‘எடப்பாடியாரை வழிகாட்டுதலா எடுத்துக்கோங்க’ ; அன்று சவால் விட்ட CM ஸ்டாலின்… இன்று மக்கள் செல்லவே பெரும் சவாலாக இருக்கு ; ஆர்பி உதயகுமார்..!!

Author: Babu Lakshmanan
15 November 2023, 10:56 am
Quick Share

தமிழகம் முழுவதும் 9,753 பள்ளிகளில் பழமையான கட்டிடங்களை அகற்ற அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்றும், பேரிடர் மேலாண்மை துறையில் எந்த திட்டமும் அரசு அறிவிக்கவில்லை என்று சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது :- தமிழகத்திலே ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி முதல் வாரம் வரை வடகிழக்கு பருவமழை இருக்கும். இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் நவம்பர் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து வரும் இரண்டு தினங்களிலே தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களான கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட கடலூர்  மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று பெய்த மழையிலே நாகை மாவட்டத்தில் பாலையூரில் நெற்பயிர்கள் நீரில் மிதந்து கொண்டு இருக்கிறது. உப்பளங்கள் எல்லாம் தண்ணீரில் சேதம் அடைந்துள்ளது. ஒரு நாள் மழைக்கே இந்த நிலைமை உள்ளது. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகள், குடிசைப் பகுதிகள், மண் சுவர்கள் நிறைந்த வீடுகள், அரசு பழமையான கட்டிடங்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடந்த 2021 டிசம்பர் 17ஆம் தேதி நெல்லையில் உள்ள பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து மூன்று மாணவர்கள் பலியானார்கள். அதேபோன்று 2021 டிசம்பர் மாதம் மதுரை கீழவெளிவீதியில் பழமையான கட்டிடம் இடிந்து காவலர் சரவணன் பலியானார். 2022 நவம்பர் மாதம் சென்னை சௌகார்பேட்டையில் பழமையான கட்டிடம் இடிந்து இரண்டு பேர் பலியாகி உள்ளனர். சென்னை பட்டாளம் பகுதியில் சில மாதங்களுக்கு முன் நூறாண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவமாக யாரும் உயிரிழப்பு இல்லை.

தமிழக முழுவதும்  9753 பள்ளிகளில் உள்ள 13,036 அரசு பள்ளிக்கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளது. இதனை சீர்படுத்தப்படும் என்று அரசின் சார்பில் கூறப்பட்டது. இதுவரை எத்தனை இடங்கள் சீர்படுத்தப்பட்டது என புள்ளி விபரம் வரவில்லை. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது, கஜா புயலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ஒரு மீனவர் உயிரிழப்பு இல்லாமல் 100% காப்பாற்றினார். முதன் முதலில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்ற ஒரே முதலமைச்சர் எடப்பாடியார் தான். கனமழை, ராட்சத மழை என அனைத்து காலங்களிலும் உடனுக்குடன் 38 மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் களஆய்வு மேற்கொண்டார்.

நிவாரணம் என்பது காயம்பட்ட பின் மருந்து போடுவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது காயம் ஏற்படாமல் பாதுகாப்பது இதைத்தான் எடப்பாடியார் செய்தார். இப்படி வரும் முன் மக்களை காத்ததை வழிகாட்டுதலாக தமிழக அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற காலங்களில் தொற்று நோயால் வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் போன்றவை வருகிறது. இதுக்கு ஒரு போதிய மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் என மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு பிரதான எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கொண்டு வருகிறார். ஆனால், நீங்கள் ஆய்வு செய்து மருந்துகள் இருக்கிறதா? இல்லையா? என மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அது தான் சிறந்த அமைச்சருக்கு அழகே தவிர, வாய் வீச்சு எல்லாம் அமைச்சருக்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை. காலிப் பணியிடங்களை நிரப்புவது என ஆதாரத்தோடு கூறினால் அந்த கேள்வியை மறுத்தால் தகுந்த பாடத்தை உங்களுக்கு மக்கள் புகட்டுவார்கள்.

மக்களுக்கு நன்மைகள் நடக்க வேண்டும் என்கிற ஒரு உயர்ந்த எண்ணத்தில், குற்றங்களை களைவதற்காக எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் தினந்தோறும், தினந்தோறும் கொடுக்கின்ற அறிக்கைகள் இந்த அரசுக்கு, உரிய எச்சரிக்கை மணி அடித்து, உரிய வழிகாட்டுதலை வழங்கி மக்கள் நலனை முன்னிறுத்தி வழங்குகின்ற வழிகாட்டுதலும், அறிவுரைகளை நீங்கள் ஏற்க மறுப்பீர்களானால், மக்கள் அதற்கு தகுந்த பாடத்தை உங்களுக்கு புகட்டுவார்கள்.

அதேபோல், அரசின் தரப்பில் வெளியிட்ட அறிவிப்பில் தண்ணீர் தேங்கும் இடங்களை குறிப்பிடவில்லை. அதேபோல், உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவுத்துறை, போன்ற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த மண்டல குழுக்கள் குறித்து இந்த விவரம் வெளியிடப்படவில்லை. தற்போது வைகை ஆற்றில் கூட ஆகாயத்தாமரை அதிகமாக உள்ளது. இதனால் தண்ணீர் வரும் பொழுது ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடும். கடந்த எடப்பாடியார் ஆட்சியில் ஒரு லட்சம் சிறு,குறு பாலங்களில் அடைப்பு ஏற்படாமல் தூர்வாரப்பட்டது. அது போன்று எந்த நடவடிக்கை தற்போது எடுக்கவில்லை. 

மேலும், நீர்நிலைகளில் அதிகமாக நீர்வரத்து இருக்கும் பொழுது, செல்பி போன்ற மோகங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. அது குறித்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக, நீர் மேலாண்மை ,பேரிடர் மேலாண்மையில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. தற்போது உபரி நீரை மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த மழை காலங்களில் முதலமைச்சர் சவால் விட்டு பேசி உள்ளார். ஆனால் இன்றைக்கு அரசு எந்த நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் மக்கள் செல்வதற்கு சவாலாக உள்ளது.

ஆகவே, வடகிழக்கு பருவமழையில் கடந்த ஆட்சியில் எடுத்தது போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அரசு செயல்பட வேண்டும், எனக் கூறினார்.

Views: - 179

0

0