தேர்தல் களத்தில் முந்தும் அதிமுக : ஜெ. பாணியில் எடப்பாடியார் அதிரடி!!

7 March 2021, 10:31 am
EPS - Jayalalitha - updatenews360
Quick Share

தமிழகத்தில் தேர்தல் நடக்க இன்னும் சரியாக முப்பது தினங்களே உள்ளது. தேர்தல் ஏப்ரல் முதல் வாரம் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்த பிறகு அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு விஷயத்தில் ஜரூராக இறங்கின. சாதாரண முறையில் பேச்சு, அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை, 2-வது சுற்று, 3-வது முறையாக சந்திப்பு என்று ரெக்கை கட்டிப் பறந்தன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியில் இருந்த பெரும்பாலான முக்கிய கட்சிகள் அதே அணியில் தொடர்வதால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிடும் என்றே கருதப்பட்டது. இன்னொருபக்கம் தேர்தலில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்களை பெற்று அவர்களுக்கு நேர்காணல் நடத்தி முடிப்பதும் ஒரு பெரும் பணியாக இருந்தது.

இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் கடந்த 10 நாட்களும் அதிமுக, திமுக தலைவர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. இரு அணியிலும் சில கட்சிகள் முரண்டு பிடித்தாலும் கடைசியில் தொகுதி உடன்பாடு ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்பது தெளிவாக தெரிகிறது. வருகிற சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொரு தேர்தல்.

ஏனென்றால் கடந்த தேர்தலின் போது உயிருடன் இருந்த ஆளுமைமிக்க தலைவர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் தற்போது இல்லை. அதிமுகவை கட்டுக்கோப்பாக நடத்திச் சென்று தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்கிற முனைப்பில் அதிமுகவின் இரட்டை தலைவர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர சுறுசுறுப்பு காட்டி வருகிறார்கள்.

அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டும் வேகம் அதிரடியாக உள்ளது. கடந்த 26-ந் தேதி, தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்த கவர்னரின் ஒப்புதலையும் பெற்றார்.

அதுவரை அதிமுக கூட்டணியில் சேர்வதற்கு பாமக வைத்திருந்த முக்கிய நிபந்தனையாக இட ஒதுக்கீடு பிரச்சனை இருந்தது.
இதுதொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க சம்மதம் தெரிவித்து அதிமுக ஒதுக்கிய 23 தொகுதிகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.
வன்னியர்களின் 40 ஆண்டு கனவு நனவாகி இருப்பதால் குறைவான தொகுதிகள் என்றால் கூட பரவாயில்லை என பாமக சம்மதம் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

pmk-aiadmk-alliance- updatenews360

குறிப்பாக, திமுக இது நடக்கும் என்றே நினைக்கவில்லை. எப்படியும் பாமக 30 தொகுதிகளுக்கு குறையாமல் அதிமுகவிடம் கேட்கும். இரு கட்சிகளுக்கும் முட்டல், மோதல் ஏற்படும் என்றே நம்பியது.
ஆனால் அது போன்றதொரு சூழல் சிறிதும் ஏற்படாமல் மிகவும் சாமர்த்தியமாக அரசியலில் காய்களை நகர்த்தினார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதுமட்டுமின்றி 28-ம் தேதி இரவு சென்னை வந்த அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து பாஜகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை சுமுகமாக முடித்தனர். பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளில் பல அதிமுக, பாமக கேட்கும் தொகுதிகளாகவும் இருந்ததால், பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அறிவிப்பதில் மட்டும் தாமதம் ஏற்பட்டது.

அடுத்தாக, முதல்வர் காட்டிய அதிரடி என, அதிமுகவின் சார்பில் போட்டியிட விரும்பி கட்சி தலைமையிடம் விருப்ப மனுக்கள் கொடுத்த 8,200 பேரிடமும் ஒரே நாளில், அதாவது கடந்த 4-ம் தேதி நேர்காணல் நடத்தி முடித்ததை சொல்லலாம். இந்திய தேர்தல் வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேரிடம் நேர்காணல் நடத்தியிருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். அதையும் கன கச்சிதமாக செய்து முடித்தார், முதல்வர்.

மார்ச் 5-ம் தேதி, முதல்வரின் சுறு சுறுப்பு இன்னும் படுவேகமாக இருந்தது. பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் இருந்த சிக்கலை நீடிக்கவிடாமல் அன்று முடிவுக்கு கொண்டு வந்தார். அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டு நள்ளிரவில் பாஜக கையெழுத்தும் போட்டது.

அதற்கு முன்புவரை, டெல்லி பாஜக மேலிடம் சொல்வதை முதல்வரும், துணை முதல்வரும் அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவார்கள். இதனால் அதிமுகவில் குழப்பம் ஏற்படும்
என்று திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கணக்கு போட்டு இருந்தன.

பாஜகவுக்கு அதிமுக எப்படியும் 40 தொகுதிகள் வரை ஒதுக்கும் என்றும் திமுக கருதியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 20 தொகுதிகளுக்கு பாஜகவை ஒப்புக் கொள்ள வைத்தது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விவேகம் என்று அரசியல் விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்படுகிறது.

அதே மார்ச் 5-ம் தேதி இன்னொரு ஆச்சரியமும் தமிழக அரசியல் ஆர்வலர்களுக்கு காத்திருந்தது. அன்று அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போடி தொகுதியிலும், அமைச்சர் டி.ஜெயக்குமார் ராயபுரத்திலும், அமைச்சர் சிவி. சண்முகம் விழுப்புரத்திலும், அமைச்சர் எஸ். பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டத்திலும், அதிமுகவின் நட்சத்திர எம்எல்ஏவான தேன்மொழி நிலக்கோட்டையிலும் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் தங்கள் தலைவர்கள் போட்டியிடும் தொகுதியை அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், அதிமுக எல்லா கட்சிகளை முந்திக்கொண்டு முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதுவும் வியப்பாக பார்க்கப்படுகிறது. இப்படி அதிரடி மேல் அதிரடி காட்டி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அத்தனை கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீட்டை முடித்துக்கொண்டு, அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

EPS - Updatenews360

தேர்தலின்போது மட்டுமே, முதல்வர் சுறு சுறுப்பு காட்டுகிறார் என்று நினைத்தால் அதுவும் தவறு என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதற்காக அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் எடுத்த தைரியம் மிக்கதொரு நிலைப்பாட்டையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இது பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “சசிகலாவை, அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று டெல்லியில் பாஜக அழுத்தம் கொடுத்து வருவதாக ஒரு செய்தி உலா வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 18-ம் தேதி டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிரதமர் மோடியையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்த பின் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடம் இல்லை. டிடிவி தினகரனின் அமமுகவையும் இணைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

அன்று அவர் காட்டிய உறுதிதான், கடந்த 3-ந்தேதி சசிகலா அரசியலை விட்டு, ஒதுங்குவதற்கு காரணமாகவும் அமைந்தது என்று கூட சொல்லலாம். அந்தளவிற்கு எடப்பாடி பழனிசாமி கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்று சசிகலாவே வியந்துபோய் சொன்னதாக கூறுகிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூட அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை என்று வெளிப்படையாகவே பாராட்டினார்.

இப்படி எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் ஒரு தலைவரிடம், அதுவும் தேர்தல் நேரத்தில் பாராட்டு பெறுவதென்பது சாதாரண விஷயமல்ல.

அதுமட்டுமல்ல, பாஜக தமிழகத்தில் போட்டியிடுவதற்கு
60 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டபோதும் அதற்கு சம்மதித்து விடாமல், மூன்றில் ஒரு பங்கு தொகுதியைத்தான் ஒதுக்கி இருக்கிறார். இதுவும் யாருமே நினைத்துப் பார்த்திராத ஒன்று. தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுகவை, பாஜகதான் ஆட்டிப்படைக்கிறது என்று திமுக தொடர்ந்து கூறி வந்தது. அது உண்மையல்ல என்பதை முதல்வர் நிரூபித்து இருக்கிறார்.

அதேபோல், அவர் கூட்டணி கட்சிகளை நடத்திய பாங்கும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பாராட்டும் விதமாக இருந்தது.

மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தனது கூட்டணியில் இருந்தபோதிலும், அக் கட்சிக்கு முதலிடம் கொடுக்காமல் தனது கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான பாமகவைத்தான் முதலில் அதிமுக அழைத்துப் பேசியது. அதன் பிறகே பாஜக, தேமுதிக என கட்சிகளை வரிசைப்படுத்தி அதன் தலைவர்களை சந்தித்தது என எல்லாவற்றையும் அவர் முறைப்படியே நடத்தினார். தேமுதிக அவசரப் படுத்திய போதிலும் அவர் நிதானமும், பொறுமையும் காட்டினார்.

இவையெல்லாமே, மிகவும் தைரியமிக்க, அசாத்திய நடவடிக்கைகள். ஜெயலலிதாவின் அரசியல் சாணக்கியம் அப்படியே முதல்வரிடமும் இருப்பதைக் காண முடிகிறது.
தேர்தலில், கூட்டணிக் கட்சிகளை முடிவு செய்வது, தொகுதிகளை ஒதுக்குவது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, மற்ற எல்லோருக்கும் முன்பாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவது போன்றவை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் மட்டுமே காணக்கூடிய அம்சங்களாக இருந்தன. அதை தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் பார்க்க முடிகிறது” என சற்று விரிவாகவே அந்த அரசியல் விமர்சகர்கள் ஜெயலலிதாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒப்பீடு செய்தனர்.

முதல்வரின் இதுபோன்ற அணுகுமுறைகள் தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணிக்கு நிச்சய வெற்றியை பெற்றுத் தருவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாக அமையும் என்று சொன்னால் அது மிகையல்ல.

Views: - 43

0

0