நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி.. குடும்பமே தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி.. இதுதான் திமுகவின் மாபெரும் சாதனை… அண்ணாமலை காட்டம்!!

Author: Babu Lakshmanan
1 June 2022, 10:45 am
Quick Share

சென்னை : திமுக நிர்வாகி நிலத்தை அபரிகரித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பமே தீக்குளித்துத தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை தொடர்ந்து, திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழக அரசின் செயல்பாடுகளையும், குறைகளையும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை, பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனக் கூறி நேற்று திமுக அரசைக் கண்டித்து, கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜகவினர் நடத்தினர்.

அப்போது, பாஜகவினரின் போராட்டத்தை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் டெல்டா மாவட்டத்திற்கு எஸ்கேப் ஆகிவிட்டதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், ஒரு தம்பதி தன் இரு மகள்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிப்பதும், அவர்களையும் போலீசார் தடுத்து அழைத்துச் செல்வது போன்றும் உள்ளது.

இந்த வீடியோவுடன், அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதாவது, “தங்களது ஆட்சிக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிடுவோர்களின் குரல்வளையை நசுக்குவதில் மட்டும் ஆர்வம் காட்டி வரும் இந்த திமுக அரசு, மக்களை மறந்து வெகு நாட்கள் ஆகிறது. வாராவாரம் இப்படிப்பட்ட சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடப்பது தான் இந்த ஆட்சியின் மாபெரும் சாதனை.

திமுக நிர்வாகியிடம் இழந்த 4000 சதுரடி நிலத்தை மீட்கப் போராடும் இந்த குடும்பம் எடுத்த முடிவு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிப்பு. விளம்பரம் மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கும் இந்த திமுக அரசுக்கு முடிவுரையை மக்கள் விரைவில் எழுதுவார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

Views: - 691

0

0