போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ‘அல்வா’ : தீபாவளி ஸ்வீட் டெண்டரில் முறைகேடு?…

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2021, 7:23 pm
Diwali -Updatenews360
Quick Share

தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக ஒரு கிலோ இனிப்பும், காரமும் வழங்கப்படுவது வழக்கம்.
தீபாவளியை குடும்பத்தினருடன் இனிப்பை பகிர்ந்து உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக இப்படி ஸ்பெஷல் ஸ்வீட் வழங்கப்படும். இதுபோல இனிப்பு வழங்குவது போக்குவரத்துக் கழகங்களில் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு அல்வா

பெரும்பாலும் தரமான இனிப்பு, கார வகைகள் வழங்கப்படுவதால் இந்த தீபாவளி ஸ்வீட்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களிடையே வரவேற்பு கிடைக்கும். கடந்த 10 ஆண்டுகளாக இப்படி சுவையான தீபாவளி இனிப்பு வகைகளை சாப்பிட்டு வந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு கடும் அதிர்ச்சி.

Diwali Sweets | Diwali Home Made Sweets | Diwali Sweet Recipes | Diwali  homemade sweets

காரணம் அவர்களுக்கு தரமற்ற ஸ்வீட் மட்டுமே கிடைக்கும் என்ற ‘அல்வா’ செய்தி வெளியாகி இருப்பது தான். ஸ்வீட் கொள்முதலில் அதிகமான கமிஷன் வாங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, போக்குவரத்துக்கழக ஊழியர்களின் இனிப்பு ஆசைக்கு ஆப்பு வைத்து விடும்போல் தெரிகிறது.

Transport strike in TN enters 3rd day, govt says many staff returning to  work - The Statesman

ஏற்கனவே ஒரு யூனிட் மின்சாரத்தை 20 ரூபாய்க்கு விலை கொடுத்து மின்சாரம் வாங்கியதாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்வீட் கொள்முதல் செய்யும் விவகாரமும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது, அவர்களிடையே பரபரப்பாக பேசப்படும் விஷயமாகவும் மாறி இருக்கிறது.

தீபாவளி ஸ்வீட் 100 டன்

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் 9 மண்டல போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்வீட் வழங்க நெய் கலந்த ஸ்வீட் ஒரு கிலோ 500 ரூபாய் என்ற விலையில் 100 டன் வாங்கப்பட்டுள்ளது.

தற்போது திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் ராஜகண்ணப்பன். இந்த ஆண்டு தீபாவளி அடுத்த மாதம் 4ம் தேதி வருவதையொட்டி போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஸ்வீட் வாங்க யாரிடம் ஆர்டர் கொடுப்பது என்பது பற்றி அண்மையில் அவர் ஆலோசித்தார். ஆர்டரை பெறுவதற்காக பல்வேறு நிறுவனத்தினரும் போட்டி போட்டு அமைச்சரை சந்தித்துள்ளனர்.

50 per cent buses may fail FC tests at automatic testing stations'- The New  Indian Express

பொதுவாக போக்குவரத்து துறை அமைச்சர் பரிந்துரை செய்யும் நிறுவனத்தின் இனிப்பு, கார வகைகளையே அதிகாரிகள் கொள்முதல் செய்து ஊழியர்களுக்கு வழங்குவார்கள். அதில் தரத்தையும், கட்டுபடியாகும் விலையை உறுதி செய்து கொண்ட பின்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து இனிப்புகளை கொள்முதல் செய்வார்கள். இதுதான் நடைமுறை.

தலையிட்ட அமைச்சரின் மகன்

இந்த நிலையில்தான் போக்குவரத்து துறை அமைச்சரின் மகன் திலீப் இந்த விஷயத்தில் அவராகவே தலையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் போக்குவரத்து கழகத்தின்
சில முக்கிய உயர் அதிகாரிகளை சந்தித்து இனிப்பு கொள்முதல் செய்வதில் பல நிபந்தனைகளை விதிக்கும்படி வற்புறுத்தியதாகவும் தெரிகிறது.

Raja Kannappan - Wikipedia

எனினும் சில அதிகாரிகள் ’கடந்த தீபாவளிக்கு நெய் ஸ்வீட் கிலோ 500 ரூபாய் என்று கொள்முதல் செய்து இருக்கிறோம். இந்த ஆண்டு அதைவிடக் குறைவான விலையில் ஆவினில் வாங்கலாம்’ என்று யோசனை தெரிவித்துள்ளனர்.

டெண்டரில் அரசியல்

இந்த நிலையில்தான், தீபாவளி ஸ்வீட் வாங்குவது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் விடுத்துள்ள டெண்டர் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது இனிப்பு தயாரித்து கொடுக்கும் நிறுவனம், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டிருக்கவேண்டும், அதற்கு தகுந்த ஆவண ஆதாரங்களும் இருக்கவேண்டும் என்ற முக்கிய நிபந்தனைகள் அதில் விதிக்கப்பட்டிருக்கிறது.

வருடத்துக்கு 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் என்றால், நிச்சயமாக அதில் சிறு சிறு நிறுவனங்கள் வராது என்பது வெளிப்படை. அப்படியென்றால் தங்களுக்கு தெரிந்த அல்லது அதிக கமிஷன் கொடுக்கும் இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்களை மட்டுமே இந்த போட்டியில் கலந்துகொள்ள வைக்கும் ஒரு நூதன உத்தியாக இது பார்க்கப்படுகிறது.

டெண்டரில் விதிமுறைகள் திருத்தம்

100 டன் ஆர்டரை ஒரே நிறுவனத்துக்கு வழங்குவதற்காக டெண்டர் விதிமுறைகளைத் திருத்தி இருப்பதும் அதற்கான படிவத்தை முன்கூட்டியே தெரியப்படுத்தாமல்
ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்வீட்களை வாங்குவதற்கு கும்பகோணம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை விரைவு போக்குவரத்து கழகம், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கோவை, மதுரை, சேலம் என 9 போக்குவரத்துக் கழகங்களுக்கும் தனித் தனி டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒரே தேதியில்தான் இவற்றுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

அரசுக்கு வருமானம்

இந்த டெண்டர் விதிமுறை குறித்து, போக்குவரத்து கழக சங்க பிரதிநிதிகள் சிலர் கூறும்போது, “ஒவ்வொரு வருடமும் தரமான நெய்யில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள்தான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு இனிப்பை தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திடமே வாங்கலாம். ஒரு கிலோ 420 ரூபாய்க்கு வாங்க முடியும். ஆனால் ஏன் தனியார் நிறுவனத்திடம் ஒரு கிலோ இனிப்பை 600, 800 ரூபாய்க்கு வாங்க நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆவினில் வாங்கினால் ஒரு கிலோவுக்கு 180 ரூபாய் மிச்சப்படும். அரசுக்கும் வருமானம் வரும்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் அரசுக்கு குறைந்த பட்சம் 2.25 கோடி ரூபாய் மிஞ்சும்.

TN govt rejects DMK's call on resolution against Centre | Deccan Herald

தனியார் நிறுவனங்களிடம் வாங்கும்போது இந்தப் பணம் விரயமாகிறது. ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து இனிப்பை ஆர்டர் செய்வதற்காக 30 சதவீத கமிஷன் பேரம் பேசப் பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் டெண்டர் விவரங்கள் பற்றிய தகவல்களின்படிப் பார்த்தால் அதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட இனிப்பு நிறுவனங்கள் தமிழகத்தில்
மிக மிக குறைவு.

அதிக விலை : தரமில்லாத ஸ்வீட்

அதனால் அந்த நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர்களை கிடைக்க வைக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது. இல்லையென்றால் இவ்வளவு கடும் விதிமுறைகள் தேவையில்லை. கடந்த பல ஆண்டுகளாக தீபாவளிக்கு ஸ்வீட் வழங்குவதில் எந்த சர்ச்சையும் எழுந்தது இல்லை. இப்போதும்கூட இந்த விவகாரம் அதிக கமிஷன் கேட்பதாக கூறப்படுவதால்தான் வெளியே கசிந்து விட்டது.

போக்குவரத்து கழகங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இது ஏன் அதிக விலை கொடுத்து தரமில்லாத ஸ்வீட்களை வாங்கி மேலும் நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும். தரம் குறைந்த ஸ்வீட் வாங்குவதைத் தவிர்த்தால் அரசுக்கும் 2 கோடி ரூபாய் மிச்சப்படுத்தலாம். மேலும் ஒரு அரசு நிறுவனத்தின் மூலம் வாங்குவதால் இன்னொரு அரசு நிறுவனமான ஆவினும் லாபம் அடையும். எனவே ஆவின் இருக்கும்போது அதிக கமிஷனுக்கு ஆசைப்பட்டு தனியார்களிடம் போவதை முதலமைச்சர் ஸ்டாலின் தடுக்கவேண்டும்” வலியுறுத்தினர்.

உண்மையை உரைத்த சவுக்கு சங்கர்

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எப்போதும் திமுகவுக்கு ஆதரவாக பேசும் பிரபல பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூட, ஸ்வீட் வாங்குவதில் முறைகேடு நடப்பதற்கு தகுந்த வகையில் டெண்டர் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

அதாவது “ஒரு கிலோவுக்கு 800 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் 30 சதவீத கமிஷன் பெறுவதற்கு முயற்சிகள் நடக்கிறது. போக்குவரத்து கழக ஸ்வீட் டெண்டரில் அவசியமான நிபந்தனைகள் எதுவும் கூறப்படவில்லை. குறிப்பாக ஏலதாரர் இனிப்பு விற்பனையில் அல்லது தயாரிப்பில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றி எதுவும் காணப்படவில்லை. 100 கோடி விற்றுமுதல் என்பது டெண்டர்கள் ஒரு ஒற்றை நிறுவனத்திற்கு செல்வதை உறுதி செய்கிறது” என்று கூறியிருக்கிறார்.

ஸ்வீட் டெண்டர் என்னாச்சு?

மேலும் சவுக்கு சங்கர் இன்று தனது ட்விட்டர் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை மாநகர பஸ்சில் திடீரென ஏறி ஆய்வு செய்ததையும் விமர்சித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “இதெல்லாம் இருக்கட்டும். போக்குவரத்துக்கழக ஸ்வீட் டெண்டரை ஆய்வு பண்ணுங்க. ஆறு மாசம் ஆகப்போகுது இதெல்லாம் போர் அடிச்சிருச்சு முதல்வரே அடுத்து மராத்தான்தானே? ” என்று இந்த ஸ்வீட் விவகாரத்தை மீண்டும் கிளறி இருக்கிறார். அதேபோல் ஸ்வீட் டெண்டர் என்னாச்சு அமைச்சரே! என்று ராஜகண்ணப்பனையும் அவர் கலாய்த்திருக்கிறார்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

அரசியல் விமர்சகர்கள் கூறும் போது, “கடந்த சில வாரங்களாகவே தமிழக அமைச்சர்களில் சிலர் மறைமுக கமிஷன் பெறுவதில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது. மின்துறையில் இதுபோல் நடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகாவில் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. அவருடைய மகனே டெண்டர் விதிமுறைகளை உருவாக்கியதாக பாதிக்கப்பட்ட சிறிய அளவிலான இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

10 Places That Sell The Best Diwali Sweets In Dubai

தரமான இனிப்பு 600, 800, 1000 ரூபாய்க்கு கூட கிடைக்கும். ஆனால் தற்போது போக்குவரத்து கழகம் பெருத்த நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டுமா? என்ற கேள்வி எழுவது இயல்புதான். 30 சதவீத கமிஷன் பெறுவதற்காக அதிக விலைக்கு வாங்கும்போது அது தரமான இனிப்பாக இருக்குமா என்பதும் சந்தேகம்தான். மேலும் சிறு நிறுவன கடைகளில் நெய்யால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் 400 முதல் 500 ரூபாய்க்கே கிடைக்கிறது. எனவே இதில் முறைகேடு நடக்காமல் தடுப்பது தமிழக அரசின் கடமை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 281

0

0