அரசின் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்: ஒரே பக்கமாக சாய்ந்த முதலீடுகள்: கவலையில் பொருளாதார வல்லுனர்கள்!

21 July 2021, 10:01 pm
Quick Share

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின்பு, மாநிலத்தின் வளர்ச்சிக்காக உலகின் தலைசிறந்த 5 பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்தார். அந்தக் குழுவிடம் அவர் பேசியபோது, “அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் ‘திராவிட மாடல்’ வளர்ச்சி. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இதுபோன்ற வளர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்த நீங்கள் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தொழில் பூங்காக்கள், தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவைகள், ஜவுளித்துறை, மருந்துப்பொருட்கள், காலணிகள் தயாரிப்பு, உணவு பொருட்கள் பதப்படுத்துதல், காற்றாலை, எரிசக்தி, சரக்குப்போக்குவரத்து, என பல துறைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து கொண்டுள்ளார். இதன் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

2 வாரங்களுக்கு முன்பு 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகின் பிரபல ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனமான கைடெக்ஸ் தமிழகத்தில் முதலீடு செய்யவிருந்த வாய்ப்பு கடைசி நிமிடத்தில் கைநழுவிப் போனதால் இந்த முறை முதலீடு செய்ய விரும்பிய நிறுவனங்களை உடனடியாக அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளார், என்கின்றனர். இதேபோல் 4250 கோடி ரூபாய் மதிப்பில் 21 ஆயிரத்து 630 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 9 தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். அதுமட்டுமின்றி 7117 கோடி ரூபாயில் 6800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க கூடிய பணிகள் முடிக்கப்பட்ட 5 தொழில் நிறுவனங்களின் உற்பத்தியையும் அவர் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக அவர் பேசும்போது, “இந்த 49 திட்டங்களின் மொத்த மதிப்பு 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இதன் மூலம் தமிழகத்தில் 83 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு,கோவை, நாமக்கல்,சேலம் திருப்பூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவலாக இந்தத் திட்டங்கள் அமைய உள்ளன” என்றும் குறிப்பிட்டார். மாநிலத்தில் முதலீடுகள் அதிகரித்து வேலை வாய்ப்புகளுடன் தொழில் வளமும் பெருகி அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெறுவது நல்ல விஷயம்தான்.

ஆனால் இப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில் முதலீட்டு திட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையே மிகுந்த வேறுபாடு இருப்பதையும் காணமுடிகிறது.17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் மதிப்பிலான 35 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான 20 முதலீடுகள் சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே அமைந்துள்ளன. இந்த 3 மாவட்டங்களும் சென்னை மாவட்டத்தை மையமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.அதனால் இதை சென்னைக்கு கொடுக்கப்பட்ட மிகுந்த முன்னுரிமை என்றே கருதத் தோன்றுகிறது. எஞ்சிய 17 மாவட்டங்களுக்கும் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

அதேபோல் அடிக்கல் நாட்டப்பட்ட 9 திட்டங்களில் 6 சென்னைக்கு மிக அருகே அமைந்துள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அமைய இருக்கின்றன. அதாவது, இந்த திட்டங்களுக்கான மொத்த மதிப்பீடான 4250 கோடி ரூபாயில் சுமார் 2800 கோடி ரூபாய் இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே குவிகிறது. உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டுள்ள 5 நிறுவனங்களிலும் இதுபோன்ற வித்தியாசம் இருப்பதைக் காண முடிகிறது. இந்த திட்டங்களுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை 7 ஆயிரத்து 117 கோடி ரூபாய். இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள தொகை 6,900 கோடி ரூபாய் ஆகும்.

இதுபற்றி பொருளாதார வல்லுநர்கள் கூறும்போது, “அடிக்கல் நாட்டப்பட்டுள்ள தொழில் திட்டங்களும், உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்ட தொழில் நிறுவன திட்டங்களும் ஏற்கனவே மாநில அரசால் முடிவு செய்யப்பட்டவையாக இருக்கும். அதனால் சென்னையை சுற்றி அமைந்துள்ள மூன்று மாவட்டங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதை தவிர்க்க இயலாது. ஆனால் புதிதாக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்த மூன்று மாவட்டங்களிலும் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை சற்று குறைத்து அதை வேறு சில மாவட்டங்களுக்கு கொண்டு சென்று இருக்கலாம். அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி பார்த்தால் 20 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, தெரிகிறது.

இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் சென்னைக்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை தற்போது இருப்பதை விட இன்னும் அதிகரிக்கவே செய்யும். சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள இந்த 3 மாவட்டங்களிலும் மக்கள் அடர்த்தியாக வசிப்பதையும், வேலை வாய்ப்பிற்காக இளைஞர்கள் அலைந்து திரிவதை தடுக்கவும்தான் மாநிலத்தின் எல்லா மாவட்டங்களும் சமச்சீரான வளர்ச்சி பெற வேண்டுமென்று தமிழக அரசு விரும்புகிறது. ஆனால் தற்போது செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பல அதற்கு முரண்பாடாகவும், பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதுபோலவும் அமைந்துள்ளது. அதேபோல எஞ்சிய 17 மாவட்டங்களிலும் ஒரு சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தவிர பல மாவட்டங்களில் 100 முதல் 150
கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள்தான் செய்யப்படுகிறது.

இதனால் அந்த மாவட்டங்களில் இளைஞர்களுக்கு குறைந்த அளவிலேயே வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதுபோன்ற மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை இன்னும் அதிகரிக்கவேண்டும். மேலும் தமிழக அரசின் செய்திக் குறிப்பின்படி 17 மாவட்டங்களில் தொழில் முதலீடு இல்லை என்பதும் தெரிய வருகிறது. இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்துக்குள் வருவதால் அங்கு தொழில் நிறுவனங்கள் அமைய வாய்ப்பில்லை. ஆனால் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தென்காசி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் எந்த முதலீடும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

இதனால் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த படித்து முடித்த இளைஞர்களும் வேலை தேடி சென்னைக்கு வரும் நெருக்கடி சூழல்தான் ஏற்படும். மக்கள் பெருக்கம் முன்பைவிட சென்னையில் இன்னும் அதிகரிக்கும். குறைந்தபட்சம் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும் தொழில் நிறுவனங்கள் மூலம்தான், எதிர்பார்க்கிற ஓரளவு வேலைவாய்ப்பை கிடைக்கச் செய்ய முடியும். எனவே அடுத்த முறை தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யும்போது அனைத்து மாவட்டங்களின் சீரான வளர்ச்சியை உறுதி செய்கிற விதமாகவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமையவேண்டும்.

பின்தங்கிய மாவட்டங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதால் அங்கு முதலீடு செய்ய தொழில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறக்கூடாது. அங்கு போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டியது அரசின் கடமை. தொழில் முதலீடுகளை ஈர்க்கும்போது வேலை வாய்ப்பிற்காக மக்கள் ஒரே இடத்தை தேடிச்செல்லும் நிலையையும் தமிழக அரசு மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டும். இல்லையென்றால் பின்தங்கிய பகுதி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம் என்ற மனநிலைக்குத்தான் தள்ளப் படுவார்கள். இதனால்தான் சமீபத்தில் கொங்கு நாடு தனி மாநிலக் கோரிக்கை தமிழகத்தில் தீவிரம் பெற்றது என்பதும் உண்மை. எனவே, பின்தங்கிய மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் முன்னேற்றம் காணச் செய்ய வேண்டும் என்பது வெறும் கனவாக மட்டுமே இருந்து விடக்கூடாது” என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

Views: - 128

0

0