த மார்ச் மாத இறுதியில் நடத்தப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றியும் பெற்றார். இதையடுத்து, தான் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றியும், இது தொடர்பாக கட்சியின் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை அங்கீகரிக்கவேண்டும் என்றும் கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் அதற்குரிய ஆவணங்களுடன் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தும் இருந்தார். அதேநேரம் இதை அங்கீகரிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில்தான் சென்னை ஐகோர்ட்டில் நடத்த வழக்கில் தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களும், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி
தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான அத்தனை ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்துள்ளது.

அதுமட்டுமின்றி அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட முதன்மை நிர்வாகிகள் மற்றும் 69 மாவட்ட செயலாளர்கள் 79 அமைப்பு செயலாளர்கள் ஆகியோரின் பதவிகளுக்கும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஓ பன்னீர்செல்வமும், அவருடைய சில ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓராண்டு கழித்து,
அதே ஜூலை11ம் தேதி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் எடப்பாடி பழனிசாமிக்கும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் கிடைத்திருக்கிறது என்பதுதான்.

கோர்ட்டு தீர்ப்பின் உத்தரவுக்கு, இந்த அங்கீகாரம் கட்டுப்பட்டது என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தாலும் கூட அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசம் வந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. ஏற்கனவே கட்சியின் தொண்டர்களில் 99 சதவீதம் பேர் அவர் பின்னால் திரண்டு விட்ட நிலையில் இந்த அங்கீகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இன்னொரு பிளஸ் பாயிண்டாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

இதைத் தொடர்ந்து அவர் அதிமுகவினரை குஷிப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்.

அதில் “கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும்; கழகப் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே, கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர். 

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆகவே, கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால், மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என கூறி இருக்கிறார்.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயத்தையும் காண முடிகிறது. இதற்கு முன்பெல்லாம் எடப்பாடி பழனிசாமி இதுபோன்ற அழைப்பை விடுக்கும்போது, குறிப்பிட்ட துரோகிகள் சிலரைத் தவிர அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று கூறுவதுதான் வழக்கமாக இருந்தது.

கடந்த சில வாரங்களாக அதிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. கட்சிக்கு துரோகம் செய்த ஒருவரை தவிர மற்றவர்கள் அனைவரையும் கட்சியில் சேரும்படி அழைக்கிறேன் என்று கூறி வந்தார். ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், அதுபோன்ற நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அதனால் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட அனைவருக்கும் விடுத்த அழைப்பாகவே இது பார்க்கப்படுகிறது.

இதற்குக் காரணம், தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்பதையும் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைவர்களையும் தலைமை தேர்தல் ஆணையம் அங்கீரித்து உள்ளது என்பதையும் சொல்ல வேண்டியதில்லை.

ஏனென்றால், இதுவரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இல்லை என்று தேர்தல் ஆணையம் எங்காவது கூறி இருக்கிறதா?…அதன் இணையதளத்திலும் இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் என்று தானே உள்ளது? என்று கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் இம் மாதம்
11ம் தேதி முதல் அதுபோல கேட்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டனர்.

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், மன்னிப்பு கேட்டால் விலகிச் சென்றவர்கள் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது”என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் ஒன்றுபட்ட அதிமுகவை டெல்லி பாஜக மேலிடம் விரும்புகிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தென் மாவட்டங்களின் சில நாடாளுமன்ற தொகுதிகளில் அவர்கள் சார்ந்த சமூக வாக்குகள் இருக்கலாம் என்று அமித்ஷா கருதுகிறார். ஆனால் அவர்களுக்கு 25 முதல் 30 சதவீத வாக்குகள் இருப்பதாக இங்கே சிலர் ஓவர் பில்டப் செய்கிறார்கள். அப்படியென்றால் 1996 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஏன் படுதோல்வி கண்டது? இந்த மூவரும் அப்போது அதிமுகவில்தானே இருந்தனர்?என்ற கேள்விக்கு அந்த சிலரால் இதுவரை பதில் சொல்லவே முடியவில்லை.

அதனால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வாக்குகளை இவர்கள் மூவரும் பெருமளவில் பிரிப்பார்கள் என்று கூற முடியாது. ஒரு சில தொகுதிகளில் வேண்டுமானால் 3 முதல் 6 சதவீத ஓட்டுகளை பிரிக்கலாம்.

இப்போது ஓபிஎஸ், கொடநாடு கொலை வழக்கை திமுக அரசு தீவிரமாக விசாரிக்கவேண்டும் என்கிறார். இதே கோரிக்கையை நீங்கள் அதிமுகவில் துணை முதலமைச்சராக இருந்தபோது ஏன் எழுப்பவில்லை என்று கேட்டால் எனது பதவிக்கு அப்போது அந்த அளவிற்கு அதிகாரம் இல்லை என்கிறார். ஆனால் முந்தைய அதிமுக ஆட்சியில் அவர் முக்கிய பதவியான நிதி அமைச்சராக இருந்ததையும் கட்சியில், வலிமை வாய்ந்த பொருளாளர் பதவியிலும் இருந்ததையும் மறந்து விட்டார்.

இப்போது அதிமுகவினர் முற்றிலுமாக தன்னை நிராகரித்து விட்ட நிலையில் அதிமுக ஆட்சி காலத்திலேயே கிட்டத்தட்ட 95 சதவீதம் முடிவடைந்து விட்ட வழக்கை முதலமைச்சர் ஸ்டாலினை போலவே ஓபிஎஸ்சும் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிறார். இப்படி திமுகவின் B டீம் போல செயல்படும் ஓபிஎஸ்ஐ மிகுந்த செல்வாக்கு உள்ளவர் என்று டெல்லி பாஜக மேலிடம் எப்படி நம்புகிறது என்றுதான் தெரியவில்லை.

அதேநேரம் அவருக்கு உள்ளதாக கூறப்படும் ஓரிரு சதவீத வாக்கும் கூட கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதற்காக அமித்ஷாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி பெருந்தன்மையோடு கூறியிருக்கிறார்.

ஆனால் இதை ஓபிஎஸ்சோ அவருடைய சில ஆதரவாளர்களோ ஏற்றுக்கொள்வார்கள் என்று கருத முடியாது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து மன்னிப்பு கடிதம் கொடுப்பதை ஓபிஎஸ் ஒருபோதும் விரும்ப மாட்டார். அதனால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இதுபோன்றதொரு சூழலில், நமக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்ற சிந்தனை ஓபிஎஸ்சிடமும், அவர் பக்கம் உள்ள ஓரிரு ஆதரவாளர்களிடமும் தோன்றலாம். இது 2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் பாஜகவிற்கும் சில தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தவும் செய்யும்.

அதேநேரம் இந்த அழைப்பை 2024 தேர்தல் சமயத்தில் ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால் தனக்கு பின்பு அதிமுகவில் தனது மகன்கள் முக்கிய பதவிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் தலை தூக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இதை புரிந்துகொண்டோ, என்னவோ அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் “இந்த அழைப்பு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மூவருக்கும் பொருந்தாது” என்று கூறியிருக்கிறார்.

எனவே வருகிற 18ம் தேதி நடைபெற இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தமிழகத்தின் அரசியல் சூழலை கருத்தில்கொண்டு பாஜக மேலிடம் ஒரு உறுதியான முடிவை எடுக்கவேண்டும். ஏனென்றால் ஓபிஎஸ் இன்னும் பாஜக தன்னை கைவிடாது என நம்பிக் கொண்டிருக்கிறார்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பாஜகவின் தேசிய தலைமை இது தொடர்பாக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது வரும் 18ம் தேதி தெரிந்துவிடும் என்று நம்பலாம்!

=====

Views: - 375

0

0