கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் திருமணம் செல்லும்: ஆட்கொணர்வு மனுவில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!….

Author: Aarthi
9 October 2020, 11:49 am
kalakurichi-mla-marriage-1-updatenews360-1
Quick Share

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவின் திருமண விவகாரத்தில் சௌந்தர்யா தனது கணவருடன் செல்லலாம் என தீர்ப்பளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt - updatenews360

கள்ளக்குறிச்சி தனித் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு. இவருக்கு வயது 34. இவர் தன்னை விட 15 வயது குறைவான, தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவரின் 19 வயது மகள் சௌந்தர்யாவை காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் காதலைப் பெற்றோர் ஏற்காத நிலையில், அக்டோபர் 1-ம் தேதி சௌந்தர்யா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் பிரபுவின் பெற்றோர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு சௌந்தர்யாவின் வீட்டில் மறுப்பு தெரிவித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி தன்னை முழு மனதுடன் திருமணம் செய்துகொண்டதாக பிரபு காணொலி ஒன்றை வெளியிட்டார்.

அதிமுக எம்எல்ஏ பிரபு தன் மகளைக் கடத்தியிருப்பதாகவும், மகளை மீட்டு, கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சௌந்தர்யாவின் தந்தை சாமிநாதன் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ பிரபுவால் கடத்தப்பட்ட தன் மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அந்த கல்லூரியில் படிக்கும் பெண்ணிடம் எம்எல்ஏ பிரபு ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிக் கடத்திவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

பெண்ணின் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், சௌந்தர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று சௌந்தர்யா மற்றும் அவரது தந்தை நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், தான் முழு சம்மத்துடன் தான் பிரபுவை திருமணம் செய்து கொண்டதாக சௌந்தர்யா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, சௌந்தர்யா தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் கணவர் பிரபுவுடன் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இதுகுறித்து சௌந்தர்யாவின் தந்தை சுவாமி நாதன் கூறுகையில், நான் என் மகளிடம் பேசினேன், நான் பேசுவதை எதையும் எனது மகள் காது கொடுத்து கேட்கவில்லை. அந்த அளவிற்கு எனது பெண்ணை மூளைச்சலவை செய்து மனதை கலைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

4 வருடத்திற்கு முன்பிலிருந்து காதல் என சொல்கிறார்கள், அப்போது எனது மகளுக்கு வயது 15 தான், இதுகுறித்த வழக்கை மேல்முறையீடு செய்யவுள்ளேன் எனவும் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

Views: - 57

0

0