5 லட்சம் ஆசிரியர்களின் கனவை சிதைப்பதா..? ஆசிரியர் நியமன வயது உச்சவரம்பு குறைப்பு… தமிழக அரசுக்கு ம.நீ.ம. கண்டனம்!!

Author: Babu Lakshmanan
19 October 2021, 3:50 pm
kamal vs stalin - updatenews360
Quick Share

அரசுப்‌ பள்ளிகளில்‌ முதுகலைப்‌ பட்டதாரி ஆசிரியர்கள்‌ நியமனத்தில்‌ உச்ச வயதுவரம்பு குறைக்கப்பட்டது ஏற்புடையதல்ல என்று மக்கள்‌ நீதி மய்யம்‌ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழக பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ அரசுப்‌ பள்ளி ஆசிரியர்‌ மற்றும்‌ பணியாளர்‌ நியமன உச்ச வயது வரம்பு 57 ஆக இருந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்‌, கொரோனா தொற்றைத்‌ தொடர்ந்து ஓய்வுபெறும்‌ வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது நியமன வயதுவரம்பை 59 ஆக உயர்த்தியிருக்க வேண்டும்‌. மாறாக, பொதுப்பிரிவினருக்கு 40 வயது என்றும்‌, இடஒதுக்கீட்டுப்‌ பிரிவினருக்கு 45 என்றும்‌ குறைத்துவிட்டனர்‌. இதை எதிர்த்து பட்டதாரிகள்‌ போராடிய நிலையில்‌, அப்போது எதிர்க்கட்சித்‌ தலைவராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின்‌, “ஆசிரியர்களுக்கான வயதுவரம்பைக்‌ குறைத்து, கேடுகெட்ட மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது எடப்பாடி அரசு” என்று கடுமையாக விமர்சித்தார்‌.

அதுதொடர்பான அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்கொண்டார்‌. இப்போது தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த ஆட்சியிலாவது வயதுவரம்பு உயர்த்தப்படும்‌ என்று பட்டதாரிகள்‌ எதிர்பார்த்திருந்தனர்‌. ஆனால்‌, மாபெரும்‌ மெளனமே பதிலாக இருந்தது… போராட்டம்‌ மட்டும்‌ தொடர்ந்தது !

இந்த நிலையில்‌ வேண்டா வெறுப்பாகச்‌ செய்வதைப்போல்‌ தி.மு.க அரசு, அரசாணை ஒன்றைப்‌ பிறப்பித்துள்ளது. அதில்‌ ஆசிரியர்‌ நியமன வயதுவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40-லிருந்து 45 ஆகவும்‌ இடஒதுக்கீட்டுப்‌ பிரிவினருக்கு 45-லிருந்து 50 ஆகவும்‌ ஐந்து ஆண்டுகள்‌ உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும்‌ இந்த அறிவிப்பானது 31-12-2022 வரையே செல்லுபடியாகும்‌. பிறகு, மீண்டும்‌ வயதுவரம்பு 45-லிருந்து 42 ஆகவும்‌ 50-லிருந்து 47 ஆகவும்‌ மூன்றாண்டுகள்‌ குறையும்‌.

கொடுப்பதுபோல்‌ கொடுத்துவிட்டு நைச்சியமாகத்‌ திரும்பப்‌ பெறும்‌ வழிமுறை இது. வயதுவரம்பு குறைப்புப்‌ பிரச்சனையால்‌, தமிழ்நாட்டில்‌ 3 முதல்‌ 5 லட்சம்‌ பட்டதாரிகள்‌ பாதிக்கப்படுவார்கள்‌ என்கிறார்கள்‌ கல்வித்துறையில்‌ இருப்பவர்கள்‌. அரசு வேலை என்பது பலருக்கும்‌ கனவாக இருந்துவரும்‌ நிலையில்‌, அவர்களின்‌ கனவுகள்‌ கருகிப்போவதை அனுமதிக்கக்கூடாது. இவ்விவகாரத்தில்‌ தி.மு.க அரசானது, எதிர்க்கட்சியாக இருந்தபோது வலியுறுத்தியதைப்போலவே உச்ச வயதுவரம்பை 57 அல்லது 59 ஆக்குவதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 229

0

0