சசிகலாவின் புளுகு மூட்டைக்கு முற்றுப்புள்ளி: உண்மையை போட்டு உடைத்த பாஜக மூத்த தலைவர்

5 July 2021, 9:53 pm
Quick Share

1954-ல் பிறந்த சசிகலா, 40 வருடங்களுக்கு முன்பு தமிழக அரசில் மக்கள் தொடர்பு துறை அதிகாரியாகப் பணியாற்றிய ம.நடராஜன் என்பவரின் மனைவி. தற்போது அமமுகவை நடத்திவரும் டிடிவி தினகரனின் சித்தியும் ஆவார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அவருக்கு உதவியாளராக சசிகலா 33 வருடங்கள் வேலை பார்த்தவர் என்பது பலரும் அறிந்த விஷயம்.சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட பெங்களூரு சிறைவாசம் முடிந்து, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை திரும்பிய சசிகலா தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார்.

தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனாலும் கவுரமான அளவிற்கு வெற்றியை ஈட்டியது. இந்த நிலையில் திடீர் ஞானோதயம் பெற்றவராக சசிகலா, அதிமுகவின் தலைமை சரியில்லை, எனக்கு கீழாக அதிமுக செயல்பட்டிருந்தால், திமுகவை எளிதில் வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றி இருக்கும் என்றெல்லாம் கூறி மீண்டும் அரசியல் பிரவேசம் செய்ய போவதாகவும் அறிவித்தார். ஆனால் அவரை ஒருவரும் சீண்டவில்லை. அவருடைய அக்காள் மகன் தினகரன் நடத்திவரும் அமமுகவும், தேர்தலில் போணியாகவில்லை. அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஒவ்வொருவராக கழன்று அதிமுகவிலும், திமுகவிலும் இணைந்து வருகின்றனர். அக்கட்சியின் கூடாரம் விரைவில் காலியாகிவிடும் என்பதால் சசிகலாவின் கோபம் அதிமுகவை நோக்கி திரும்பியுள்ளது.

அதனால் எப்படியும் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்று அவர் தினமும் 10, 15 பேருடன் செல்போனில் பேசி அதை பதிவுசெய்து ஆடியோவாக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த உரையாடல்கள் தொலைக் காட்சி சேனல்களில் தொகுப்பாளரும், நேயர்களும் உரையாடுவதுபோல் இருக்கிறது. சசிகலா என்ன பேசினாலும் அதை எதிர்முனையில் இருப்பவர், கேட்டுத்தான் ஆகவேண்டும். எப்படியோ சசிகலாவுக்கு தினமும் நன்றாக பொழுதுபோவது மட்டும் தெரிகிறது.இந்த ஆடியோக்களில் அதிமுக தலைமைக்கும், தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதுபோல் காட்டிக் கொள்ளும் சசிகலா, கடந்த வாரம் மிகப் பெரிய நகைச்சுவை கதை ஒன்றையும் தன் நேயர்களில் சிலருக்கு சொன்னார்.

அது, 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி அரசியல் தலைவர்கள் பலர் பேசியதை அப்படியே நினைவுபடுத்துவதுபோல இருந்தது. சசிகலா கூறும்போது, “நான் எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறி இருக்கிறேன். நான் இளம் வயதிலேயே மிகுந்த அரசியல் முதிர்ச்சியுடன் செயல்பட்டதால் எனது ஆலோசனையை எம்ஜிஆர் கேட்டு அதன்படி நடப்பார். அது மட்டுமின்றி எம்ஜிஆர் பேசும்போது எப்படி பேசவேண்டும், எப்படி பேசினால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் ஆலோசனை கூறி இருக்கிறேன். இந்த விஷயமெல்லாம் நிறைய பேருக்கு தெரியாது” என்று மீட்டர் கணக்கில் அளந்து விட்டார்.

எம்ஜிஆருக்கு, தான் ஆலோசனை சொன்னதாக சசிகலா ரீல் விட்டதைக் கேட்ட அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கொந்தளித்தனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தக்க பதிலடியும் கொடுத்தார். “எம்ஜிஆருக்கே ஆலோசனை சொல்லியதாக சசிகலா கூறியது காதில் பூ சுற்றும் விஷயம். எம்ஜிஆர் அறிவும், ஆற்றலும் , ஆளுமைத் திறமையும், புத்திக்கூர்மையும் உள்ளவர். அவருக்கு, இவர் ஆலோசனை சொல்லியதாக சொன்னால் இதை விட ஒரு நகைச்சுவை இந்த உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. கொஞ்சம் விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை சொன்னதாக கூட சொல்வார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உயிருடன் இல்லை என்பதால் சசிகலா கதை விடுகிறார்” என்று கிண்டலடித்தார்.

இந்த நிலையில், மறைந்த பிரபல எழுத்தாளர் வலம்புரிஜான் தனது புத்தகம் ஒன்றில், “சசிகலாவை ராமாபுரம் தோட்டத்திலும், தான் பார்த்துள்ளதாகவும், எம்ஜிஆருடன் அவர் இருந்ததாகவும் . எம்ஜிஆரிடம் சசிகலா போன்றோரை தாங்கள் அருகே வைத்துக் கொள்ளவேண்டாம் என தான் கூறியதாகவும், அதற்கு எம்ஜிஆர் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொன்னதாகவும்” ஒரு தகவல் சில ஊடகங்களில் வெளியானது.இதற்கு, எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுக துணை பொதுச் செயலாளராகவும், அவரது அமைச்சரவையில் 1977 முதல் 1987 முடிய தொடர்ந்து 10 வருடங்கள் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த 93 வயது டாக்டர் ஹெச்.வி.ஹண்டே முற்றிலும் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

தற்போது பாஜகவில் உள்ள அவர் இதுபற்றி கூறும்போது, “எம்ஜிஆரை பொறுத்தவரை அவருக்கு யாரும் ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு பேச கற்றுக்கொடுக்கத் தேவையும் இல்லை. அவர் மிகுந்த அனுபவசாலி. 1982-ம் ஆண்டு கடலூர் மகளிர் மாநாட்டில் ஜெயலலிதா பேசும் போதுதான் நடராஜன் மனைவி சசிகலாவிற்கு அறிமுகம் ஏற்பட்டது. ஜெயலலிதாவுடன் சசிகலாவும் நடராஜனும்தான் நெருக்கமாக இருந்தார்களே தவிர எம்ஜிஆரிடம் ஒருபோதும் அவர்கள் நெருக்கமாக இருந்தது, கிடையாது. எனக்கு தெரிந்தவரை சசிகலா எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னதே இல்லை.அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை.

1982 வரைக்கும் ஜெயலலிதாவே எம்ஜிஆர் பக்கத்தில் இல்லை. பிறகு எப்படி சசிகலா பேசியிருப்பார்?” என்று கேள்வி எழுப்பினார்.கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு என்பார்கள். மூத்த தலைவர் ஒருவர் இன்றும் பசுமையான நினைவுகளோடு இருப்பதால், சசிகலா அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டைகளுக்கு சரியான ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.அதுவும் சசிகலா கதை சொன்ன 5 நாட்களிலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது!

Views: - 218

1

0