விறுவிறுப்பாக நடக்கும் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் : சென்னையில் 2வது நாளாக தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 December 2020, 12:00 pmசென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2வது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினர்.
2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பொது செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக, தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக, திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன்பிறகு, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீசார் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில், 2வது நாளாக இன்று காலையிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தேர்தல் பாதுகாப்பு மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்தலின்போது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
0
0