அரியர் மாணவர், நீட் தேர்வுப் பிரச்சினை, புதிய கல்விக்கொள்கை : மாநிலப் பட்டியலுக்குக் கல்வியை மாற்ற வலுக்கும் கோரிக்கை!!

10 September 2020, 5:23 pm
Quick Share

சென்னை : அரியர் மாணவர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் கருத்தையும், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) கருத்தையும், நீதிமன்றம் கேட்டுள்ள சூழலில் கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலுக்கே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

நீட் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த அரியலூர் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டது தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் கல்வியாளர்களும் மாநில அரசிடம் கல்வியை விட்டுவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். எந்தவிதமான பொது விவாதங்களும் இல்லாமல் மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதும் இக்கோரிக்கைக்கு ஆதரவு பெருகச் செய்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சென்ற மார்ச் மாதம் முதல் பல கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுவிட்டன. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர அனைத்து பருவ தேர்வில் இருந்தும் விலக்கு அளிப்பதாகவும், அரியர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த அனைத்து மாணவர்களுமே தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்பை வெளியிட்டார்.

jee_neet_exams_2020_updatenews360

தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வுக்கு தயாராக இருந்த மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி என்று அறிவித்தது மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவித்த விவகாரத்தில் இதுவரை மத்திய கல்வி வாரியமான ஏஐடியூசியிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. இதில் அரசின் முடிவே இறுதியானது என்று சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி தெரிவித்துள்ளார்.

ஆனால், கலை – அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களை தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர்கள் தங்கள் மனுக்களில், கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவற்றை காப்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அரசின் அறிவிப்பால் அனைத்து பாடங்களிலும் படித்து தேர்ச்சியடைந்த மாணவர்களை அரசின் அறிவிப்பு சோர்வடைய செய்யும் என்றும் கூறியுள்ளனர். இதனால், உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்தே அரியர் தேர்ச்சி உறுதியாகும். இல்லாவிட்டால் தேர்வு எழுத வேண்டிய நிலை வரலாம்.

Madras_High_Court_UpdateNews360

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் அறிவிப்பு குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்தையும், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் கருத்தையும் நீதிமன்றம் கேட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசு கல்வி தொடர்பான விவகாரங்களில் எந்தவிதமான முடிவை எடுத்தாலும், மத்திய அரசின் தலையீடோ, மத்திய நிறுவனங்களின் தலையீடோ, மாணவர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தவதால், 1976-க்கு முன் இருந்ததுபோல் கல்வியை மாநில அரசின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இது குறித்த கோரிக்கையை நூறு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கையெழுத்திட்ட மனுவாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். கல்வியை மாநில அரசின் பட்டியலில் சேர்க்குமாறு வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் புதிய கல்விக்கொள்கையை முழுமையாக மாநில அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

1976-ஆம் ஆண்டு 42-வது அரசியல் திருத்தச் சட்டம் நிறைவேற்றிய பின்னர்தான் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தற்போது புதிய கல்விக்கொள்கையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளாதபோது அதை நிறைவேற்றும் முயற்சியில் தன்னிச்சையாக மத்திய அரசு முனைந்துள்ளதாகவும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

முன்னாள் அரசு அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

Views: - 8

0

0