அதிகபட்சமாக 11 பேருக்கு பதவி… மோடி அமைச்சரவையில் பறக்கும் பெண்கள் கொடி… 2024 தேர்தலை சந்திக்க அதிரடி வியூகம்!!

8 July 2021, 3:14 pm
modi cabinet meet - updatenews360
Quick Share

மத்திய அமைச்சரவையை மாற்றியமைத்து விரிவாக்கம் செய்தபோது பிரதமர் மோடி அதிரடியாக பல முக்கிய முடிவுகளை எடுத்து இருப்பது, வெளிப்படையாகத் தெரிகிறது.

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளில், முதல் முறையாக டாக்டர் ஹர்ஷவர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர்,சதானந்த கவுடா, ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்குவார், பாபுல் சுப்ரியோ, தேவஸ்ரீ சவுத்ரி உள்ளிட்ட12 அமைச்சர்கள் பதவி விலகி இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள 7 மாநிலங்களிலும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் அமைச்சரவை விரிவாக்கத்தில், பாஜகவை சேர்ந்த மீனாட்சி லேகி, ஷோபா கரன்ட்லஜே, அனுப்பிரியா சிங் படேல், தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், அன்னப்பூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் அப்னாதளத்தை சேர்ந்த அனுப்பிரியா சிங் படேல்
என்று 7 பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே, மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, இணை அமைச்சர்களாக, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் என்று 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர்.

பெண்கள் ராஜ்ஜியம்

புதியவர்களையும் சேர்த்து, மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை,
11 ஆக உயர்ந்தது. புதிதாக பதவியேற்ற 7 பெண்களும், இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில், அன்னப்பூர்ணா தேவி, பாரதி பிரவீன் பவார், பிரதிமா பவுமிக் ஆகிய மூவரும் முதல் முறை எம்.பி.க்கள் ஆவர்.

பிரதமர் மோடியின் முதல் ஆட்சி காலத்தில், 9 பெண் அமைச்சர்கள் இருந்தனர். இதில் 6 பேர் கேபினட் அந்தஸ்து கொண்டவர்கள். 2019-ல் மோடி அரசு மீண்டும் பதவியேற்றபோது, 6 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்தாண்டு கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் வேளாண் சட்டம் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

இதேபோல் தற்போது மோடி தனது அமைச்சரவையை மாற்றியமைப்பதற்கு வசதியாக தேவஸ்ரீ சவுத்ரி அமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். இதனால் 4 பெண் அமைச்சர்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மேலும் 7 பேர் பதவியேற்று இருப்பதால் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 77 அமைச்சர்களில், 30 பேர் கேபினட் அந்தஸ்து கொண்டவர்கள். மற்ற
47 பேரும் இணை அமைச்சர்கள் ஆவர். 24 மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அமைச்சரவையில் இடம் கிடைத்து இருக்கிறது.

முந்தைய ஆட்சியை விட கூடுதல்

முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2004 மற்றும் 2009 ஆட்சிகாலத்தில் இருந்த பெண் அமைச்சர்களை விட இது ஒன்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு ஆட்சிகாலத்திலும் தலா 10 பெண் அமைச்சர்கள் இருந்தனர்.

cabinet meeting - updatenews360

தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில பொறுப்பு ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் மத்தியஅரசு அமைச்சரவையில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதை வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், “பிரதமர் நரேந்திர மோடியின் தெளிவான வழிகாட்டுதலின்படி, மத்திய அமைச்சர்களாக புதிதாகப் பதவியேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நம் பாரதத் திருநாடு, உலக அரங்கில் பீடுநடை போடுவதற்கும் நம் தாய்த் திருநாட்டின் பெருமையை உயர்த்துவதற்கும் நம் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் ஒவ்வொரு கடைகோடி இந்தியருக்கும் கிடைப்பதற்கும் இந்த அமைச்சரவை செயலாற்றும் என்பது உறுதி.
அனைத்து தரப்பினரையும், அதிக எண்ணிக்கையில் மகளிரையும் உள்ளடக்கிய இந்த அமைச்சரவை மக்கள் பணியில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு எனது வாழ்த்துகள். குறிப்பாக, தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள எல்.முருகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் பணி இந்திய நாட்டுக்கும், தமிழ் மக்களின் வாழ்வு சிறக்கவும் அமைய எனது வாழ்த்துகள்” என்று கூறி இருக்கிறார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, “கடந்த 25 ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் தற்போதுதான் பெண்களுக்கு அதிக அளவில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பெண்களின் மேம்பாட்டுக்காகவும் அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றவும் உறுதி கொண்டிருப்பது இதன் மூலம் வெளிப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

பாஜகவில் பெண்களுக்கு வாய்ப்பு

இதுபற்றி டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “2022-ல் உத்தரபிரதேசம்,குஜராத், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு வெற்றி பெற்றுவிட்டால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு நல்ல வாய்ப்பு உருவாகும் என்று பாஜக கருதுகிறது. அதையொட்டியே இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு பீகார் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பெண்களின் வாக்குகள் அதிக அளவில் பாஜக கூட்டணிக்கு விழுந்துள்ளது.

இந்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தலில், பெண்களின் ஓட்டுகள் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் கிடைத்ததால்தான், அக்கட்சி 213 தொகுதிகளில் வெற்றி பெற்றது என பாஜக மேலிடம் கருதுகிறது. தமிழக தேர்தலிலும், திமுக கூட்டணிக்கு பெண்களின் வாக்குகள் கூடுதலாக கிடைத்திருப்பதை பாஜக உணர்ந்துள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டியம், கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்கள் தங்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் என்று மோடியும், அமித்ஷாவும் நம்புகின்றனர். அதன் காரணமாக இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அதிகளவில் அமைச்சர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே பாஜகவில் பெண்களுக்கு உரிய வாய்ப்பு கொடுக்கப்படுதில்லை என்ற ஒரு எண்ணம் மக்கள் மனதில் பதிந்துள்ளது. அதை தகர்க்கும் விதமாகவும், பெண்களில் நலனில் எங்களுக்கு எப்போதுமே அக்கறை உண்டு என்பதை நிரூபிக்கும் வகையிலும் மத்திய அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னொரு விஷயத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் இந்த அமைச்சரவையில் பாஜக முன்னுரிமை அளித்து இருக்கிறது. இதுவும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு வியூகம்தான்.

2014-ல் மோடி தலைமையில் மத்திய பாஜக அரசு அமைந்த பிறகு நஜ்மா ஹெப்துல்லா, ஆனந்திபென் படேல், கிரண் பெடி, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 8 பெண்களை இதுவரை கவர்னராக நியமித்துள்ளது”என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

பாஜகவின் தேர்தல் வியூகம் கைகொடுக்குமா?…

Views: - 115

0

0