3 மாநிலங்களில் கடும் குஸ்தி.. திணறவைக்கும் காங். தலைவர்கள் : சோனியாவுக்கு சோதனை மேல் சோதனை!!
Author: Udayachandran RadhaKrishnan27 August 2021, 9:01 pm
நாட்டிலுள்ள 28 பெரிய மாநிலங்களில், காங்கிரசின் நேரடி ஆட்சி நடப்பது ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஷ்கர் ஆகிய மூன்றில் மட்டும்தான். ஆனால் இந்த மூன்றுமே ஏதாவது ஒரு விதத்தில் காங்கிரஸ் தலைமைக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
அண்மையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக, இளம் தலைவர் சச்சின்
பைலட் போர்க்கொடி உயர்த்தினார். அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 5 பேருக்கும் துணை முதலமைச்சர், அமைச்சர் பதவிகளை வழங்கவேண்டும், என்று தற்போது அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அசோக் கெலாட் அசைந்து கொடுப்பதாக இல்லை. சச்சின் பைலட் வைத்த கோரிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. சோனியாவும், ராகுலும் சமரசம் செய்து வைத்ததால் அவரும் வேறுவழியின்றி அமைதி காத்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து பஞ்சாபில் ஒரு பூகம்பம் வெடித்தது. முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சித்து வெளிப்படையாகவே கொந்தளித்தார். முதலமைச்சரை கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கினார். இதனால் அமரீந்தர் சிங் நொந்து போனார். கட்சியின் தலைவர்களான சோனியாவும், ராகுலும் சித்துவுக்கு பணிந்து போய் அவரை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகவும் நியமித்தனர்.
அதன்பிறகு, டெல்லி தலைமைக்கு சற்று பணிந்து நடப்பது போல் பாவ்லா காட்டிய சித்து, அடுத்தாண்டு பஞ்சாப்பில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக தனது ஆலோசகர்களாக
பியாரிலால் கார்க், மல்வீந்தர் சிங் மாலி என்ற இருவர் உள்பட 4 பேரை நியமித்துக் கொண்டார். உண்மையில் கட்சி மேலிடம் அவருக்கு 2 ஆலோசகர்களை மட்டுமே நியமித்துக் கொள்ள
அனுமதி வழங்கியிருந்தது.
சித்துவின் தீவிர ஆதரவாளர்களான இவர்கள் இருவரும், முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக தங்கள் இஷ்டத்துக்கு பொதுவெளியில் கருத்துகளை தெரிவிக்க தொடங்கினர். குறிப்பாக மல்வீந்தர்சிங் மாலி, “காஷ்மீர் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. காஷ்மீர் தனிநாடு. அது ஆக்கிரமிக்கப்பட்ட பூமி” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இன்னொரு பக்கம் பியாரிலால் கார்க் மாநில அமைச்சர் ராஜிந்திர் சிங் மூலம் முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார். அவர் திடீரென்று 28 எம்எல்ஏக்களை திரட்டி 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் அமரீந்தர் சிங்கை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்கக் கூடாது சித்துவைத்தான் அறிவிக்கவேண்டும் என்று திடீரென போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். இதை சமாளிப்பதற்குள் காங்கிரசுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.
எனினும் அமரீந்தர் சிங்தான் 2022-ல் முதலமைச்சர் வேட்பாளர் என காங்கிரஸ் தலைமை திட்டவட்டமாக அறிவித்து பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்தது.
அதேபோல் சித்துவுக்கும் ‘அட்வைஸ்’ வழங்கப்பட்டது. இதுபற்றி பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் கூறுகையில், “மல்வீந்தர் சிங் மாலி கூறிய கருத்துக்கு ஒட்டுமொத்த கட்சியும், மாநிலமும் எதிராக உள்ளது. காஷ்மீர் நம் நாட்டின் ஒரு பகுதி என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
சித்துவின் இரு ஆலோசகர்களையும் கட்சித் தலைமை நியமிக்கவில்லை. அவர்களை பணி நீக்கம் செய்யும்படி சித்துவிடம் கூறியுள்ளோம். அதை அவர் செய்யவில்லை என்றால், நான் செய்வேன். கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துபவர்கள் எங்களுக்கு தேவையில்லை” என்று எச்சரித்தார்.
ராஜஸ்தான், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் பிரச்சினைகளுக்கு ஒரு வழியாக தீர்வு கண்ட பிறகு சோனியாவும் ராகுலும் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர்.
ஆனால் அதனை சீர்குலைப்பதுபோல் அடுத்த பிரச்சனை காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஷ்கர் மாநிலத்தில் வந்துவிட்டது. 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு 70 எம்எல்ஏக்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் 2018-ம் ஆண்டு இறுதியில்
சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டபோது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது.
வழக்கம்போல் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியில் இரு பெரும் தலைவர்களாக உள்ள
பூபேஷ் பாகல், டி.எஸ்.சிங் தியோ ஆகிய இருவரில் யாரை முதலமைச்சராக நியமிப்பது? என்ற கேள்வி எழுந்தது. அப்போது டெல்லி மேலிடம் இருவரையும் சமாதானப்படுத்தும் விதமாக ஆளுக்கு இரண்டரை வருடங்கள் முதலமைச்சராக இருந்து கொள்ளுங்கள் என்று சமரசம் செய்து வைத்தது.
அப்போது பூபேஷ் பாகல் முதலமைச்சராகவும், சிங் தியோ சுகாதாரத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி பார்த்தால், பூபேஷ் பாகல் கடந்த ஜூன் மாத இறுதியிலேயே முதலமைச்சர் பதவியில் இருந்து இறங்கி, சிங் தியோவிற்கு வழிவிட்டு முதலமைச்சர் பொறுப்பில் அவரை உட்கார வைத்து இருக்கவேண்டும்.
ஆனால் சொன்னபடி செய்யாமல், அவருடைய ஆதரவு எம்எல்ஏக்கள் இப்போது என்ன சொல்கிறார்கள் தெரியுமா?.. “ஆளுக்கு இரண்டரை வருடங்கள் என பிரித்துக் கொண்டு ஆட்சி செய்வது நல்ல அணுகுமுறை அல்ல. அது மாநிலத்தில் ஸ்திரத்தன்மை இல்லாமல் செய்துவிடும். மேலும் மாநிலம் எந்த முன்னேற்றமும் காணாமல் போய்விடும். இப்போது மாநிலத்தில் சிறப்பான ஆட்சிதானே நடந்து வருகிறது. அதில் என்ன குறை கண்டார்கள்?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான பி.எல். புனியாவும் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு ஆதரவாக நிற்பதுதான் இதில் வேடிக்கை.
சுகாதாரத் துறை அமைச்சர் சிங் தியோவின் ஆதரவாளர்களோ, “பதவி ஏற்கும்போது, இரண்டரை வருடங்கள் கழித்து ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன் என்று கூறிவிட்டு இப்போது முதலமைச்சர் பின் வாங்குவது சரியல்ல. மக்களும் அதை ஏற்க மாட்டார்கள். இது எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி விடும்” என்கின்றனர்.
இதையடுத்து இருதரப்பினரையும் டெல்லிக்கு அழைத்து சமரசம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் சத்தீஷ்கர் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது,” ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களிலுமே காங்கிரசுக்கு இடியாப்ப சிக்கல் உருவாகியிருக்கிறது. இதற்கு கட்சித் தலைமையும் ஒரு காரணம். ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முன்நிறுத்திதான் 2018-ல் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. ஆனால் வெற்றி பெற்றவுடன் அசோக் கெலாட் முதலமைச்சர் பதவியை தட்டிப் பறித்து விட்டார். இதை எப்படி காங்கிரஸ் மேலிடம் அனுமதித்தது?…
பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங்கின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த சித்துவுக்கு அதிகமான உரிமைகளை கொடுத்ததும் காங்கிரஸ் மேலிடம்தான். இப்போது அவரை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது. இதனால் சோனியா உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்,
என்ற பேச்சும் உள்ளது.
சத்தீஷ்கரைப் பொறுத்தவரை எளிதில் தீர்க்கக் கூடிய பிரச்சனைதான். ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுங்கள் என்று சோனியாவும், ராகுலும் உத்தரவிட்டால் போதும். பூபேஷ் பாகல் கேட்காமலா, போய்விடுவார்?அதை ஏன் இவ்வளவு ‘ஜவ்’வாக இழுக்கிறார்கள் என்பது புரியவில்லை. ஆனால் அவருக்கு இப்போது 40 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறுகிறார்கள். இது எதில் போய் முடியுமோ? தெரியவில்லை.
இந்த 3 மாநிலங்களிலும் இதே நிலை நீடித்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது
காங்கிரசுக்கு பின்னடைவைத்தான் ஏற்படுத்தும். சோனியாவும், ராகுலும் சொல்வதை கட்சியில் யாருமே கேட்பதில்லை என்ற தவறான எண்ணம் பொதுமக்களிடம் ஏற்படும். எனவே இருவரும் உறுதியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும். இல்லையென்றால் இது போன்ற கோஷ்டி பூசல்களே கட்சியை காலி செய்துவிடும்” என்று குறிப்பிட்டனர்.
0
0