‘ஐயோ, நெஞ்சுவலி-னு திமுகவினர் மாதிரி படுத்துக்க மாட்டோம்’… எதிர்த்து நின்று நிரூபிச்சு காட்டுவோம் ; இபிஎஸ் பரபர பேட்டி..!!

Author: Babu Lakshmanan
30 August 2023, 9:36 pm
EPs Stalin - Updatenews360
Quick Share

கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- கொடநாடு விவகாரத்தை சட்டமன்றத்தில் நான் பேசிய போது ஸ்டாலின் என்னிடம் விவாதிக்க வேண்டியது தானே. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவ குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக ஆட்சியில், அது தொடர்பான வழக்கு நடைபெற்றது அதிமுக ஆட்சியில். ஆனால், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியது திமுக வழக்கறிஞர். இவர்களுக்கு ஜாமீன் தாரர்களாக இருந்தது திமுகவினர். கொலை குற்றவாளிக்கும், திமுகவை சேர்ந்த ஜாமீன் தாரருக்கும் என்ன சம்பந்தம்?

கொரோனா காலத்தில் நீதிமன்றம் செயல்படாத காரணத்தாலேயே வழக்கு தாமதம் ஆனது. ஐஜி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின்னர் மீண்டும் சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றப்படுவது ஏன்? கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். திமுக அரசின் காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லையென்றால் சி.பி.ஐ க்கு விசாரணையை மாற்ற கேளுங்கள்.

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் குரலை அதிமுக நாடாளுமன்றத்தில் ஒலித்தது. ஆனால், திமுக குரல் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாதவர்கள் இந்தியாவை காப்பாற்ற போகிறார்களாம். கூரை ஏறி கோழி பிடிக்காதவர்கள், வானம் ஏறி வைகுண்டம் போக போகிறார்களாம். பெங்களூரில் இந்தியா கூட்டணி ஆலோசனையின் போது துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் காவிரி பிரச்சனையை பேசுவது தப்பா? பேச வேண்டியது தானே. அதற்கு தானே கூட்டணி.

அதிமுக எப்போதும் அடிமை கிடையாது. அதிமுக எப்போதும் எந்த கட்சிக்கும் அடிமை கிடையாது. திமுகவில் ஸ்டாலின் குடும்பத்தினர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதே நோக்கம், மக்கள் நலன் அல்ல. ஸ்டாலினுக்கு மக்களை, விவசாயிகளை பற்றி கவலையில்லை. டெல்டா காரன் என வசனம் பேசியவர், நெல் பயிர் எல்லாம் கருகிய பின்னர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அவர் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை டெல்டாகாரன் என ஏற்றுக்கொள்வோம்.

பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? கூட்டணி அமைத்து அமைச்சரவை பெற்ற போது, திமுகவுக்கு பாஜக இனித்தது, இப்போது கசக்கிறதா? கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்றிய பாஜக அரசிடம் தொடர்ந்து போராடுவோம். தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்பவே கூட்டணி அமைக்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறை ஊழல் குறித்து என் மீது ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடத்தி என் மீது குற்றமில்லை என நிரூபித்தேன். எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. திமுவினரை போல ஐயோ நெஞ்சு வலிக்கிறது என போய் மருத்துவமனையில் படுக்கவில்லை. நீட் விவகாரத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சும் என திமுக மாறுபட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நீட் எனும் அரக்கனை கொண்டு வந்ததே திமுக ஆட்சி காலத்தில் தான். அதனால் தான் இவ்வளவு பிரச்சனைகளும்.

தேர்தல் பயத்தில் தான் மகளிர் உரிமை தொகையை அளிப்பதாக அறிவித்துள்ளனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு காலம் தூங்கி கொண்டிருந்தார்கள். இந்த ஆட்சியில் மின்கட்டணம், பதிவுக்கட்டணம் ஆகியவை பன்மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை 40% உயர்வு. இதனால் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த கொந்தளிப்பை அடக்கவே திமுக நடித்துக் கொண்டிருக்கிறது, எனக் கூறினார்.

Views: - 236

0

0