தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு : டிச.,15 வரை திருத்தங்களை மேற்கொள்ள கால அவகாசம்..!!

16 November 2020, 2:02 pm
TN Election -updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்.

2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் நோக்கில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 3,01,12,370 பேரும், பெண் வாக்காளர்கள் 3,09,25,603 பேரும், மாற்று பாலினத்தவர்கள் 6,385 பேரும் இருக்கின்றனர். இன்று வெளியான வரைவு வாக்காளர்களின் பட்டியலில் வாக்காளர்கள் தங்களின் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

தமிழகத்தின் பெரிய சட்டப்பேரவை தொகுதியான சோழிங்க நல்லூரில் 6,55,366 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். சிறிய தொகுதியான கீழ்வேலூரில் 1,73,107 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். தமிழகத்தின் மொத்த வாக்காளர் பட்டியல் வெளியீட்டை தொடர்ந்து, மாவட்ட வாரியாக ஆட்சியர்களும் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து மாற்றங்களையும் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு, இன்று முதல் டிச. 15-ந்தேதி வரை 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. திருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்களை அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி அதிகாரியிடம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வழங்கலாம். இதற்காக, வரும் 21, 22-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

விண்ணப்பத்துடன் வயது, முகவரி ஆகியவற்றை உறுதி செய்யும் சான்றிதழ்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இவை அனைத்தையும் தொடர்ந்து ஜனவரி 5-ம் தேதியன்று இறுதி செய்யப்பட்டு ஜனவரி 15-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 19

0

0