‘நான் கைகாட்டுறவங்க கிட்டதான் பொருட்களை வாங்கனும்’ : தி.மு.க., எம்.எல்.ஏ. மிரட்டல்..! அதிருப்தியில் தொழில் நிறுவனங்கள்…!

11 August 2020, 7:14 pm
MLA sundar -- updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : தான் சொல்லும் இடத்தில் மட்டும்தான் பொருட்களை வாங்க வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு தி.மு.க., எம்.எல்.ஏ. மிரட்டல் விடுவதாக அதன் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களே எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். இவர்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தற்போதைய தொழில் நிறுவன உரிமையாளர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளினால் அம்பலமாகியுள்ளது.

முன்பு, தொகுதி மேம்பாட்டு பணிகளை ஒப்பந்தத்தில் எடுத்துச் செய்யும் நிறுவனங்களிடம் மட்டுமே கமிஷன் வாங்கிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ.க்கள், இப்போது தொகுதியில் எந்தப் பணிகள் நடந்தாலும் கமிஷனுக்காக அலைவதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களின் தொல்லை தாங்க முடியாமல், அரசு பணிகளை கூட அவசர அவசமாக, தரமில்லாதவாறு முடித்து விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்படுவதாக ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர்.

இந்த அவலநிலை தற்போது உத்திரமேரூரில் அரங்கேறியுள்ளது. அந்தத் தொகுதியில் இரும்பு தொடர்பாக ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. எனவே, அவற்றிற்கு மரக்கட்டைகள் அதிகம் தேவைப்படுகிறது. மாதந்தோறும் பல லட்சம் ரூபாயிக்கு மரக்கட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.வான சுந்தர், தான் சொல்லும் நபர்களிடம் இருந்து தான் தொழிற்சாலைகளுக்கு தேவையான மரக்கட்டைகள் உள்பட அனைத்துப் பொருட்களையும் வாங்க வேண்டும் என நிர்பந்திப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், உள்ளூரில் வாங்க வேண்டிய பொருட்களையும் கூட அவர் சொல்லும் நபர்களிடம்தான் வாங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பதாக தொழில் நிறுவனங்கள் புகார் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த காரணத்தினால், தொகுதியில் நடக்கும் முக்கிய விவகாரங்கள், இவரின் தலையீடு இல்லாமல் நடப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. மீறி வேறு நபர்களிடம் பொருட்களை வாங்கினால், மிரட்டல்கள் வருவதாகவும் எம்.எல்.ஏ. சுந்தர் மீது புகார்களை தெரிவிக்கின்றனர் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள். இதுநாள் வரை வெறும் ஒப்பந்தத் தொழில்களில் மட்டும் தலையிட்டு வந்த எம்.எல்.ஏ.க்கள், தற்போது தொழிற்சாலை விவகாரங்களிலும் தலையிடுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பெரும் மன உளைச்சலில் கடனை வாங்கி தொழிலை நடத்தி வரும் வேளையில், இதுபோன்ற மக்கள் பிரதிகளினால் மீண்டும் தொழிற்சாலைகளை மூடி விட்டு சென்று விடலாம் என்ற எண்ணம் உருவாவதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.

ஆனால், தொழிற்சாலை உரிமையாளர்களின் இந்தக் குற்றச்சாட்டிற்கு, தி.மு.க., எம்.எல்.ஏ. சுந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Views: - 6

0

0