‘சுதந்திர தினம் கொண்டாடுவதற்கல்ல..! தியாகிகளை நினைவில் கொள்வதற்காக…!’ யார் இந்த சுப்ரமணிய சிவா..?

15 August 2020, 11:35 am
subramaniya siva2- updatenews360
Quick Share

இன்று எங்கள் இந்தியாவின்
இன்பச் சுதந்திர தினம்!
இதோ, பட்டொளி வீசிப் பறக்கின்ற தேசியக் கொடியின் பரவச வெளிச்சம் பார்த்தீரா?

அந்த அந்த எழில்மிகு தேசக் கொடியின் ஒவ்வொரு நூலாய், ஒவ்வொரு இழையாய், ஒவ்வொரு நிறமாய், தன்னை உருமாற்றிக் கொண்ட உத்தமத் தியாகிகள் உங்கள் கண்களுக்குத் தென்படுகிறார்களா? இல்லை! அவர்கள் தென்பட மாட்டார்கள். அவர்கள் இந்த மாபெரும் நாட்டின் மண்துகளாய், நூலிழையாய், தேசிய கீதத்துப் பாடல் வரிகளாய் கலந்து போனார்கள்..! கரைந்து போனார்கள்..!

அந்த உத்தமத் தியாகிகளில் ஒருவர்தான் சுப்பிரமணிய சிவா! 1884ம் ஆண்டு அக்டோபர் நான்காம் நாள் பிறந்த இவர், வறிய குடும்பத்தின் வாரிசு. பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுங்கோன்மையைச் சகிக்காமல் , தன்னோடு கருத்தொற்றுமை கொண்டவரான வஉசி அவர்களிடம் நண்பராய்த் திகழ்ந்தார்.

வ உ சியும், சிவாவும் வெள்ளையருக்கு எதிரான போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்துவந்தனர். கூடவே பாரதியின் நட்பும் சேர்ந்து கொண்டதால் இந்த மூவர் தரப்பு முன்னெடுப்பை வெள்ளையரால் முறியடிக்கவே முடியவில்லை.

தாள முடியவில்லை வெள்ளையனால்,
தாங்க முடியவில்லை வெள்ளையனால்,
தடுக்க முடியவில்லை வெள்ளையனால்!

இம்மூவரின் பேச்சையும், எழுத்தையும் படிக்கப் படிக்க, விழிப்புணர்வு பெற்ற மக்களின் எதிர்ப்புணர்வு வெள்ளையனைத் தகிக்க வைத்தது.

உடனடியாக தேசத்துரோக குற்றம் சாட்டி வ.உ.சி.யையும், சிவாவையும் சிறையில் அடைத்தனர் பிரிட்டிஷ் காரர்கள். வெள்ளையர் கால சிறைவாசம் என்பது இந்தக்கால சொகுசுச் சிறைவாசம் அல்ல; வேதனை……வேதனை….வேதனை! வேதனையைத் தவிர வேறெதுவுமே இல்லாத வேதனை. ஏறத்தாழ நான்கு வருடங்கள் சிறையில் இருந்து வெளிவந்த சிவா முன்னிலும் தீவிரமாக செயல்பட்டார்.

பகவானுக்குக் கோயில் அமைக்க எல்லோரும் முயற்சிக்கையில் பாரத மாதாவிற்குக் கோயில் கட்ட முயற்சித்தார் சிவா.
வறுமைதான், வாழவே வழியில்லைதான், வாய்க்கரிசி கூடக் கிடைக்காத வறட்சி நிலைதான், இருப்பினும் தேசியத்தை மக்களுக்கு ஊட்டிட தன் வாழ்வை அர்ப்பணித்தவர்களை பசியும் பஞ்சமும் என்ன செய்துவிட முடியும்?

மக்கள் அனைவரும் சிவாவின் பின்னே அணிதிரள்வது ஆத்திரமூட்டியது ஆங்கிலேயனை. மீண்டும் சிறையிலடைத்தான் வெள்ளையன்.

கடந்த முறை கண்ட சிறைச்சாலை தண்டனை கொடுமை என்றால் இந்த முறை அதைவிடத் தீவிரமான தண்டனை!

முன்பு வெறும் அடி உதை தான்! வந்தேமாதரம் என்று முழக்கமிட்டால் அடி ,ஜெய்ஹிந்த் என்றால் உதை – பாரத்மாதா என்றால் பட்டினி!

இந்த முறை சிவாவின் சிறைவாழ்வு எப்படித் தெரியுமா?

சிவா தனது வாயைத் திறந்து “வந்தேமாதரம்” என்று முழங்கினால் – அவரது வாயை வலுக்கட்டாயமாகத் திறந்து வேறு சிறைவாசிகளின் சிறுநீரைப் புகட்டினார்கள்.

“வந்தேமாதரம்” என்றா வாய்கிழியக் கர்ஜிக்கிறாய் – அந்த வாயில் அடுத்த சிறைவாசியின் அழுக்கு மூத்திரத்தை ஊற்றுகிறேன் – நீ அதைக் குடித்துத்தான் ஆகவேண்டும்! இனிமேல் வந்தேமாதரம் என்று வாயைத் திறக்கிறாயா பார்க்கலாம்” என்று கொக்கரித்தனர் வெள்ளை ஆட்சியின் வெறி பிடித்த காவலர்கள்!

சிவா தயங்கவே இல்லையே!

“வந்தேமாதரம்” என்று தொண்டைக்குழி புடைக்க அடிவயிற்றிலிருந்து கூவுவார்/ கூவி முடித்துவிட்டு வாயைத் திறந்து வைத்துக் கொள்வார்/ அதிலே வேறு எவனெல்லாம் கொலைகாரன், கொள்ளைக்காரன், குஷ்டரோகி போன்ற கைதிகள் இருக்கிறார்களோ, அந்தக் கைதிகளின் சிறுநீரைப் பிடித்து வந்து சிறைக்காவலர்கள் சிவாவின் வாயில் ஊற்றுவார்கள். அதை அப்படியே விழுங்கி விட்டு மீண்டும் “வந்தேமாதரம்” என்று முழங்குவார் சிவா! மீண்டும் ஊற்றுவார்கள். அதையும் குடித்துவிட்டு கர்ஜிப்பார் சிவா! செய்வதறியாமல் மிரண்டு போவார்கள் வெள்ளைக் காவலர்கள்!

இப்படி கண்டவனின் சிறுநீரைக் குடித்துக் குடித்து , சிறையிலே கம்பளிப் பூச்சிகள் நெளிய நெளிய கம்பளி பின்னும் பணியையும் செய்து செய்து வாடினார் சிவா!

கடைசியாக என்ன ஆயிற்று?

அடுத்தவனின் மூத்திரத்தையே தனது ஆயுட்கால உணவாகக் கொண்ட அந்த மாபெரும் தியாகி சிவாவிற்கு குஷ்டரோக நோய் வந்து விட்டது நண்பர்களே!

யாரேனும் பார்த்ததுண்டா? இம்மாதிரி கொடிய சிறைவாசத்தைக் குறித்து யாரேனும் கேட்டதுண்டா? இதுபோன்ற இடியினும் கொடிய தண்டனை குறித்து யாரேனும் படித்ததுண்டா?

உலகில் உள்ள அத்துணை நாடுகளிலும் உள்ள ஏதாவது ஒரு சிறைச்சாலையில் இம்மாதிரி நிகழ்ந்ததுண்டா? எந்த முன்னுதாரணமாவது இதற்கு உண்டா? அல்லது பின்னால்தான் இந்தக் கொடுமைகள் நிகழ்ந்ததுண்டா?

நடந்தது நண்பர்களே!! நம் ஊரிலேயே நடந்தது ! நம் முன்னோரின் கண்ணெதிரேயே நடந்தது. வரலாறு செய்த பதிவுகளைக் காட்டிலும் வன்கொடுமைகள் நடந்தது நண்பர்களே! “கம்பளி நெய்தது சிவாவின் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை, அதனால் பெருநோய் வந்துவிட்டது” என்று ரிகார்டு தயார் செய்யப் பட்டது.

சுப்பிரமணிய சிவாவின் உடல் அழுக ஆரம்பித்தது. அருவருப்படைய ஆரம்பித்தது. அவலமடையத் தொடங்கியது. குஷ்டம் அந்தக் கோமேதகத்தைத் தின்று தின்று, அந்தக் கொள்கைக் கோபுரத்தின் உடலிலே புழுக்களாக நெளியத் தொடங்கின.

அலறினான் வெள்ளையன், அய்யோ அய்யோ… இவரது குஷ்டரோகம் சிறையிலுள்ள மற்றவர்களுக்கும் பரவிவிடுமோ என்று அஞ்சினான் வெள்ளையன், பயந்தான்… பரிதவித்தான்… உடனடியாக சுப்பிரமணிய சிவாவை வெளியே தள்ளி விடுதலை செய்தான் வெள்ளையன்! தண்டனைக் காலம் முடியுமுன்பாகவே அந்தக் கொடிய வியாதிக்காரனை கூண்டை விட்டு அனுப்பினான் வெள்ளையன்!

சிறையிலிருந்து நடந்து வரக் கூட அவரால் முடியவில்லை. ஒரு அழுக்கு மூட்டையில் அவரைக் கட்டி வெளியே தூக்கிப் போட்டது சிறை நிர்வாகம்.

சிறை செல்வதற்கு முன் சிவா எப்படி இருந்தார்?

செக்கச் சிவந்த பொன்னின் நிறம்,
சிம்மம் போன்ற குரலின் வளம்,
நடந்தால் அதிரும் உடம்பின் பலம்,
நெருப்பு விழியே எதிரியைச் சுடும்!

அப்பேர்ப்பட்ட அழகு சிவா,
ஆரோக்கிய சிவா,
ஆண்மையின் இலக்கணம் சிவா!

அதே சிவா,

அருவருப்பு நோயால் அவலப்படும் மனிதனாய் ,
பெருவெறுப்பு சூழவைக்கும்,
பெருநோயின் பிள்ளையாய்,
உடல் முழுதும் சிரங்கு வந்து ஒழுகுகின்ற ரத்தத்தோடு, பார்த்தாலே குமட்டல் வரும் பரிதாபப் பிறவியாய்!

1884ல் பிறந்து இந்த பாரத தேசத்துக்காகவே பாடுபட்டு, தேய்ந்து, தேய்ந்து, உருக்குலைந்து போன அந்த உன்னதச் சூரியன் 1925ம் ஆண்டு ஓய்ந்து ஒடுங்கிப்போய் உயிரை விட்டது நண்பர்களே!

இப்போது கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம் நண்பர்களே! நாம் இன்று வாழுகிற ஆனந்த வாழ்வுக்கு அஸ்திவாரம் யாரால் வந்தது? அனுபவிக்கும் வசதிகளுக்கு அடிப்படை யாரால் வந்தது?

அந்த ஆதார புருஷர்களைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நண்பர்களே!

சீமானாய்ப் பிறந்து, வக்கீல் தொழிலிலே வாரிக் குவித்த வ.உ.சி சிறையிலே செக்கிழுத்துச் செக்கிழுத்து சிதைந்து போனது யாருக்காக? உலகக் கவிஞர்களின் மத்தியிலே ஒளிவிட்டு ஜொலிக்க வேண்டிய பாரதி, ஒரு வாய்ச் சோற்றுக்கு ஊடாடியது யாருக்காக?

குலுக்கும் தளுக்குமாய் வாழவேண்டிய கொள்கை மறவன் திருப்பூர்க் குமரன் – கொடி பிடித்த காரணத்தால் அடிபட்டுச் செத்தானே அது யாருக்காக?

இன்பம் பூரிக்கும் இளமைப் பருவத்தில், கட்டிய மனைவியைக் கட்டிலில் விட்டு விட்டு, கைத்துப்பாக்கியைக் காதலித்தானே அந்த வீர வாஞ்சி. அது யாருக்காக?

சுதந்திர தினம் என்பது கொண்டாட்ட தினம் அல்ல. கொள்கை மறவர்களை நம் மனதிலே கொள்ள வேண்டிய தினம்!

இன்றைய நாள் – விழா நாள் அல்ல. நம்மை விழாமல் தாங்கிப் பிடித்த வீரர்களின் நினைவுகளை விழாமல் நாம் பாதுகாக்க வேண்டிய நாள்! அவர்களின் தியாகத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, நாம் இந்த ஆகஸ்டு பதினைந்தை ஆனந்தமாய் வரவேற்போம்!

வந்தேமாதரம்! ஜெய்ஹிந்த்!

Views: - 67

0

0