பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான மாதிரி ஆன்லைன் தேர்வு தேதி வெளியீடு..!

14 September 2020, 7:19 pm
anna university updatenews360
Quick Share

சென்னை : பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான மாதிரி ஆன்லைன் தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், மாணவர்களின் கல்வியில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, ஆன்லைன் வகுப்புகளை தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு தேர்வு நடத்தப்படும் என்றும், பிற ஆண்டு மாணவர்கள் மற்றும் அரியருக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதேவேளையில், கல்லூரி இறுதி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயமாக நடத்தப்படவேண்டும் என யூஜிசி அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வரும் 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஆன்லைனில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. கேமரா, மைக்ரோ போன் வசதியுடைய ஸ்மார்ட் போன், கணினி, லேப்டாப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு முன்னதாக, தேர்வுக்கு முன் மாதிரி தேர்வு நடத்தப்படும் எனவும் அண்ணா பல்கலை., கூறியிருந்தது.

இந்த நிலையில், பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில், இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் 1 மணி நேரம் நடக்கும் என்றும், தேர்வில் கேட்பக்கபடும் 40 கேள்விகளில் 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதிலளித்தால் போதும் என தெரிவித்துள்ளது.

மேலும், ஆன்லைன் தேர்வுக்கு தயாராகும் விதமாக, மாணவர்களுக்கு மாதிரி ஆன்லைன் தேர்வு 19, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.