பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்நிறுத்தக்கூடாது…! P. K.வின் நிபந்தனையால் காங்கிரஸ் அதிர்ச்சி

14 July 2021, 7:09 pm
PK - priyanka - updatenews360
Quick Share

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், பொதுச் செயலாளர் பிரியங்காவையும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், டெல்லியில் சந்தித்து 2 மணி நேரத்துக்கும் மேலாக, ஆலோசனை நடத்தியிருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் காங்., பூகம்பம்

பஞ்சாப் காங்கிரஸில், முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கும், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில்தான், ராகுலையும், பிரியங்காவையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்திருக்கிறார். ஏற்கனவே அவர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இருவரையும் நேரடியாக சந்தித்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பொதுவான வேட்பாளர் ஒருவரை நிறுத்த ஆதரவை திரட்டி வந்தார். இதற்காக கடந்த 2 வாரங்களில் மட்டும் சரத் பவாரை, அவர் இருமுறை சந்தித்துள்ளார்.

2022-ம் ஆண்டு பஞ்சாபில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக காங்கிரசுக்கு முதன்மை தேர்தல் ஆலோசகராக சில மாதங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார்.
அப்போது முதலே, அம்மாநில காங்கிரசில் கோஷ்டிப் பூசல் விஸ்வரூபம் எடுக்க தொடங்கிவிட்டது.

முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும், சித்துவும் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்ளத் தொடங்கினர். இந்த பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்லை. தன்னை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்குமாறு சித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதற்கு அமரீந்தர் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

ஆனால் ராகுலும், பிரியங்காவும் சித்துவை ஆதரிப்பதால் அமரீந்தர் சிங்கால் எதிர்த்து எதுவும் கூற முடியவில்லை.

மறுக்காத சித்து :

இதற்கிடையே பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமை சித்துவுக்கு ஒரு பகிரங்க சவால் விடுத்தது. பஞ்சாப் மாநில காங்கிரசுக்காக தொழிலதிபர்கள் பெரிய அளவில் பணம் கொடுத்து இருக்கிறார்கள். இதை உங்களால் மறுக்க முடியுமா?… என்று கேட்க அதற்கு பதிலளித்த சித்து, “நான் முன்பு, பாஜகவில் இருந்தபோதும் சரி இப்போது காங்கிரஸில் இருக்கும் போதும் சரி மக்களுக்காக போராடியதை அனைவரும் அறிவார்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் காங்கிரஸ் மீது ஆம் ஆத்மி குற்றம் சாட்டியதை அவர் நேரடியாக மறுக்கவே இல்லை.

அதாவது, ‘நான் நல்லவன்’ என்பதோடு நிறுத்திக் கொண்டுவிட்டார். ஏற்கனவே காங்கிரசில் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசலை இது மேலும் கொழுந்துவிட்டு எரிய செய்வதாக அமைந்து விட்டது.

அதாவது, காங்கிரஸில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றால், ஆம் ஆத்மியில் சேர்ந்து விடுவேன் என்று சித்து மறைமுக எச்சரிக்கை விடுப்பதுபோல் இது இருப்பதாக அமரீந்தர் சிங்கின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

ராகுலை ஓரங்கட்டும் P.K

இப்படி உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்த நிலையில்தான் பிரசாந்த் கிஷோர் டெல்லியில் முகாமிட்டார். அவர் ராகுலையும் பிரியங்காவையும் சந்தித்தபோது பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் 2024 நாடாளுமன்றத்தேர்தலில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஒருமித்த கருத்துடன் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவேண்டும் என்றும் இதற்கு மம்தா பானர்ஜியும், சரத்பவாரும் முழுமனதுடன் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அதேநேரம், நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான பிரியங்கா போன்ற ஒருவரைத்தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தவேண்டும், இதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுவிட்டால் மற்ற கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பாஜகவை வீழ்த்த அத்தனை வியூகங்களையும் வகுத்துக் கொடுக்கிறேன் என்று பிரசாந்த் கிஷோர் இருவரிடமும் உறுதியளித்து உள்ளார்.

priyanka gandhi - updatenews360

அப்போது ராகுல், “நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ தெரியாது. எப்படிப்பட்ட நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் பஞ்சாபில் காங்கிரசை வெற்றி பெற வைத்தாகவேண்டும். அதேநேரம் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடக்கூடாது.
இந்த இரண்டிலும் நீங்கள் சாதித்து காட்டி விட்டால் பிரியங்காவை பொதுவேட்பாளராக நாடாளுமன்ற தேர்தலின்போது அறிவிக்கலாம்” என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார், என்கிறார்கள்.

ஆனால் இந்த தகவலை கேட்டு காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பிரதமர் வேட்பாளர் விஷயத்தில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் மேலிடத்திற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியிருந்தாலும் அது சாத்தியமாகுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

மனதை மாற்றும் தலைவர்கள்

இதுபற்றி டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “28 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக கட்சிகளை திரட்டுவது எளிதான காரியமல்ல. அதுவும் 2024 தேர்தலுக்கு முன்பாக அதைச் செய்ய முடியுமா? என்பதும் சந்தேகம்தான். பிரியங்காவை சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா? என்பதை உறுதியாக கூறமுடியாது.

உத்தரபிரதேச தேர்தலில் யார் கை ஓங்குகிறது என்பதை பொறுத்தே நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமையலாம். ஒருவேளை இங்கு சமாஜ்வாடி வெற்றி பெற்றுவிட்டால் மகன் அகிலேஷ் யாதவை முதலமைச்சர் ஆக்கிவிட்டு தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என முலாயம் சிங் போர்க்கொடி உயர்த்தலாம். நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்துவிட்டால் மம்தா பானர்ஜியும் மனதை மாற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

எந்த விதத்தில் பார்த்தாலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒருமித்தக் கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்துவதை அத்தனை கட்சிகளும் ஏற்றுக் கொள்ளுமா? என்பது சந்தேகம்தான்.

எனவே தேர்தலுக்கு பின்பு யார் யார்? எத்தனை இடங்களில் வெற்றி பெற்றார்கள்? எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எம்பிக்களின் எண்ணிக்கை அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 272-ஐ தாண்டுமா என்பதைப் பொறுத்தே, எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? என்பதை பார்க்க முடியும். உத்தரபிரதேசத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுவிட்டால் எதிர்க்கட்சிகள் என்ன முடிவு எடுக்கும் என்பதை கணிக்க முடியாது. அதனால் பிரசாந்த் கிஷோர், நினைப்பது நடக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது.

காங்., மூளை P.K.

கொரோனா தொற்று பரவல், ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு போன்றவற்றில் காங்கிரசுக்கு
டூல்கிட்டை பிரசாந்த் கிஷோர் தயாரித்துக் கொடுத்தார் என்று முன்பு கூறப்பட்டது.

தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக காங்கிரஸ் முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களுக்கும் அவருடைய மூளைதான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது, என்பது ராகுல், பிரியங்காவை அவர் சந்தித்துப் பேசியிருப்பது மூலம் உறுதியாகி இருக்கிறது” என்று குறிப்பிட்டனர்.

தமிழக, மேற்குவங்க தேர்தலுக்கு பின்பு யாருக்கும் அரசியல் ஆலோசகராக பணியாற்ற போவதில்லை என்று அறிவித்த பிரசாந்த் கிஷோர், தற்போது முழு வீச்சில் மீண்டும் தனது அரசியல் வியூகங்களை காங்கிரசுக்கு வகுத்துக் கொடுக்க தொடங்கியிருப்பது, வெட்டவெளிச்சமாக தெரிகிறது!

அரசியலில் யார் தான் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றி இருக்கிறார்கள்? பிரசாந்த் கிஷோர் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?…

Views: - 180

0

1