பொறியியல் படிப்பின் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடக்கம்

Author: Babu
8 October 2020, 12:56 pm
counciling- updatenews360
Quick Share

சென்னை : பொறியியல் படிப்பில் சேருவதற்கான பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்களுக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 7,435 சிறப்புப் பிரிவு இடங்களில் 497 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனால், எஞ்சிய 6,938 இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று முதல் 27ம் தேதி வரை நான்கு கட்டங்களாக பொதுக்கலந்தாய்வு நடைபெறுகிறது. 16ம் தேதி வரை நடக்கும் முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 12,263 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கும் 2வது கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 22,903 பேருக்கும், 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கும் 3-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 35,122 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, 20ம் தேதி முதல் 28ம் தேதி வரையில் இறுதி கட்ட கலந்தாய்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்கும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ.5,000மும், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.1,000மும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், தங்களுக்கான விருப்பக் கல்லூரிகள், பாடப்பிரிவுகளை அதிகளவில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு www.tneaonline.org இணையதளத்தை அணுகலாம்.

Views: - 41

0

0