OPSக்கு விழுந்த இன்னொரு அடி… வெற்றிக்கு மேல் வெற்றி… அதிமுகவின் அடையாளமாக மாறுகிறாரா EPS..!!

Author: Babu Lakshmanan
20 July 2022, 7:44 pm
Quick Share

ஒற்றை தலைமை

அதிமுகவிற்கு ஒற்றை தலைமையே தேவை அப்போதுதான் திமுக அரசுக்கு எதிராக கட்சியை வலிமையாக வழி நடத்திச் செல்ல முடியும், அடுத்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றவும் இயலும் என்ற தீவிர சிந்தனை, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்பு அனைத்து அதிமுக தொண்டர்களிடமும் உருவானது.

இந்த எண்ணம் கடந்த மாத தொடக்கத்தில் உச்சத்தை எட்டியது. குறிப்பாக சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத் தலைமையே வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Jayakumar - Updatenews360

இந்தத் தகவலை ஊடக செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் போட்டு உடைத்தார். மேலும் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

தடை விதிக்க மறுப்பு

ஆனால் ஒற்றை தலைமையை முற்றிலும் விரும்பாத ஓ பன்னீர்செல்வம், ஏன் இரட்டை தலைமை நன்றாகத்தானே சென்று கொண்டு இருக்கிறது? என்று கருத்தை தெரிவித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். எனினும் அவருக்கு ஆதரவு குரல் மிக மிக குறைவாகவே இருந்தது.

இதனால் ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக ஓபன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டுக்கும் சென்றார்.

முதலில் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அவருடைய மனுவை விசாரித்து, கட்சி விவகாரங்களில் பொதுவாக கோர்ட் தலையிடுவதில்லை பொதுக்குழுவில் இதைத்தான் விவாதிக்கவேண்டும், இதை விவாதிக்க கூடாது என்றெல்லாம் உத்தரவிட முடியாது என்று கூறியதுடன் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவும் மறுத்தார்.

இந்த தீர்ப்பு ஜூன் 22-ம் தேதி இரவு 10 மணி அளவில் வெளியான நிலையில், அவசர அவசரமாக நள்ளிரவு 12 மணிக்கு, ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். அவருடைய மனுவை விசாரணை செய்த இரண்டு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு நடத்த அனுமதி அளித்தது. எனினும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்கள் தவிர வேறு புதிய தீர்மானம் எதையும் நிறைவேற்றவோ, விவாதிக்கவோ கூடாது என்று ஜூன் 23-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு உத்தரவிட்டது.

அன்று காலை நடந்த அந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு சிறப்பு பொதுக்குழு சென்னையில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தையும் நடத்தவிடாமல் தடுக்க ஓ பன்னீர்செல்வமும் அவருடைய ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் போராடினர்.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு தொடர்பாக ஏதாவது நிவாரணம் தேவை என்றால் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியை அணுகலாம் என்று தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் தரப்பினர் தடை கேட்டனர். ஆனால் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியோ அதற்கு மறுத்ததுடன் பழைய, புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கும் ஜூலை 11ம் தேதி காலை 9 மணிக்கு, தான் அளித்த பரபரப்பு தீர்ப்பில் அனுமதி அளித்தார்.

பொதுச்செயலாளர்

இதைத்தொடர்ந்து சென்னை வானகரத்தில் திட்டமிட்டபடி நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இது எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமின்றி அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும் அமைந்தது. அத்துடன் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியதுடன், கட்சியின் பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும் நியமித்தனர்.

EPS Poster - Updatenews360

ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பாக
காலை 8.30 மணிஅளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக அவருடைய ஆதரவாளர்கள் அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு அங்கிருந்த மடிக்கணினிகள் மேஜை, நாற்காலிகளையும் அடித்து நொறுக்கியதுடன்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கடுமையாக தாக்கியதும் செய்தி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சீல்

இதனால் இருதரப்பினருக்கும் இடையே எழுந்த மோதலால் அதிமுக அலுவலகத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

இந்த சீலை அகற்றிவிட்டு கட்சி அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

Admk Office Seal - Updatenews360

வங்கிகளுக்கு கடிதம்

இது ஒருபுறமிருக்க பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால்
கடும் அதிர்ச்சி அடைந்த ஓ பன்னீர்செல்வம் அன்றைய தினமே அதிமுகவின் வங்கி கணக்குகள் பராமரிக்கப்பட்டு வரும், கரூர் வைஸ்யா வங்கியின் மயிலாப்பூர் கிளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதில், “ஜூலை 11-ம்தேதி சட்ட விரோதமாக பொதுக்குழு நடத்தப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசனை அதிமுக பொருளாளராக நியமித்துள்ளனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் நான்தான் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களிலும், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள் அடிப்படையிலும் உள்ளேன். எனவே, திண்டுக்கல் சீனிவாசனோ அல்லது வேறு யாருமோ கட்சியின் கணக்குகளை இயக்க அனுமதிக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அதேநேரம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்துள்ளது குறித்த தகவலை நியமன கடிதம் மூலம் வங்கிக்கு தெரியப்படுத்தினார்.

EPS - Updatenews360

இதை ஏற்றுக்கொண்ட வங்கி அதிமுகவின் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்க கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு நேற்று அனுமதித்து அளித்தது.
இது EPS தலைமையிலான அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமும், வெற்றியும் ஆகும். ஓபிஎஸ்சும் அவருடைய ஆதரவாளர்களும் மீண்டும் ஒருமுறை மண்ணைக் கவ்வினர் என்பதே உண்மை.

மிகப்பெரிய வெற்றி

இந்த நிலையில்தான் தலைமைக் கழக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கில் இன்று மதியம் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது தனி நீதிபதி சதீஷ்குமார், அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். மேலும் ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், அங்கு போதிய போலீஸ் பாதுகாப்பு போடப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த இன்னொரு மிகப்பெரிய வெற்றியாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்சுக்கு கட்சியில் இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவும் ஜூலை 11-ம் தேதி காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர் நடந்து கொண்ட அத்துமீறல் போக்கினால் தவிடுபொடியாகி போய்விட்டது. அன்று அவரும் அவருடைய ஆதரவாளர்களும் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, ஆடிய ஆட்டம் தொலைக்காட்சி செய்தி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பானதால் அதை பார்த்த லட்சோப லட்சம் மக்கள் முகம் சுளித்தனர்.

ஓபிஎஸ், தன்வசம் உள்ள ஆதரவாளர்களுடன் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்திற்கு சென்று தனது கருத்தை பதிவு செய்திருக்கவேண்டும். ஆனால் அதைச் செய்ய அவர் தவறிவிட்டார். பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், கட்சித்தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருக்கும்போது கட்சி தன் பக்கம் இருக்கிறது என்று ஓபிஎஸ் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

தனிமரம்

கள்ளக்குறிச்சி கலவர விவகாரத்தில், திமுக அரசை எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் ஓபிஎஸ்சுக்கு அப்படி கண்டனம் தெரிவிக்க மனம் வரவில்லை.

அதேபோல் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூட மாநில நிதி அமைச்சர்கள் கலந்துகொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் திமுக அரசு இதற்கு ஏன் தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலினை சாடியிருக்கிறார். இதிலிருந்தே திமுகவை எதிர்ப்பதில் யார் மிக உறுதியுடன் இருக்கிறார்கள் என்பது அதிமுக தொண்டர்களுக்கு புரியும். அதனால் இனியும் ஓபிஎஸ்சை அதிமுக தொண்டர்கள் நம்புவார்களா? என்பது சந்தேகம்தான். ஓபிஎஸ், தனிமரம் ஆகிவிட்டார் சொல்ல வேண்டும்.

கட்சியின் பெரும்பான்மை பலம் எடப்பாடிபழனிசாமியின் பக்கம் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. எனவே இனியும் ஓபிஸ் கோர்ட் படிகளை ஏறிக் கொண்டு இருப்பதை விட திமுகவிலோ, பாஜகவிலோ சேரலாம். அல்லது சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைந்து ஒரு புதிய கட்சியை தொடங்கலாம் என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 533

1

0