நெருக்கடியில் சிக்கிய 6 அமைச்சர்கள்… ? போற போக்கில் கோர்த்து விட்டாரா சுப்புலட்சுமி… பரிசீலனை செய்யும் திமுக தலைமை!!

Author: Babu Lakshmanan
21 September 2022, 4:57 pm
Quick Share

திட்டமிட்ட சதி

திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகுவதாக அறிவித்து இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், திமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் திடீரென்று இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் குறித்து ஊடகங்களில் விரிவாக விவாதிக்கவும் படுகிறது.

திமுக துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான தனது மனைவியை கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய திமுக நிர்வாகிகள் சிலர், திட்டம் போட்டு தோற்கடித்து விட்டனர் என்ற கோபத்தில் சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் தொடர்ந்து அவர்கள் குறித்து முகநூல் பதிவுகளில் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், என்பது நினைவுகூரத்தக்கது.

தோல்வியடைந்த சில நாட்களிலேயே தான் கட்சி நிர்வாகிகளால் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. அதன்பின்னர் பெரும்பாலும் திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அவர் புறக்கணித்தும் வந்துள்ளார்.

கணவர் பாய்ச்சல்

இதற்கிடையே, ஓராண்டாகியும் கூட சுப்புலட்சுமியின் புகார் மீது திமுக தலைமை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய கணவர் ஜெகதீசன், கடந்த ஒரு மாதமாக தனது முகநூல் பதிவுகளில், திமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கட்டமாக விமர்சித்து எழுதத் தொடங்கினார். ஒரு வாரத்துக்கு முன்பு இது உச்சத்தை எட்டியது.

திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத ஒரு துறையை காட்டினால் ஒரு கோடி ரூபாய் பரிசு தருகிறேன் என்றும் அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமண விழாவை ஜெ.வின் வளர்ப்பு மகன் சுதாகரனின் ஆடம்பர திருமணம் போல் நடத்தி உள்ளனர். மொய் வசூலை பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் எண்ணினார்கள். ஸ்டாலின் பிரம்மாண்டம் எனப் புகழும் இந்த திருமணம்தான் திராவிட மாடல் ஆட்சியா?… என்று கேள்வி எழுப்பியும் இருந்தார். அதேபோல் திமுக அரசின் மின் கடும் கட்டண உயர்வையும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை ஸ்டாலின் புகழ்ந்து பேசியதையும் வன்மையாக கண்டித்தார்.

விலகல்

இந்த நிலையில்தான், சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் “2009-ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்துவிட்டேன். தலைவரின் மறைவுக்குப் பின், அவரின் விருப்பத்தின்படி ஸ்டாலினை முதலமைச்சராக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

2021 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசு பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அன்று பதவியில் இருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக, எனது விலகல் கடிதத்தை, ஸ்டாலினுக்கு அனுப்பி விட்டேன்,” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

அவருடைய இந்தக் கடிதம், சில உண்மைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

சூசகமான அறிக்கை

அதாவது நாடாளுமன்ற எம்பி பதவி காலம் முடிந்த பிறகு இனி தேர்தலை நான் சந்திக்க விரும்பவில்லை என்பதை 2014-ம் ஆண்டே திமுக தலைவர் கருணாநிதியிடம் கூறினேன். அவருடைய மறைவுக்கு பின்பு ஸ்டாலினை முதலமைச்சராகும் நோக்கத்துடன் கட்சிப் பணிகளை மட்டுமே செய்து வந்தேன் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் என கூறுவதன் மூலம், உண்மையிலேயே திமுக தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக நான் கடுமையாக உழைத்திருக்கிறேன், ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக அது கண்டு கொள்ளப்படவில்லை என அவர் தனது ஆதங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் கருதத் தோன்றுகிறது.

அதேநேரம் கடந்த மாதம் 29-ம் தேதியே, எனது ராஜினாமா குறித்து ஸ்டாலினுக்கு தெரிவித்துவிட்டேன் என்று சுப்புலட்சுமி குறிப்பிடுவதன் மூலம் மூன்று வாரங்களாக இதை திமுக தலைமை கிடப்பில் போட்டுவிட்டது. எனது புகாரை கண்டுகொள்ளவே இல்லை. என்பதை அவர் சூசகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று புரிந்துகொள்ளவும் முடிகிறது.

ஆனால் கட்சியைவிட்டு சுப்புலட்சுமியே விலகினால் நல்லது, அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் உள்கட்சி விவகாரத்தால்தான் இந்த நடவடிக்கையை எடுத்தார்கள் என்று கட்சிக்குதான் அவப்பெயர் ஏற்படும் என்று திமுக தலைமை கருதி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கூட விட்டிருக்கலாம்.

பாஜகவில் இணைவா..?

இந்த நிலையில் சுப்புலட்சுமி பாஜகவில் இணைவார் என்ற ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை மறுத்துள்ள திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறும்போது “சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகினாலும் திமுக உணர்வுடன்தான் இருக்கிறார். அவர் பாஜகவில் இணைகிறேன் என்று எங்கும் சொல்லவில்லை. அவருடைய விலகலுக்கு புதியதாக நாங்கள் எந்த காரணமும் கூற முடியாது. ஆனாலும் அவருடைய கணவர் ஜெகதீசன் சமூக வலைத்தளங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது பதிவுகளை நீக்கக்கோரி எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறோம். அவர் திமுகவில் உறுப்பினர் இல்லை. நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்?” என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

அமைச்சர்களுக்கு செக்

தனது விலகல் கடிதம் மூலம் தற்போது திமுக அமைச்சரவையில் உள்ள
மூத்த அமைச்சர்களான எ.வ. வேலு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ரகுபதி, முத்துசாமி, ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய 6 பேருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஒரு செக் வைத்திருக்கிறார்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்த அமைச்சர்கள் அத்தனை பேருக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு. இவர்கள் அனைவருமே சுப்புலட்சுமி ஜெகதீசன் போல முன்பு அதிமுக அமைச்சரவையிலும் இடம் பிடித்து இருந்தவர்கள். அதுமட்டுமல்லாமல் 71 வயதை கடந்தவர்கள்.

75 வயதாகும் சுப்புலட்சுமியே தனது 67வது வயதில் இனி கட்சிக்காக முழுநேர பணியில் ஈடுபட விரும்புகிறேன் என்று கருணாநிதியிடம் தெரிவித்து இருக்கிறார் என்கிறபோது, இது மூத்த அமைச்சர்களான வேலு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ரகுபதி முத்துசாமி, ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் பொருந்தும்தானே? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

அதனால் 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது 75 வயதை கடந்து விடும் இந்த 6 அமைச்சர்களையும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் கட்சி பணியாற்றுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பி வைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை சுப்புலட்சுமி ஜெகதீசன் வைத்துள்ளார் என்றே கருதத் தோன்றுகிறது.

இதில் நியாயமும் இருக்கிறது. ஏனென்றால் 75 வயதை கடந்து விடும்போது, நேரடி தேர்தல் பணிகளில் இவர்களால் களமிறங்கி சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியாது. அதற்கு உதாரணமாக தற்போது நீர்வளத்துறை அமைச்சராக உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை சொல்லலாம். 84 வயதாகும் அவரால் முன்பு போல தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. இதனால்தான் கடந்த தேர்தலில் காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளரிடம் அவர் தட்டுத் தடுமாறி சுமார் 700 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் சூழலும் உருவானது.

இதனால் சுப்புலட்சுமியின் யோசனையும் நல்லதுதான். இப்போதே அதை செய்துவிடலாம் என்று நினைத்து இந்த 6 மூத்த அமைச்சர்களையும் கட்சிப் பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அனுப்பவும் செய்யலாம். இதனால் அதிமுகவில் இருந்து வந்த இந்த அமைச்சர்கள் 6 பேரும் எந்த நேரமும் ‘திக்திக்’ மன நிலையில்தான் இருக்கிறார்கள் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவி அமைச்சர் பதவி பெற்றவர்களுக்கும் மட்டுமின்றி திமுகவிலேயே உள்ள மூத்து நிர்வாகிகளுக்கு கூட பொருந்தும் ஒரு யோசனையாக சுப்புலட்சுமியின் கருத்து உள்ளது. ஆனால் அரசியல் நெளிவு சுளிவுகளில் கரைகண்ட அமைச்சர்கள் இதை மிக எளிதாக சமாளித்து விடும் வாய்ப்பும் உள்ளது.

கனிமொழி கோபம்

அதேநேரம், சுப்புலட்சுமி வகித்து வந்த துணைச் செயலாளர் பதவியை கனிமொழிக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை திமுகவில் வலுப்பெற்றுள்ளது. ஆனால் இந்தப் பதவியை கனிமொழி ஏற்க மறுத்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கான காரணம் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். சில மாதங்களுக்கு முன்பு, மாநிலம் முழுவதும் உதயநிதி தலைமையிலான இளைஞர் அணியில் இளம் பெண்களும் அதிகளவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதனால் கனிமொழி அப்செட் ஆனது உண்மை. அப்படியென்றால் திமுகவில் எதற்காக மகளிரணி? என்று அவர் கோபமாக கேள்வி எழுப்பியதாகவும் கூறுவார்கள்.

Kanimozhi Minister - Updatenews360

தவிர துணை பொதுச் செயலாளர் என்பது திமுகவில் ஒரு அலங்கார பதவிதான் என்பதும் கனிமொழிக்கு நன்றாகவே தெரியும். இதை ஏற்றுக் கொள்வதன் மூலம் தனக்கு கட்சியில் தேவையற்ற நெருக்கடிதான் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து கூட துணைப் பொதுச்செயலாளர் பதவி தனக்கு வேண்டாம் என்று அவர் நாசூக்காக மறுத்திருக்கலாம்” என்றும் அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 410

0

0