கல்லூரி படிப்பிற்கு நுழைவுத்தேர்வா..? எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை..!!

22 October 2020, 12:45 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : கல்லூரி படிப்பிற்கு நுழைவுத் தேர்வு என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என உயர்கல்வித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த முயற்சித்து வருகிறது. இது தொடர்பான விபரங்களை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி, கருத்துக்களை கேட்டு வருகிறது. அந்த வகையில், மும்மொழிக் கல்வி கொள்கை உள்ளிட்ட சில அம்சங்களுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக ஆராய்வதற்காக, உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு கடந்த சில நாட்களாக, புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள உயர்கல்விக்கான அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வந்தது.

இந்த நிலையில், கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என இடம்பெற்றுள்ள அம்சத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை அனுப்பியுள்ள அறிக்கையில், கல்லூரிப் படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடந்து வரும் ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வி செயலர் அபூர்வா உள்பட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Views: - 0

0

0