காங்கிரசில் தீராத குழப்பம் : 2024-ல் யாரை ஆதரிப்பது? திமுக, சிவசேனா தவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan3 October 2021, 9:01 pm
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து வந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு?
தற்போது, அது உச்சத்தை எட்டியிருக்கிறது. தேசியளவில் பாஜகவுக்கு எதிராக சவாலை ஏற்படுத்தக்கூடிய கட்சி எது என்ற கேள்வி அரசியல் கட்சிகளை கடந்து பொது மக்கள் மத்தியிலும் எழ ஆரம்பித்து விட்டது. இது காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கையாளத் தவறிய சோனியா, ராகுல்
குறிப்பாக கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்திலும், இந்த வருடம் பஞ்சாப் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலை சோனியாவும் ராகுலும் சரியான முறையில் கையாளவில்லை என்ற முணுமுணுப்பு சத்தம் தற்போது கட்சியின் மூத்த தலைவர்களிடையே கேட்கத் தொடங்கிவிட்டது.
அடுத்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் இதேபோல் முட்டல்,மோதல் நடக்கலாம் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத்,கபில் சிபல் போன்ற 23 பேர் மீண்டும் கட்சியின் தலைமையிடம் வெளிப்படையாகவே கேள்விகளை வைக்கத் தொடங்கிவிட்டனர்.
தலைமை மேல் ப.சிதம்பரம் அதிருப்தி
சோனியாவின் வலது கரமான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கூட கட்சித் தலைமை நடந்துகொள்ளும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்திருப்பது காங்கிரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, கட்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுத்தும் கூட அமரீந்தர் சிங் மீதான வெறுப்பில் அவர் தனது அதிகாரத்தை எல்லை மீறி பயன்படுத்தி விட்டார்.
சித்துவின் சிறுபிள்ளைத்தனம்
அதுமட்டுமின்றி சிறுபிள்ளைத்தனமாக தானும் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி காங்கிரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.
இப்படி பஞ்சாப் காங்கிரசில் நடந்த கேலிக்கூத்து, பொதுமக்கள் எள்ளி நகையாடும் அளவிற்கு மாறிப்போனது. காங்கிரஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கிவிட்டது.
கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
கடந்த 3 மாதங்களாக காங்கிரசில் நடக்கும் நிகழ்வுகள் அக்கட்சிக்கு மக்களிடம் தேசிய அளவில் சுமார் 1.2 சதவீதம் ஆதரவு குறைந்து இருப்பதாக மிக அண்மையில் எடுக்கப்பட்ட
ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளான திமுக, சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளுக்கும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
காங்கிரஸ் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை ஆதரிப்பதால் தேசிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதை
இந்த கட்சிகள் நன்றாகவே உணர்ந்துள்ளன.
காங்., மூத்த தலைவர்கள் பாஜகவில் ஐக்கியம்?
காங்கிரஸ் தலைமை மீது மூத்த தலைவர்கள் குற்றம் சுமத்துவதை சிவசேனா கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், “காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முழுநேர தலைவர் தேவை. தலையில்லாத உடலால் என்ன பயன்? காங்கிரஸ் நோய் வாய்ப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த சிகிச்சை சரியானதா, இல்லையா என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
ராகுல் காந்தி காங்கிரஸ் மாளிகையில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சரிசெய்ய முயற்சி செய்கிறார். ஆனால் சில பழைய நிலப்பிரபுகள் புதியவர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கின்றனர். அவர்கள் மாளிகையில் பல பகுதிகளை உரிமை கோர தொடங்கி உள்ளனர். காங்கிரசின் பழைய மூத்த தலைவர்கள் சிலர் பா.ஜனதாவுடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு சொந்த கட்சியை வீழ்த்த விரும்புகின்றனர் என்பது இப்போது உறுதியாகி உள்ளது”என்று குறிப்பிட்டு இருக்கிறது.
சிவசேனா பகீரங்க குற்றச்சாட்டு
தற்போது மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் பலவீனம் ஆகிவிட்டால் மராட்டியத்தில் சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் பாஜகவுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்துவது கடினமான செயலாகி விடும்.
இதனால்தான் குலாம் நபி ஆசாத்தும், கபில் சிபலும் பாஜகவுடன் கை கோர்த்து விட்டனர் என்று சிவசேனா குற்றம் சாட்டுகிறது.
பாஜகவில் இருந்து அழைப்பு
இந்த நிலையில் மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே, “காங்கிரஸ் கட்சிக்காக குலாம் நபி ஆசாத்தும், கபில்சிபலும் அதிகமாக உழைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதையை அக்கட்சி தரவில்லை. ராகுல் காந்தி மீது கடுமையான குற்றச்சாட்டை அவர்கள் வைத்துள்ளார். எனவே குலாம் நபி ஆசாத் மற்றும் கபில்சிபல் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்து உள்ளார். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ராம்தாஸ் அத்வாலே, இப்படி கூறியதால்தான் சிவசேனா எரிச்சல் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவைப் பொறுத்தவரை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. காங்கிரசின் மற்ற கூட்டணி கட்சிகள் கூட இப்படி கூறத் தயங்கிய நிலையில் ராகுலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஆதரவை முழுமையாக வழங்கினார்.
திமுகவின் நிலைப்பாடு
ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளருக்கு ராகுல்காந்தி நிறுத்தப்படாத நிலையில், திமுக யாரை ஆதரிக்கும் என்கிற கேள்வி பெரிதாக எழும். இது திமுகவுக்கு தர்மசங்கடமான நிலைதான்.
ஏனென்றால் கெஜ்ரிவாலும், மம்தா பானர்ஜியும் இப்போதே தங்களது கட்சிகளை, நாடு முழுவதும் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக தயார்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் அல்ல, அதற்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார் என்பதை வெளிப்படையாக அறிவிப்பதுபோல் செயல்பட்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் நிலை
லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்தை பொறுத்தவரை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன் நிறுத்துமா? என்பது சந்தேகம்தான். தனது நெருங்கிய நண்பரான முலாயம் சிங்கின் சமாஜ்வாடியை அவர் ஆதரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அது தேர்தல் வெற்றிக்கு உதவுமா? என்பது மிகப்பெரிய கேள்வி.
காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 50% திருப்தியையும், 50% பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் காங்கிரஸ் பலவீனம் அடைந்தால் அது கர்நாடகாவில் தங்களுக்கு சாதகமாக அமையும் என்று அக்கட்சி கருதுகிறது. அதேநேரம் வாக்குகள் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு கிடைக்கும் வாய்ப்பு உருவாகிவிடும் என்ற அச்சமும் மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு உள்ளது.
இதுபோன்ற இருதலைக் கொள்ளி எறும்பு நிலையில் ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் உள்ளன. இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒருவித சிந்தனையில் இருப்பதால்தான் மத்தியில் பாஜகவை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகள் நிலைகுலைந்து போயுள்ளன.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
இதுபற்றி டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “காங்கிரசில் நடக்கும் வெளிப்படையான சண்டைகள் அந்தக் கட்சிக்கு மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தலைவலியை கொடுத்துள்ளது. அதுவும் மாநில அளவில் நடந்த வந்த உட்கட்சி பூசல்கள்
தற்போது, தலைமைக்கு எதிராக திரும்பியுள்ளது. குலாம் நபி ஆசாத், கபில்சிபல் போன்றவர்கள் கடந்த ஆண்டே கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் பல்வேறு குழப்பங்கள் காங்கிரசில் ஏற்படுகிறது என்ற எதார்த்தநிலை பொதுமக்களிடமும் உருவாகிவிட்டது.
காங்கிரஸ் நேரடியாக ஆட்சி செய்வது ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்கள்தான். ஆனால் அந்த மாநில காங்கிரசில் நடக்கும் உள்ளடி வேலைகள், கலாட்டாக்கள் சாமானியர்களை முகம் சுழிக்க வைப்பதாக உள்ளது. இதனால் பாஜகவை 2024 தேர்தலிலும் எதிர்க்கட்சிகளால் வீழ்த்த முடியாது என்கிற எண்ணம் மக்கள் மனதில் பதிய ஆரம்பித்து விட்டது.
இப்படி உட்கட்சிப் பூசலால் காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருவது சிவசேனா, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகளுக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, மராட்டியம், பீகார் மாநிலங்களில் ஆம் ஆத்மியின் கெஜ்ரிவாலையோ அல்லது திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜியையோ எதிர்க் கட்சிகள் பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது கடினமான ஒன்று. அப்படி அவர்களை முன்னிறுத்தினால் இந்த மாநிலங்களில் காங்கிரசின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி விடும். இதுபோன்ற சூழல் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும்.
இதனால்தான் திமுக, சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிகள் தற்போது திகைப்பில் உள்ளன. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை காங்கிரஸ் சரி செய்தால் மட்டுமே 2024 தேர்தலுக்கு அக்கட்சியால் தயாராக முடியும். இல்லையென்றால் கடந்த தேர்தலையும் விட மிகப் பெரிய தோல்வி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று அவர்கள் குறிப்பிட்டனர். காங்கிரசின் நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது!
0
0