ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… அமலுக்கு வந்தது தேர்தல் விதிகள் : அரசியல் கட்சி தலைவர்களின் படம் அகற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2023, 9:25 pm
Photos Removed - Updatenews360
Quick Share

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு கூறி இருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,”ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து புதிய திட்டங்களை செயல்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

தேர்தல் தொடர்பாக தேர்தல் பார்வையாளர் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற இருக்கும் நிலையில் பறக்கும் படையினர் துணை ராணுவத்தினர் உள்ளிட்டோரை வரவேற்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சுமார் 238 வாக்குச்சாவடிகள் இருக்கிறது.

இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் மொத்தம் இருக்கும் நிலையில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும் 23 மூன்றாம் பாலினத்தவரும் இருக்கின்றனர்.

தேர்தலுக்காக 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஈரோடு நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தேர்தல் நடக்கும்போது கொரோனா பாதிப்பு இருந்தால் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் புகைப்படம் ஆகியவற்றை மறைக்கும் பணி தொடங்கி இருக்கிறது.
அந்த தொகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகம் அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அரசு கட்டிடங்களில் முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன.

மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் சோதனைகளும் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் முறையான ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

கல்வெட்டுகளில் உள்ள தலைவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டன; வாக்குப்பதிவு மற்றும் விபாட் எந்திரங்கள் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

Views: - 353

0

0