எடப்பாடியாரின் நெருக்கடியால் டெல்லிக்கு பறந்த ஆளுநர் : 7 பேரின் விடுதலை குறித்து பிரதமருடன் இன்று சந்திப்பு..!!

4 November 2020, 4:38 pm
governor - pm modi - updatenews360
Quick Share

டெல்லி : டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்து பேச இருக்கிறார்.

4 நாள் பயணமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். 7ம் தேதி வரை டெல்லியில் தங்கியிருந்து குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச அவர் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், முதலாவதாக பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TN Governor- Updatenews360

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் 4 வார கால அவகாசம் கோரியிருந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநில அரசுக்கான தனி அதிகாரத்தை பயன்படுத்தி, அம்மசோதாவை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டார். இது ஆளுநர் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போலவே, 7 பேரின் விடுதலையிலும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது ஆளுநருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

cm - governor - updatenews360

30 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 2 ஆண்டுகளாகியும் அவர் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், உள்ஒதுக்கீடு விவகாரத்தைப் போன்று, 7 பேரின் விடுதலை விவகாரத்திலும், மாநில அரசின் அதிகாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்தால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மேலும் விமர்சனத்திற்கு ஆளாவார். இதனை உணர்ந்த அவரோ, அவசர அவசரமாக டெல்லிக்கு தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்திற்கு பிறகு 7 பேரின் விடுதலை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது, அவரது நெருக்கடியால், ஆளுநர் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டால், மக்கள் மத்தியில் அசைக்க முடியாத தலைவராகி விடுவார் என அவரது கட்சியினரும், ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.

Views: - 27

0

0