திமுக அரசுக்கு ஆளுநர் ரவி செக் : முற்றும் மோதல், அதிர்ச்சியில் ஸ்டாலின்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2022, 8:26 pm
CM Governor War - Updatenews360
Quick Share

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஓராண்டு ஆகப்போகிறது. ஆனாலும் மாநிலத்தை ஆளும் திமுக அரசுக்கு அவர் பல்வேறு வழிகளில் குடைச்சல் கொடுப்பதாக முதலமைச்சர் ஸ்டாலினும், சக அமைச்சர்களும் கருதுகின்றனர். இதனால் அடிக்கடி அவர் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறார். இதற்கு பல காரணங்களும் உண்டு.

மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்

கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதா மீது
ஆளுநர் ரவி எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது, திமுக அரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஏனென்றால் திமுக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் அதுவும் ஒன்று. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்று திமுக தலைவர்கள் மேடைதோறும் முழங்கினர்.

4 மாதங்களுக்கு பிறகு இந்த சட்ட மசோதா மீது சில விளக்கங்களை கேட்டு ஆளுநர் ரவி அரசுக்கு திரும்ப அனுப்பியதால் இரண்டாவது முறையாக அந்த மசோதாவை சட்டப் பேரவையில் நிறைவேற்றும் நெருக்கடி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது.

ஜெய்ஹிந்த் : அதிர்ச்சியில் திமுக

இதற்கிடையே இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் ஆளுநர் ரவி அதிரடி காட்டினார். பொதுவாக ஆளுநர்கள், தங்களது உரையை நிறைவு செய்யும் போது பாரதத் தாயை போற்றும் விதமாக “ஜெய் ஹிந்த்!” என்ற முழக்கத்துடன் முடிப்பதுதான் வழக்கம். ஆனால் 2-வது ஆண்டாக திமுக அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரையின் முடிவிலும் ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் காணப்படவில்லை.

இருந்த போதிலும் ஆளுநர் ரவி உரையை நிறைவு செய்தபோது தனது தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக, ஜெய்ஹிந்த் என்று உரக்க முழக்கமிட்டார். இதனால் திமுகவினரும் அதன் கூட்டணிக் கட்சியினரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

ஆளுநருக்கு எதிர்ப்பு

கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் ரவி தர்மபுரம் ஆதீனத்தை சந்திக்க சென்றபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில அமைப்பினர் அவருடைய வாகன அணிவகுப்பின் மீது பிளாஸ்டிக் குழாயில் கட்டிய கருப்பு கொடிகளை வீசி தாக்குதலில்
ஈடுபட்ட சம்பவமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆளுநர் ரவி, தான் கலந்துகொள்ளும் பல்கலைக்கழக விழாக்களில் தேசிய கல்வி கொள்கை, இந்து மதத்தின் சனாதன தர்மம், இந்தி மொழி கற்பதன் அவசியம், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசி வருவதை திமுக அரசு ரசிக்கவில்லை.

பட்டமளிப்பு விழாவிலும் எதிர்ப்பு

இதனால்தான் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்மையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகனை அழைத்ததை காரணம் காட்டி ஆளுநர் ரவி அரசியல் செய்கிறார். மரபுகளுக்கு மாறாக பல்கலைக்கழக நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட்டு, மாணவர்களிடம் அரசியலை புகுத்துவதாக குற்றம்சாட்டி, அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறாமல் புறக்கணித்தார்.

இப்படி ஆளுநர் ரவி மாநில அரசுக்கு சாதகமாக நடந்து கொள்ளாமல், மத்திய அரசின் அரசியல் முகவர் போல செயல்படுவதாக கருதிய திமுக அரசு அவருடைய அதிகாரத்தை பறிக்கும் விதமாக கடந்த ஏப்ரல் 25-ம் தேதி சட்டப்பேரவையில்
2 முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி அதை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியும் வைத்தது.

திமுகவின் அடுத்த மசோதா

அந்த மசோதாக்களில், தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு இருந்தது.

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டதாக விளக்கமும் அளித்தார்.

பொதுவாக பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநருக்கு மட்டுமே பல்கலை துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 13 அரசு பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களை தமிழக ஆளுநர் ரவிதான் நியமித்து வருகிறார்.

திருப்பி அனுப்பிய ஆளுநர்

தேடல் மற்றும் தேர்வுக் குழுவினால் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் இருந்து கல்வித்தகுதி மற்றும் அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 3 பேரை தேர்வு செய்வார்கள். இந்த குழுவில் பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர், ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் இடம் பெற்றிருப்பார்கள். தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும்  3 பேரிடமும் நேர்முகத் தேர்வு நடத்தி அதில் ஒருவரை துணை வேந்தராக ஆளுநர் நியமிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறையை அடியோடு ஒழித்துக் கட்டும் விதமாக தமிழக அரசு நிறைவேற்றிய இரண்டு மசோதாக்களும் இருந்ததால் தன்னிடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்த மசோதாக்கள் குறித்து ஆளுநர் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்புக்கு சில விளக்கங்களை கோரி கடிதம் எழுதியுள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

திமுகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அந்தக் கடிதத்தில், “தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தம், மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது. இது அரசியல் தலையீட்டிற்கு வழிவகுக்கும். எனவே, இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வட்டார அதிகாரிகள் கூறும்போது, “பல்கலைக்கழக தர நிர்ணயம் மத்திய பட்டியலில் உள்ளது. 1956-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் அடிப்படையிலேயே புதிய மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்கப்ப்டடுள்ளது” என்று தெரிவித்தனர்.

இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அவருடைய அமைச்சர்களுக்கும் கடும் அதிர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

விஸ்வரூபம் அடைந்த பனிப்போர்

“ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் சட்ட மசோதா குறித்து மாநில தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டு இருந்தாலும்கூட அதுபற்றி தலைமைச் செயலாளர் முதலமைச்சருக்கு தெரிவிக்காமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இந்த விளக்க கடிதத்தை அவர் முதலமைச்சருக்குதான் அனுப்பி வைப்பார். எனவே ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் தற்போது விஸ்வரூபம் அடைந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

பொதுவாக ஆளுநர்கள் மாநில அரசுகளுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இதுதான் எழுதப்படாத விதியாக இருந்தது. ஆனால் தற்போது குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர்களில் ஒரு சிலர் மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்ட மசோதாக்கள் விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையாக உள்ளனர்.

ஆளுநர் அளித்த விளக்கம்

அவர்களில் ஒருவர்தான் தமிழக ஆளுநர் ரவி. ஐபிஎஸ் அதிகாரியான அவர் மத்திய அரசின் உளவுத் துறையிலும் பணியாற்றியவர். அதனால் ஒரு சட்ட மசோதாவில் என்னென்ன இருக்கிறது என்பதை ஆராயாமல் முடிவெடுக்க மாட்டார். தற்போது துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்திலும் திமுக அரசு நிறைவேற்றிய 2 மசோதாக்கள் மீது அவர் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அவை சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் அதிரடியாக கூறியிருக்கிறார்.

தமிழக ஆளுநரை அரசியல் செய்கிறார் என்று விமர்சிக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சில நேரங்களில் தனது வசதிக்காக அப்படிக் கூறவும் மறந்து விடுகிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அவரால் சமீபத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்ட சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தவிர்க்க முடியவில்லை. இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கும்படி மத்திய இணை அமைச்சர் எல். முருகனை ஆளுநர் ரவி அழைத்திருந்தார். எனினும் அந்த விழாவில் ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று குற்றம்சாட்டி முதலமைச்சர் ஸ்டாலினோ, அமைச்சர் பொன்முடியோ புறக்கணித்து விடவில்லை.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டதால் விழாவை புறக்கணித்தால் மத்திய அரசின் கடும் அதிருப்திக்கு உள்ளாக நேரிடும் என்பதை திமுக அரசு உணர்ந்திருந்ததுதான் இதற்கான காரணம் என்பது உண்மை. இதனால் திமுகதான் நேரம் பார்த்து அரசியல் செய்கிறது என்ற விமர்சனமும் எழுந்தது.

விமர்சனத்தை கண்டுகொள்ளாத ஆளுநர்

அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆளுநர் ரவி தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களிடமும் மத்திய, மாநில அரசுகளின் நிறைவேற்றப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்டதை அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் ரவி தலையிடுகிறார் என்று கூறி காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து கண்டனம் தெரிவித்தன. ஆனால் திமுக அரசோ ஆளுநர் செய்தது, தவறில்லை என்று விளக்கம் அளித்து அமைதி காத்தது. இப்போதும் திமுக கூட்டணி கட்சிகளால் அதே போன்ற காட்சிகள் அரங்கேற்றப்படலாம்.

அதாவது ஆளுநர் மீது உள்ள திமுகவிற்கு உள்ள கோபத்தை புரிந்துகொண்டு அதன் கூட்டணிக் கட்சிகள் இனி தொடர்ந்து வசைமாரி பொழியும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. என்றபோதிலும் ஆளுநர் ரவி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார் என்பது நிச்சயம்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

Views: - 449

0

0