குருப்பெயர்ச்சி நாளில் தேர்தல் பயணம் தொடங்கிய உதயநிதி : ஊருக்கு பகுத்தறிவு உபதேசம்..!! உண்மையில் எல்லாம் வெளிவேஷம்!!

21 November 2020, 8:15 am
udhayanidhi cover - updatenews360
Quick Share

சென்னை:முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி போலவே தானும் ஒரு பகுத்தறிவாளர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கழகத்தின் புதிய வாரிசு உதயநிதி தனது நூறுநாள் தேர்தல் பிரச்சாரத்தை சோதிட நம்பிக்கைப்படி நல்ல நாள் பார்த்து குருப்பெயர்ச்சி நாளில் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது அவரது பகுத்தறிவு வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கப்படி கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றாலும், பொதுவாக மனிதர்களுக்கு ஜோதிடம் கணிக்க அடிப்படையாக இருக்கும் திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 20-ஆம் தேதிதான் குருப்பெயர்ச்சியாகும். ஜோதிடப்படி குரு மிகவும் புனிதமான கோளாகவும், குருப்பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிகளுக்கு நன்மைகள் வழங்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த நாளில்தான் உதயநிதி தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

கடந்த விநாயக சதுர்த்தி நாளில் விநாயகர் படத்துடன் உதயநிதி வாழ்த்துக் கூறுவதாக சமூக ஊடகங்களில் பரவியது திமுகவில் இன்னும் பகுத்தறிவுக் கொள்கையுடன் மூத்த தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிள்ளையார் சிலைகளை உடைக்கும் பல போராட்டங்களை திராவிட இயக்க நிறுவனர் பெரியார் நடத்தியிருக்கிறார். “பிள்ளையாரையும் உடைக்கமாட்டோம். பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்கமாட்டோம்” என்று திமுகவின் நிறுவனர் பேரறிஞர் அண்ணா கூறினார்.

அண்ணாவும் அதன் பின் திமுக தலைவரான கருணாநிதியும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத நிலையில், பேஸ்புக்கில் விநாயகர் சிலையின் போட்டோ போட்டு உதயநிதி வாழ்த்து சொன்னது திராவிட இயக்க சிந்தனையாளார்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இதனால், உதயநிதி இந்தப்படத்தை வெளியிட்டதற்கு பல சாக்குகளைச் சொல்லி தான் ஒரு நாத்திகன் என்றும் தனது தாய் மட்டும் கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்றும் கூறி சமாளித்தார்.

ஆனால், கருணாநிதியுடன் இருந்தவர்கள் மட்டுமே பகுத்தறிவுக் கொள்கைகளில் உறுதியாக இருந்தார்கள். கருணாநிதி காலத்திலேயே அடுத்த தலைமுறை திமுகவினர் பலர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதில் தொடங்கி பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது வரை ஜோதிடப்படி நல்ல நாள் பார்த்தே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். தனிப்பட்ட முறையில் பலரும் கோயிலுக்குச் சென்று வருகின்றனர். ஆனால், இதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் மேலுக்கு பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்வார்கள்.

periyar - udhayanidhi -updatenews360

உதயநிதியும் தான் ஒரு பகுத்தறிவாளர் என்று சொல்லிக்க்கொண்டாலும் நல்ல நாள் பார்த்தே பல நிகழ்ச்சிகளைத் தொடங்குகிறார். ஜோதிடத்தில் தனிப்பட்ட மனிதர்களுக்குப் பலன் சொல்வதற்கு திருக்கணித பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது. கோயில்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வாக்கிய பஞ்சாங்கம் பின்பற்றப்படுகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 20-ஆம் தேதி குருப்பெயர்ச்சியாகும். இந்த நாளில்தான் தனது அரசியலில் மிகவும் முக்கியமானது என்று கருதும் உதயநிதி, நூறுநாள் தேர்தல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதைப் பார்க்கும் கட்சியில் இன்னும் கொள்கைப்பிடிப்புடனும் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் மீது பற்றுடனும் இருப்பவர்கள் உள்ளக்குமுறலுடன் இருக்கிறார்கள்.

நாள் பார்த்ததுடன் இடத்தையும் ஜோதிடர்களே குறித்துக்கொடுத்திருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. குருபகவான் கோயில் இருக்கும் ஆலங்குடி திருவாரூர் மாவட்டத்தில் இருப்பதால்தான் அங்கிருந்து உதயநிதி சுற்றுப்பயணத்தைத் தொடங்கிருக்கிறார் என்று கருதப்படுகிறது. கருணாநிதி பிறந்த திருக்குவளை அந்த மாவட்டத்தில் இருப்பது ஒரு கூடுதல் காரணமாகக் கூறப்படுகிறது என்று உடன்பிறப்புகளே எண்ணுகிறார்கள்.


‘மூன்றாம் கலைஞர்’ என்று ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டாலும் உதயநிதி நாள், நட்சத்திரம் பார்த்துதான் எதையும் செய்கிறார் என்பதை அவரது சுற்றுப்பயணத்தின் முதல் நாளே அம்பலப்படுத்தியுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பகுத்தறிவு உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான் வீட்டில் இருப்பவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. வீட்டில் மட்டுமே இருப்பவர்கள் திமுகவின் கொள்கைகளைப் பின்பற்றாமல் இருக்கலாம். வீட்டில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரும்போது சொல்லொன்றும் செயலொன்றும் இருக்கலாமா என்று கேள்வியும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

Views: - 32

0

0