நாங்க சொன்னத தா நீங்களும் சொல்றீங்க.. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை : நிலக்கரி விவகாரத்தில் தங்கமணி பதிலடி!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2021, 8:18 pm
சென்னை : வடசென்னை எண்ணூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி மாயமானதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு வைத்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பதிலடி கொடுத்துள்ளார்.
வடசென்னை எண்ணூர் அனல் மின்நிலையத்தில் 2வது அலகை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கபட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது என கூறினார்.
2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டும் உள்ளது. இந்த பதிவேட்டு முறை நடப்பு ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது. இருப்பில் இல்லாத நிலக்கரியின் மதிப்பு ரூ.85 கோடி ஆகும். நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே இந்த தவறில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என கூறினார்.
நிலக்கரி மாயமானது குறித்த அமைச்சரின் பேட்டி அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஆட்சியின் போது ஆய்வு செய்தபோது கூறியதைதான் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்றும், நடவடிக்கை எடுத்தால் அதை நான் வரவேற்கிறேன் என்றும் கூறினார். கடந்த ஆட்சியிலேயே 2.38 டன் நிலக்கரி காணவில்லை என்று தான் கணக்கெடுத்தோம். மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை என்று அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார்.
மேலும் கடந்த அதிமுக அரசை குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்வாறு குற்றம்சாட்டுகிறார் என்றும், சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது வாய்ப்பளித்தால் விளக்கம் அளிக்க தயார் என்றும் கூறினார்.
0
0