பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கோஷ்டி பூசல் அம்பலம்… விஜயதாரணி குறித்த கேள்விக்கு கிண்டலாக பதில் சொன்ன EVKS இளங்கோவன்..!!

Author: Babu Lakshmanan
10 March 2023, 4:35 pm
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியில் நிலவி வரும் கோஷ்டி பூசல் அம்பலமானது.

கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

இந்நிலையில், இன்று (பிப்.10) சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது :- மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு வழங்கி மக்கள் வாக்களித்துள்ளனர். முக்கியமாக முதலமைச்சர் ஸ்டாலினின் 20 மாதகால ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கிடைத்த அங்கீகாரமாகத்தான் பார்க்கிறேன். இதற்காக உழைத்த திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் நண்பர்கள் அனைவரும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், எனக் கூறினார்.

பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக இருக்கும் செல்வபெருந்தகை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி மற்றும் கட்சியின் தூய தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆகையால் என்னைப் பொறுத்தவரையில் அனைவரும் கலந்துகொண்டனர், என்று பதிலளித்தார்.

அப்போது, கொறடா தரப்பில் இருந்து பதவியேற்புக்கு அழைப்பிதழ் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, யார் கொறடா? யாரச் சொல்றீங்க என்று இளங்கோவன் கேட்க அதற்கு செய்தியாளர் விஜயதாரணி என்று சொல்கிறார். உடனே, “ஓ…விஜய தாரணியா? ஆமாம், அவர்களுக்கு தனியா ஒரு அழைப்பிதழ் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் தவறு செய்துவிட்டேன். அந்த அம்மையாரை நேரில் சந்தித்து, அதற்கான வருத்தத்தையும் கூறிவிட்டு, ஒரு வேளை மீண்டும் ஒரு பதவியேற்பு விழா நடந்தால், முதன்மையாக அந்த அம்மையாரை தனியாக சந்தித்து அழைப்பிதழ் வைத்து கூப்பிடுகிறேன்” என்று கிண்டலாக பதிலளித்தார்.

Views: - 411

0

0