அமலாக்கத்துறை வைத்த செக்… அமைச்சர் பொன்முடி மகனுக்கு புதிய சிக்கல் : உயர்நீதிமன்றம் அதிரடி!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2023, 4:58 pm
Sigamani - Updatenews360
Quick Share

அமலாக்கத்துறை வைத்த செக்… அமைச்சர் பொன்முடி மகனுக்கு புதிய சிக்கல் : உயர்நீதிமன்றம் அதிரடி!!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான கவுதம சிகாமணி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நேரில் ஆஜராக கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது , செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு சுமார் ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. கவுதம சிகாமணி உட்பட 6 பேருக்கு எதிராக 90 பக்க குற்றப்பத்திரிகையை சமீபத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நவ. 24-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். இதன்பின், அவரிகளிடம் விசாரணையும் நடைபெற்று இருந்த நிலையில், தற்போது ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 297

0

0