அப்துல் கலாம் – செய்வோம் சலாம்!!

Author: Babu
15 October 2020, 11:00 am
abdul kalam 07-updatenews360
Quick Share

இன்று நமது முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள். எல்லாத் தலைவர்களைப் போல், கலாம் அவர்களை எளிதாகக் கடந்து போக முடியாது. ஏனெனில், தன் வியர்வை, ரத்தம், உழைப்பு, அறிவு அனைத்தையுமே இந்த நாட்டுக்காகவே அர்ப்பணித்தவர் கலாம்.

ஏற்கனவே ராமபிரான் எனும் இறைவன் வாயிலாகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம், இருபதாம் நூற்றாண்டில் அப்துல்கலாம் எனும் மனிதனின் மூலமாகவும் மகத்துவம் பெற்றது. ஆம். அங்குதான் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி கலாம் பிறந்தார்.

abdul kalam 3- updatenews360

வறிய குடும்பம், வசதிகள் அற்ற வாழ்வு, இருந்தாலும் வேகத்தோடும், விவேகத்தோடும், தாகத்தோடும் படித்தார் கலாம். கல்வி.. “கல்வி… கல்வி…கல்வி மட்டுமே நம்மை கைகொடுத்து முன்னேற்றும்” எனும் தாரக மந்திரத்தை நெஞ்சில் சுமந்து படித்தார். ராமேஸ்வரத்தில் பள்ளிப் படிப்பு, திருச்சியில் கல்லூரிப் படிப்பு, சென்னை ஐஐடி யில் அறிவியல் நுட்பப் படிப்பு, என்று இளங்கலை, முதுகலை என எல்லாக் கலைகளையும் கற்று அறிவியல் கலைக்கு அழகு சேர்த்தார் கலாம்.

காலம் அவரைக் கல்வியாளராக்கியது –
கல்வி அவரை அறிவியலாளர் ஆக்கியது –
அறிவியல் வான்வெளி விஞ்ஞானி ஆக்கியது
வான்வெளி அறிவியல் அவரை ஜனாதிபதி ஆக்கியது.

இதுதான் அந்த மாபெரும் மானுடன் கடந்து வந்த கல்விப் பாதை !

முதன் முதலில் விண்ணூர்தி வளர்ச்சி நிறுவனத்தில் (DRDO) பணி. பின்னர் விண்வெளி ஆய்வுக் கூடத்தில் (ISRO)பணி.
பின்பு ஏவுகணை அமைப்புப் (SLV) பணி.

அப்துல் கலாம் சிருஷ்டித்த ஏவுகணைகளைக் கண்டு அகிலம் அதிர்ந்தது. மிகக் குறைந்த பொருட்செலவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அவர் தயாரித்துக் காட்டிய போது அமெரிக்கா அண்ணாந்து பார்த்தது.

அப்படியொரு ஆராய்ச்சியாளரை அதுவரை அண்டம் அறிந்ததில்லை. சமுத்திரக் கரையில் பிறந்து சாதனைக் கரையை எட்டியவரல்லவா அவர்! இந்திய அரசின் அத்துணை விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டன.

1980ம் ஆண்டு ரோகிணி எனும் துணைக்கோள் இவரது வியர்வையில் விளைந்தது. அதன் பின்னர் எத்துணை ஏவுகணைகள் திரிசூல், அக்னி, ஆகாஷ், பிரித்வி, நாக் என்று வானத்தை வரிசை கட்டியது இந்திய ஏவுகணைகள்! மறைந்த பிரதமர்கள் இந்திரா காந்தியும், வாஜ்பாயும் கலாமின் மீது கனத்த மரியாதை கொண்டவர்கள். ஏனெனில் இந்த இருவருமே அறிவார்ந்த அறிவியல் பக்தர்கள்.

விண்வெளி விஞ்ஞானம் மட்டுமா?
மண்வெளி விஞ்ஞானத்திலும் மகத்துவம் செய்தவர் நமது கலாம்.

1975 மற்றும் 1999 ஆண்டுகளில் இந்தியாவின் சார்பாக வெடிக்கப்பட்ட இரண்டு அணுகுண்டுகளும் நம் எதிரிகளை நடுநடுங்கச் செய்தன. அந்த பிரம்மாண்ட அணுகுண்டுகளின் பிதாமகர் நம் பெருமைக்குரிய கலாம் அவர்கள்.

கலாமின் கண்டுபிடிப்புகள் நம் ராணுவ பலத்தை கூட்டிப் பெருக்கின. Edu Chat எனும் துணைக்கோள் இந்தியா முழுவதும் தரமான கல்வி முறைக்கு வழி கோலியது. இப்படி அறிவியல் துறையில் அரும்பெரும் சாதனை புரிந்த கலாமுக்கு, அரசியல் அந்தஸ்து வழங்கத் தீர்மானித்தார் அப்போதைய பிரதமர் வாஜ்பாய். ஆம், விண்ணிலே சாதித்து மண்ணிலே கிடந்த அந்த வித்தக சீலரை, குடியரசுத் தலைவராக ஆக்க எண்ணினார் வாஜ்பாய்.

அதற்கு காங்கிரசும் சம்மதித்ததால் போட்டியின்றி ஜனாதிபதி ஆனார் அப்துல் கலாம்.

குறுகுறுக்கும் கடல்மண்ணில் பிறந்து, குடிசையில் வாழ்ந்து, கொடிய ஏழ்மையை ஏற்று, குடியரசுத் தலைவராக கோட்டை ஏறினார் கலாம்.

அப்படியொரு ஜனாதிபதியை உலகம் கண்டதில்லை. எளிமை…எளிமை…. எளிமை… அப்படியொரு எளிமை. சாதாரண சாப்பாடு, சைவ சாப்பாடு, ஆறு வேளை தொழுகை, ஆடம்பரமில்லா அரங்குகளில் அறிவு விளக்கக் கூட்டங்கள், மாணவர் மத்தியிலே மதிநுட்ப சொற்பொழிவு….. இப்படித்தான் தனது பதவிக் காலத்தை பந்தா காலமாக இல்லாது, பவித்திர காலமாய் வாழ்ந்து காட்டினார் கலாம்.

சைரன் இல்லை, சைன்னியம் இல்லை, ஊரடங்கு இல்லை, உரத்த குரல் புகழ்ப் பாடல்கள் இல்லை. சிம்பிளாய் வந்து ஹம்பிளாய் (humble) செல்லும் ஒரு ஏழைச் சகோதரராகவே எந்நாளும் இருந்தார் கலாம்.

குடியரசுத் தலைவர் பதவியில் அவர்
குளிர் காயவில்லை –
பிரசிடெண்ட் பதவி அவரைப் பித்தராக்கவில்லை –
ஜனாதிபதி பதவி அவரை ஜம்பமடிக்கச் சொல்லவில்லை.

பகட்டு, பரிவாரம், பதவித் திமிர், பண துஷ்பிரயோகம், உல்லாசம், ஊர்சுற்றல், கேளிக்கை, கிளுகிளுப்பு. என்று எதையும் தீண்டாத எளிமையின் இலக்கணமாகவே அவர் வாழ்ந்தார்.

அவர்,
தமிழகத்தில் பிறந்தது தமிழுக்குப் பெருமை –
விஞ்ஞானி ஆனது விடாமுயற்சிப் பெருமை –
ஜனாதிபதி ஆனது தேசத்தின் பெருமை!
எவ்வளவு உயரம் போனாலும் எளிமையாய் இருந்தது நம் எல்லோருக்கும் பெருமை.

ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்த பிறகும் கூட, அவர் விடாது பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று அறிவு விழிப்பு ஏற்படுத்த மிகவும் பாடுபட்டார்.

அம்மாதிரி ஒரு கூட்டத்தில்தான், 2015ம் ஆண்டு ஜூலை மாதம் ஷில்லாங் நகரில் நடைபெற்ற அறிவுணர்வு அரங்கத்தில்தான், மேடையிலே பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாம் அவர்கள், அப்படியே சரிந்து விழுந்து உயிர் நீத்தார்.

அடா அடா அடா அடா! அப்படியொரு தெய்வீக மரணம் யாருக்கு வாய்க்கும்?

பதவி ஆசையில் வெந்து –
பண ஆசையில் நொந்து –
பவர் ஆசையில் மடியும் பலர் மத்தியில் –
அப்துல் கலாம் அவர்கள் தமது ஆயுளையே அறிவுக் கோயில் ஆக்கிவிட்டார்.

வாழும் நாட்டுக்காகவே வாழ்ந்து முடித்த
வைகறைத் தலைவரை வணங்கிப் போற்றுவோம்.

தாவும் கலையில் தங்கப் பதக்கம் பெறும் நம்
தலைவர்கள் மத்தியில் – ஏவும்கணையில் இலக்கணம் படைத்த ஏந்தல் பிரானை என்றும் மதிப்போம்!

Views: - 273

0

0