தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒன்று… ஆளுநர் உரையில் இருப்பது வேறு… திமுக அரசு மீது எடப்பாடியார் ‘அட்டாக்!!

21 June 2021, 10:02 pm
Quick Share

ஆளுநர் உரை என்பது மாநிலத்தின் ஆளும் கட்சி வகுத்துள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஒரு சம்பிரதாய நிகழ்வு. ஆளுநர் உரை என்று கூறப்பட்டாலும், அது ஆளும் கட்சியால் எழுதப்பட்ட ஒன்றுதான்.

வாக்குறுதிகளின் முன்னோட்டம்

உரையில் தனக்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வாத அல்லது பிடிக்காத விஷயங்கள், கருத்துகள் இருந்தாலும் கூட அதை ஏற்றுக்கொண்டு ஆளுநர் முழுமையாக படித்துத்தான் ஆக வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்து, சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
10 வருடங்களுக்கு பின்பு திமுக ஆட்சியைக் கைப்பற்றியதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாசிக்கும் உரையின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

governor - updatenews360

ஏனென்றால் ஆளும் கட்சி தனது பட்ஜெட்டை இதனடிப்படையில்தான் தயாரித்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்வது வழக்கம். குறிப்பாக தேர்தலின்போது மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம் பெறும். அதன் முன்னோட்டம்தான் ஆளுநர் உரை என்று கூட சொல்லலாம்.

ஆளும் கட்சியின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின்
உரை இருந்தது.

புஷ்வானமான ஆளுநர் உரை

அதில் சில முக்கிய அம்சங்கள்:

 • வேளாண் துறைக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் தனி பட்ஜெட் போடப்படும்.
 • நிதிநிலை அறிக்கை குறித்த வெள்ளையறிக்கை வெளியிடப்படும்.
 • தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.
assembly - updatenews360
 • தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு கொள்கை காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது.
 • மாநில சுயாட்சியின் இலக்கை எட்டவும், உண்மையான கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தவும் இந்த அரசு உறுதி கொண்டு இருக்கிறது.
 • பொருளாதார மந்தநிலையைப் போக்கும் வகையில் அரசுக்கு ஆலோசனை வழங்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவில், அமெரிக்காவின் மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழக பேராசிரியர் எஸ்தர் டப்ளோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட அறிஞர்கள் இடம்பெறுவர்.
 • நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்றி ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படும்.
 • தடையற்ற மின்சாரம் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது.
 • தமிழ்வழி கல்வி, அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
 • உழவர் சந்தைகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.
 • அரசு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் பொதுமக்களுக்கு முழுமையாக சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும்.

காணாமல் போன வாக்குறுதிகள் :

பொதுவாக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பாதி அளவாவது ஆளுநர் உரையில் இடம்பெறுவது வழக்கம். ஆனால் ஆளுநர் வாசித்தபோது திமுக அறிவித்த முக்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இடம்பெறவே இல்லை என்பதுதான் இதில் ஆச்சர்யம்.

குறிப்பாக பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் 4 ரூபாய் விலைக்குறைப்பு.
குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய், சிலிண்டர் மானியம் 100 ரூபாய், தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் மகளிர் வாங்கிய கடன் தள்ளுபடி, 30 வயதுக்குட்பட்ட மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை பற்றி ஆளுநர் உரையில் எதுவுமே கூறப்படவில்லை.

எடப்பாடியாரின் சரமாரி கேள்வி :

இதைத்தான் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி சட்டபேரவை கூட்டம் முடிந்து வெளியே வந்து, நிருபர்களிடம் பேசியபோது சுட்டிக் காண்பித்தார். திமுக அரசை கேள்விக் கணைகளால் துளைத்தும் எடுத்தார்.

செய்தியாளர்களிடையே அவரிடம் துருவித்துருவி கேள்விகள் கேட்டபோதும் சிலரைப் போல் நழுவிக்கொள்ளாமலும், முகம் சுளிக்காமலும் பதில் அளித்தார். அவருடைய பேச்சில் மென்மை, தென்பட்டாலும் அதில் அதிக காரம் இருக்கவே செய்தது

அவர் கூறும்போது, “தேர்தலின்போது 505 வாக்குறுதிகளை திமுக வெளியிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை நிறைவேற்றப்படும் என்றனர். ஆனால் அதில் முக்கியமான வாக்குறுதி ஒன்று கூட ஆளுநர் உரையில் இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

eps - updatenews360

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் ரத்து செய்யப்படும் என அரசாணை வெளியிட்டோம். பலருக்கு ரத்து செய்து சான்றிதழும் வழங்கினோம்.

ஆனால், திமுக ஆட்சி அமைத்து 44 நாட்கள் ஆகின்றன. இதுவரை விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன் ரத்து செய்யப்படவில்லை. தற்போது பருவமழை தொடங்கிவிட்டது. டெல்டா மாவட்டத்தில் பயிர் செய்யும் விவசாயிகளுக்குப் புதிய கடன் வழங்கப்பட வேண்டும், அதுகுறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை.

மாணவர்கள் வாங்கிய கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார்கள். அத்துடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குக் கீழ் அடகு வைத்துக் கடன் வாங்கியவர்கள்  நகைக்கடன் தள்ளுபடி என்கிற அறிவிப்பையும் தேர்தல் நேரத்தில் வெளியிட்டனர். அவைகளெல்லாம் என்ன ஆயிற்று? என்றே தெரியவில்லை

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றனர். குடும்பத் தலைவிக்கு ரூ.1000 மாதம் தருவோம் என ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களில் பேசினார். கேஸ் சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் எனவும் அறிவித்ததார். ஆனால்,இந்த அறிவிப்புகள் ஆளுநர் உரையிலேயே காணப்படவில்லை.

கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம் குறித்து ஒரு வரிகூட இல்லாததை தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நினைக்கிறேன்.

மகளிர் சுய உதவிக் குழுவுக்கு முறையாகக் கடன் பெற்று வழங்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவித்துள்ளனர்.

ஆனால், தேர்தல் அறிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்கள். பரப்புரையிலும் அதைத்தான் பேசினார்கள். ஆனால் ஆளுநர் உரையில் அப்படி எதுவும் இல்லையே?

இனி அதிரடி ஆட்டம்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். மாறாக நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளனர். அந்தக் குழு சமர்ப்பிக்கும் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள்.

ஆனால், அவர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், தேர்தல் பிரச்சாரத்தின்போதும் சொன்னது, திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதே. ஆனால், அதைச் செய்யவில்லை.

eps - stalin - updatenews360

சில நாட்களுக்கு முன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்னும் நீட் தேர்வு முடிவுக்கு வரவில்லை. அதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று பேட்டி அளித்தார். அப்படியானால் தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு என்கிற அளவில்தான் அவர்களது செயல் உள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை என்பதுதான் தற்போதுள்ள நிலை” என்று செய்தியாளர்களிடம் அவர் திமுக அரசை வறுத்தெடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியின் ‘அட்டாக்’ ஆரம்பத்திலேயே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. இனி சட்டப்பேரவைக்குள்ளும் அவருடைய அதிரடி ஆட்டம் தொடரும் என நம்பலாம்!

Views: - 216

0

0