அரசு ஊழியர்கள், பெண்கள் ஓட்டு யாருக்கு…? திக்கு முக்காடும் CM ஸ்டாலின்…! தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்…!

Author: Babu Lakshmanan
23 April 2024, 8:59 pm
Quick Share

தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2019ல் பதிவானதை விட மூன்று சதவீதமும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை விட நான்கு சதவீதமும் குறைந்திருப்பது குறித்து கட்சிகளின் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் கோணத்தில் இதனால் யாருக்கு லாபம், யாருக்கு பெரும் இழப்பு? என்று தொடர்ந்து ஊடகங்களில் விவாதித்து வருகின்றனர்.

பதிவான ஓட்டுகளை அடுத்த ஆறு கட்ட தேர்தல்களும் நடந்து முடிந்த பின்பு ஜூன் நான்காம் தேதிதான் எண்ணி அறிவிப்பார்கள் என்பதால் அதுவரை இது போன்ற அலசல்கள் தொடரத்தான் செய்யும். அதேநேரம் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்து உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. மொத்த வாக்காளர்களில் ஆண்கள் 2 கோடியே 12 லட்சத்து 97 ஆயிரத்து 903 பேரும், பெண்கள் 2 கோடியே 21 லட்சத்து 58 ஆயிரத்து 258 பேரும் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதாவது ஆண்களை விட பெண்கள் சுமார் 9 லட்சம் பேர் கூடுதலாக ஓட்டுப் போட்டுள்ளனர். இதனால் அரசு சாதாரண டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, அரசு கலைக் கல்லூரிகளில் பயிலும் 2 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை போன்ற நேரடியாக பணப்பயன் அளிக்கும் நலத்திட்டங்களால் பெண்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஈர்க்கப்பட்டு தங்களுக்கே ஓட்டு போடுவார்கள். அதிலும் 9 லட்சம் பெண்கள் கூடுதலாக வாக்கு செலுத்தியிருப்பதால் நமக்கு அது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமையும் என்று திமுக தலைமை கணக்கு போடுகிறது. இதனால் 39 தொகுதிகளும் நம் வசமே வந்து சேரும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார்.

இந்த நிலையில்தான், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சியை கைப்பற்றிய பிறகு திமுக அதை கண்டுகொள்ளவே இல்லை என்ற கடும் கோபத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள் என சுமார் 16 லட்சம் பேரும் அவர்களது குடும்பத்தினர் 54 லட்சம் பேரும் திமுக அரசுக்கு எதிராக வாக்களித்திருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது.

மேலும் படிக்க: பக்குவமில்லாத அரசியல்வாதி ராகுல்… கேரள CM பினராயி விஜயன் போட்ட குண்டு ; ஆடிப்போன I.N.D.I.A. கூட்டணி…!!!

ஆனால் இவர்களில் திமுகவின் தீவிர அனுதாபிகளாக உள்ள 5 லட்சம் பேரும், அவர்களது குடும்பத்தைச் சார்ந்த 15 லட்சம் பேரும் என மொத்தமாக 20 லட்சம் வாக்குகள் வழக்கம்போல் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும்தான் கிடைத்திருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதேபோல அதிமுகவின் அனுதாபிகளாக உள்ள 2 லட்சம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தினர் 8 லட்சம் பேரின் வாக்குகளும் என மொத்தமாக 10 லட்சம் ஓட்டுகள் அதிமுகவுக்கு வழக்கம்போல் விழுந்துள்ளது என்கிறார்கள்.

காங்கிரஸ், விசிக, பாமக, பாஜக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்
நாம் தமிழர் கட்சி ஆகியவற்றில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் அந்தக் கட்சிகளுக்கு அவர்கள் குடும்பத்தினர் வாக்குகளையும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 14 லட்சம் வாக்குகள் வரை கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.

இந்தக் கணக்கின்படி பார்த்தால் எப்போதும் திமுகவுக்கு ஓட்டு போடும் எஞ்சிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், தற்காலிக செவிலியர்கள் குடும்பத்தினரின் 26 லட்சம் ஓட்டுகள் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் பகிரப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

இதில் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் அதிக பட்சமாக 14 லட்சம், அதிமுகவுக்கு 7 லட்சம், பாஜகவுக்கு 5 லட்சம் வாக்குகளும் கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால்தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 9 சதவீத ஓட்டுகளை பெற்று விடும் என்ற எதிர் பார்ப்பு பொதுவெளியில் எழுந்துள்ளது.

அதேநேரம் பெண்களின் ஓட்டு அதிக சதவீதம் பதிவானது திமுகவுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருந்தாலும் கூட இன்னொரு பக்கம் தேர்தலின்போது திமுகவும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரம் மேற்கொண்டபோது பல இடங்களில் பெண்கள் பெருமளவில் திரண்டு ஏழைகளான நாங்கள் ரொம்ப கஷ்டப்படுகிறோம். எங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை. ஆனால் வசதியான வீட்டு பெண்களுக்கு மட்டும் தாராளமாக கிடைக்கிறது என்று கோஷங்களை எழுப்பியதையும், இன்னும் பல ஊர்களில் இங்குள்ள டாஸ்மாக் கடைகளை முதலில் இழுத்து மூடுங்கள் என்று பெண்கள் கொந்தளித்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது.

இதுதவிர எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளும் எதுவும் செய்து தரப்படவில்லை, 5 ஆண்டுகளாக தொகுதி பக்கம் எம்பிக்கள் யாரும் எட்டிப் பார்க்கவே இல்லை என்ற மனக்குமுறல்களும் மூலை முடுக்குதோறும் ஒலித்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் வரை அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப் பொருள் தாராள நடமாட்டம், சிறுமிகள்,பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளும் விஸ்வரூபம் எடுத்துள்ளன.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ஏழை மற்றும் பட்டதாரி பெண்களின் திருமணத்துக்கு வழங்கப்பட்ட தாலிக்கு ஒரு பவுன் தங்கம், 50 ஆயிரம் ரொக்கம், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி ஒருவர் 2000 கோடி ரூபாய்க்கு போதை பொருட்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கடத்தியது,
சென்னை பெருவெள்ளம் போன்றவற்றை முக்கிய பிரச்சாரமாக தனது ஒவ்வொரு மேடையிலும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களாக வெளியிட்டு வாக்காளர்களிடம் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தினார்.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையோ மோடி அரசின் பத்தாண்டு கால சாதனைகள், சிறு தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி, வீடு கட்ட மத்திய அரசின் மானியம், கிராமங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தனது தேர்தல் பிரச்சாரத்தில் மையமாக வைத்தார். இதற்கும் வரவேற்பு கிடைத்தது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானோ திமுக, அதிமுக, பாஜக யாருமே சரியில்லை என மூன்று கட்சிகளுக்கும் எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

“இவற்றையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி பார்த்தால் திமுக அரசு மீதான அதிருப்தியே வலுவாக நிற்பதை உணர முடிகிறது. எனவே பெண்கள் அதிக அளவில் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் அதனால் அவர்களுடைய ஓட்டுகள் அனைத்தும் திமுகவைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கருதினால் அது ஏமாற்றத்தில்தான் முடியும். கூட்டணி கட்சிகள் மட்டுமே திமுகவுக்கு பலத்தை கொடுக்கிறது” என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

“ஏனென்றால் இம்முறை சிறுபான்மையினரின் பத்து சதவீத வாக்குகளும் முழுமையாக திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. 6 சதவீதம் திமுக கூட்டணிக்கும், மூன்று சதவீதம் அதிமுக கூட்டணிக்கும் ஒரு சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களின் 50 லட்சம் ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு கிடைக்காத சூழ்நிலை உருவாகி இருப்பதும் சிறுபான்மையினரின் ஓட்டுகள் அப்படியே கிடைக்க வாய்ப்பில்லை என்பதும் கண்கூடு.

முந்தைய தேர்தல்களில் இவர்களின் முழு ஆதரவோடு 15 சதவீத ஓட்டுகளுடன் தேர்தல் களத்தில் எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு திமுக ஓடுவது வழக்கம். அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை வெகு தூரம் பின்னால் பூஜ்ஜியத்தில் இருந்தபடி திமுகவுக்கு எதிராக ஓட வேண்டிய நிலைதான் இருக்கும்.

ஆனால் இந்த முறை திமுகவுக்கு 7 சதவீத முன்னணி என்ற நிலைதான் இதில் தென்படுகிறது. திமுக அரசு மீது 10 சதவீத அளவிற்கு அதிருப்தி நிலவுவதாக கூறப்படுவதால் அக்கட்சிக்கு மூன்று சதவீத வாக்குகள் பின்னடைவை தரலாம். 2019ஐ விட இந்த தேர்தலில் மூன்று சதவீத ஓட்டுகள் குறைவாக பதிவாகி இருப்பதையும் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.

என்றபோதிலும் இந்த மூன்று சதவீதமும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்தமாக ஒரே பக்கமாக செல்லும் என்று உறுதியாக கூற முடியாது.

இந்த எதிர்ப்பு வாக்குகள் சிதறுவதால் என்னதான் திமுக கூட்டணி வலுவாக இருந்தாலும் அதிக பட்சமாக 29 இடங்களை மட்டுமே அதனால் கைப்பற்றக் கூடிய நிலைதான் தென்படுகிறது. எஞ்சிய 10 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆறும் பாஜகவுக்கு நான்கும் கிடைக்கலாம். நாம் தமிழர் கட்சி அதிக சதவீத வாக்குகளை பெற்று பிற கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் மட்டுமே அளிக்கும். அக்கட்சிக்கு தேர்தலில் வெற்றி கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

இவர்கள் கூறும் புள்ளி விவர கணக்கு அப்படியே பலிக்குமா? என்பதற்கு ஜூன் நான்காம் தேதி விடை கிடைத்துவிடும்.!

Views: - 122

0

0