இபிஎஸ் எழுச்சியால் ஆட்டம் கண்ட திமுகவின் தேர்தல் கணக்கு… திசை மாறுகிறதா விசிக, கம்யூனிஸ்ட்..?

Author: Babu Lakshmanan
30 March 2023, 9:09 pm
Quick Share

அதிமுக தலைமை கழகம் நடத்திய தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, யாருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்திருக்கிறதோ, இல்லையோ திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்குத்தான் அளவற்ற மகிழ்ச்சியை தந்து இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

இந்த பரபரப்பு தகவல்தான் தற்போது தமிழக அரசியலில் சூறாவளியாய் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. இது நம்புவதற்கு கடினமானதொரு விஷயமாக இருந்தாலும் கூட கட்சிகளின் தேர்தல் கணக்கில் இதுவும் ஒரு புதிய வியூகம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயளாலராக எடப்பாடி பழனிசாமி கடந்த 28ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனால் கடந்த 10 மாதங்களாக அதிமுகவில் நீடித்து வந்த ஒற்றை தலைமை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டு உள்ளது.

அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்குள் வந்துவிட்டதை உணர்ந்துதான் பாஜக, பாமக, தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இதுதவிர சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் வாழ்த்து தெரிவித்தார். இதைவிட இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக் கூறி இருந்ததுதான்.

இவர்கள் தவிர திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களில் திருமாவளவன் மட்டும் வெளிப்படையாகவே தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். அவர் கூறும்போது, “சட்டபூர்வமாக எடப்பாடி பழனிசாமி வென்றுள்ளார். இருப்பினும் அவருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுகிறேன். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் சமூக நீதிக்காக குரல் கொடுத்தனர். சமூக நீதியை பாதுகாத்தும் உள்ளனர். அந்த வகையில் சமூகநீதிக்கு நேர் எதிரியாக உள்ள பாஜகவை தூக்கி சுமக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

பாஜக மீது தனக்குள்ள தனிப்பட்ட வெறுப்பையும், கோபத்தையும்தான் திருமாவளவன் இப்படி காட்டி இருந்தாலும் கூட எடப்பாடி பழனிசாமிக்கு அவர் மறைமுகமாக வாழ்த்து தெரிவித்திருப்பதையே இது உணர்த்துகிறது.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவாகிவிட்டார் என்று திருமாவளவன் பாராட்டியிருந்ததும் இங்கே நினைவு கூரத்தக்கது.

விசிக போலவே மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலம் “உங்களுடைய துணிச்சலான முயற்சிக்கு எங்களது பாராட்டுகள்”
என்று வாழ்த்தியதாக தெரிகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் உள்ள ஐந்து கட்சிகள் திடீரென எதிர் முகாமில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததை திமுக தலைமை உடனடியாக மோப்பம் பிடித்தும் விட்டது. இதையறிந்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வாழ்த்து கூறியிருப்பதில் எந்த உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டாலும் கூட அதை அறிவாலயம் நம்ப தயாராக இல்லை என்கிறார்கள்.

“திமுக தலைமைக்கு மறைமுக அழுத்தம் கொடுக்கும் விதமாகத்தான் அதன் கூட்டணி கட்சிகள் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை வாழ்த்தி இருக்கின்றன” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“திமுக அணியில் தற்போது காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் சிறு சிறு கட்சிகள் என மொத்தம் 13 கட்சிகள் உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஆதரவளித்தது. எனவே, அக்கட்சியும் திமுக அணியில் இணைந்து விடும் என்பது உறுதி.

13 கட்சிகளுடன் திமுக கூட்டணி வலுவாக இருப்பதாலும், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பிரச்னைகளால் சில மாதங்கள் சற்று தடுமாற்றம் கண்டதாலும் திமுக தலைமையிடம், கூடுதல் எம்பி தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுக்க முடியாத நிலை இந்த கட்சிகளுக்கு இருந்து வந்தது. அது மட்டுமின்றி 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒதுக்கிய தொகுதிகளையாவது அறிவாலயம் மீண்டும் கொடுக்குமா? என்ற சந்தேகம் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்படவும் செய்தது.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வலுவான கட்சியாக உருவாகி விட்டதால் இனி திமுகவிற்கு அதை சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும். தவிர மூன்று மாதங்களுக்கு முன்பே 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று இபிஎஸ் உறுதியாக கூறியும் இருந்தார். அதை உண்மை என்று நிரூபிப்பது போலத்தான் அதிமுக கூட்டணியில் முன்பு இருந்த அத்தனை கட்சிகளும் அவருக்கு இப்போது வாழ்த்து தெரிவித்திருக்கின்றன. இதனால் திமுக தலைமை மிரண்டு போயிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இதைத்தான் திமுக கூட்டணியில் உள்ள விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றன.

ஏனென்றால் பிரதமர் கனவுடன் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக மட்டும் 32 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு இருந்தார். இதனால் காங்கிரசுக்கு நான்கு, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் தான் கிடைக்கும் என்ற நெருக்கடியான சூழலும் உருவானது. இதை இந்த கட்சிகளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில்தான் அதிமுகவின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமியின் வசம் வந்து சேர்ந்தது.

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக சிதறுண்டு போகும், அதை பயன்படுத்தி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் நாம் மிக எளிதில் கைப்பற்றி விடலாம் என்று மன கணக்குப் போட்டு இருந்த திமுக தலைமை இப்போது தனது கூட்டணியில் உள்ள பிரதான கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டது.

அதுவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி சமூகத்தினரை அவதூறாக பேசிய வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கமும் செய்யப்பட்டிருப்பதால் தற்போது காங்கிரஸ் தேசிய அரசியலில் மிகுந்த சுறுசுறுப்பு காட்டி வருகிறது.

ராகுலுக்கு செல்வாக்கு பெருகி இருப்பதாக காங்கிரஸ் கருதும் நிலையில் தமிழகத்தில் திமுக ஒதுக்க நினைக்கும் நான்கு தொகுதிகளை ஏற்குமா என்பதே சந்தேகம்தான்! மாறாக 2019 தேர்தலை விட இன்னும் ஐந்து தொகுதிகளை, அதாவது 14 இடங்களை கேட்டு டெல்லி காங்கிரஸ் மேலிடம் நெருக்கடி கொடுக்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால் சில வாரங்களுக்கு முன்பு வரை தேசிய அரசியலை திமுக முன்னெடுக்கும் என்று தொடர்ந்து கூறிவந்த முதலமைச்சர் ஸ்டாலினின் எண்ணம் கைகூடாமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

தவிர எதிர்வரும் தேர்தலில் திமுக தலைமையிடம் தங்களின் பேரம் பேசும் வலிமை கூடும் என்று காங்கிரஸ்,விசிக, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்
என நினைப்பது இயல்பான ஒன்றுதான்.

அதேநேரம் திமுக கூட்டணியில் இருந்து சுட்டுப் போட்டாலும் கூட ஒரு போதும் விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறாது. போட்டியிட ஒரு எம்பி தொகுதி கிடைக்காவிட்டாலும் கூட இந்தக் கட்சிகள் திமுக கூட்டணியிலேயேதான் நீடிக்கும் என்பதும் உறுதி.

ஏனென்றால் மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் வந்து விடக்கூடாது, அதற்காக எந்த தியாகத்தையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம் என்று கூறி திமுக தலைமையுடன் இந்த கட்சிகள் மல்லுக் கட்டாமல் ஒதுங்கிக் கொள்ளவே செய்யும். அதனால் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வாழ்த்துக் கூறியதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அதிமுக கூட்டணியை வலுவாக கட்டமைத்து, கடுமையான மின் கட்டண உயர்வு, சொத்து வரி பல மடங்கு அதிகரிப்பு, ஆவின் பால் விலை உயர்வு,
அத்தியாவசிய மற்றும் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு, திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் நடமாட்டம் திமுக கவுன்சிலர்களின் நில அபகரிப்பு, அத்துமீறல்கள் ஆகியவற்றை தீவிர பிரச்சாரமாக முன்னெடுத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கான வியூங்களை வகுத்து முனைப்புடன் செயல்பட வேண்டும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

இதுவும் ஏற்புடைய கருத்தாகவே இருக்கிறது!

Views: - 221

0

0