எடப்பாடியாரின் இனிக்கும் பொங்கல் : ஸ்டாலினின் அறிக்கை பொங்கல்!!
13 January 2021, 9:02 pmசென்னை : தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கேட்கும் ‘பொங்கலோ பொங்கல்’ என்னும் கொண்டாட்டக் குரலுடன் இந்த ஆண்டு தேர்தல் திருவிழாவும் இணைவதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் பொங்கலும் இணைந்துள்ளது. வழக்கமாக திராவிடக் கட்சிகள் மட்டும் வாழ்த்துக்கூறி தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாகப் பொங்கலில் இப்போது தேசியக் கட்சிகளின் தலைவர்களும் டெல்லியில் இருந்து தமிழகம் வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழக்கம்போல் பொங்கலுக்கு முக்கியத்துவம் தந்தது திமுக அரசுதான் என்று அறிக்கை கொடுத்து ‘ஏட்டுப் பொங்கல்’ வைத்திருக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசின் பொங்கல் பரிசுத்திட்டத்தால் எல்லாத் தமிழர் வீடுகளிலும் உண்மையாக பொங்கலுடன் மகிழ்ச்சியும் பொங்கிக் கொண்டிருக்கிறது.
“தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெருந்தோட் குறுமகள்”
என்று சங்ககாலத் தமிழ்ப் பாடல்களில் தை முதல் நாளான பொங்கள் நாள் சிறப்பிக்கப்படுகிறது. சிறப்பான திருமண வாழ்க்கைக்காக தமிழ்ப்பெண்கள் நோற்கும் நோன்பை தை முதல் நாளில் முடித்து குளிர்ந்த குளத்தில் நீராடி மகிழ்வார்கள் என்று நற்றிணையால் பாடப்படும் தை முதல் நாள் தமிழர்களின் திருநாளாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்துள்ளது தெரியவருகிறது.
தமிழ்நாட்டில் இன்று கொண்டாடப்படும் தீபாவளி உள்ளிட்ட எந்தக் கொண்டாட்டமும் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் பொங்கல் நாளைக் கொண்டாடிவந்தனர் என்று பல தமிழ் அறிஞர்களும் கூறுகின்றனர். இந்திய இலக்கியம் எதிலும் பொங்கலைவிடப் பழமையான திருநாள் கொண்டாட்டங்கள் இல்லை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்றுவரை தொடர்ச்சியாகக் கொண்டாடப்படுவதாக வேறு எந்தப் பண்டிகையும் உலகில் குறிப்பிடப்படவில்லை. அந்த வகையில் உலகின் முதல் திருநாளாகவும் பொங்கல் உள்ளது.
மக்கள் திருநாளாக பொங்கல் இருந்தாலும் அதை மங்கச்செய்யும் விதத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தபோது பலவிதமான கதைகளுடன் புதுப்புது பண்டிகைகள் வந்தன. போன நூற்றாண்டில் தோன்றிய திராவிட இயக்கத் தலைவர்கள் பொங்கல் நாளை தமிழர் திருநாள் என்று மீண்டும் உயர்த்திப்பிடித்தனர். எந்தப் பண்டிகையும் கொண்டாடாத திராவிட இயக்க நிறுவனர் பெரியார் பொங்கலை மட்டும் பொதுவிழாவாகக் கொண்டாடினார்.
அதைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவும் பிற திராவிட இயக்கத் தலைவர்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் பொங்கலின் சிறப்பை தமது எடுத்துக்கூறுவதை முக்கிய கொள்கையாகவே கொண்டனர். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் தனது வாழ்நாளில் கொண்டாடிய ஒரே திருநாளாக பொங்கல் இருந்தது.
கொரோனாப் பாதிப்பாலும் அதனால் ஏற்பட்ட பொருளாதார சரிவாலும் பொங்கல் கொண்டாட முடியாமல் துவண்டுகிடந்த மக்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கும்விதத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ரூ. 2500 பரிசும் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய பரிசுத் தொகுப்பை மக்களுக்குக் கொடுத்து எல்லாத் தமிழர்களின் வீடுகளிலும் பொங்கல் பொங்குவதை உறுதிசெய்துள்ளது. விவசாயிகள் தங்கள் விளைச்சலுக்குக் காரணமாக இயற்கைக்கு நன்றி சொல்லும் பொங்கலின் சிறப்பை உணர்ந்து அதைக் கொண்டாட வழிசெய்யும் ‘விவசாயி ஆட்சி’ தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதை முதல்வர் உணர்த்தியுள்ளதாக பொங்கல் பரிசைப் பெறும் மக்கள் பாராட்டிவருகின்றனர்.
முதல்வரின் பரிசுத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதால் அதை எதிர்க்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரிசுத்தொகையை ரூ. 5,000 என்று உயர்த்தவேண்டும் என்று கோரிக்கைவைத்து இந்தத் திட்டத்துக்கு தனது மறைமுகமான ஆதரவைத் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், தேர்தல் ஆண்டில் வரும் பொங்கலைவைத்து எப்படி அரசியல் செய்வது என்று பார்த்த ஸ்டாலின் பொங்கல் பண்டிகைக்கு முக்கியத்துவம் கொடுத்தது திமுகதான் என்று அறிவித்து தனது கட்சியினரை ‘சமத்துவப் பொங்கல்’ கொண்டாடுமாறு கூறியுள்ளார். மேலும் பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது திமுக அரசுதான் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அதை இந்த ஆண்டு கொண்டாட வழிசெய்தது அதிமுக அரசு என்பதை அவர் சொல்லவில்லையென்றாலும் மக்கள் அதைப் பேசிவருகிறார்கள். திமுகவின் ‘தேர்தல் பொங்கல்’ கட்சிக்காரர்களிடம் கூட எடுபடவில்லை.
இந்த ஆண்டுத் தேர்தல் பொங்கலில் எந்த ஆண்டும் இல்லாத திருநாளாக தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் இணைந்துள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பொங்கல் நாளில் தமிழ்நாடு வருகிறார். கட்சி அலுவலகத்தில் ‘நம்ம ஊரு பொங்கல்’ என்று பாஜக நடத்தும் கொண்டாட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். வழக்கமாக பொங்கலை ‘மகர சங்கராந்தி’ என்று சமஸ்கிருதப் பெயரில் சொல்லும் பாஜக இந்த தேர்தல் ஆண்டில் பொதுமக்களோடு சேர்ந்து பொங்கலை பொங்கல் என்றே இந்த ஆண்டு சொல்கிறது.
பாஜக தலைவர் பொங்கல் கொண்டாடுவதைக் கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் அதே நாளில் தமிழகம் வருகிறார். அவர் காங்கிரஸ் கட்சி நடத்தும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார். இரு தேசியக் கட்சிகளும் போட்டிபோட்டு பொங்கல் கொண்டாடுவதை தமிழ்நாட்டு மக்கள் வேடிக்கையாகப் பார்க்கிறார்கள். இருந்தாலும் தமிழர் திருநாள் தேசியக் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல் ஆண்டிலாவது நினைவுவந்தது மக்களுக்கு மகிழ்ச்சிதான். ஆக மொத்தம் இந்த ஆண்டு நடைபெறப்போகும் தேர்தல் திருநாளுக்கு முன்னோட்டமாக பொங்கல் கொண்டாட்டம் அரசியல் பொங்கலாக மணக்கிறது.