ஹிஜாப் எழுப்பிய சர்ச்சை… நீதிமன்றத்தின் தீர்ப்பு பலனா..? பாதிப்பா..?

Author: Babu Lakshmanan
15 March 2022, 7:49 pm
Quick Share

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.பெண்கள் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி ஹிஜாப் சர்ச்சை எழுந்தது.

ஹிஜாப் சர்ச்சை

இந்தக் கல்லூரியில் தலையை மூடும் விதமாக ஹிஜாப் அணிந்து வருவதற்கு முதல்வர் அனுமதி மறுத்ததாக கூறி 6 முஸ்லிம் மாணவிகள் கல்லூரி வாசலில் போராட்டம் நடத்தினர். மேலும் சில கல்லூரிகளிலும் இதுபோல் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டது.

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் எனக் கூறி இந்து மாணவர்கள் தங்கள் சீருடைக்கு மேல் காவித் துண்டு அணிந்து கொண்டும் கல்லூரிகளுக்கு வந்தனர்.

சீருடை கட்டாயம்

இந்த நிலையில்தான் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு கடந்த மாதம் 5-ந் தேதி தடை விதிக்கப்பட்டது. மேலும், அனைத்து மாணவர்களும் பள்ளிக்கான சீருடையில் மட்டுமே வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவும் பிறப்பித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த வழக்கில் சமூக ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நியாயமான கட்டுப்பாடுகளைத் தவிர, இந்தியாவில் ஹிஜாப் அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று பெங்களூரு ஐகோர்ட்டில் கர்நாடக அரசு தெரிவித்தும் இருந்தது.

இந்த நிலையில் முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக இடைக்காலத் தடை விதிக்க கர்நாடக ஐகோர்ட்டு மறுத்ததுடன் வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை எந்த மதம் சார்ந்த ஆடைகளையும் அணியாமல் சீருடையை மட்டுமே மாணவ, மாணவிகள் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பெங்களூரு ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், “நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அரசு தரப்பு பதில்கள் போன்றவற்றின் அடிப்படையில் மூன்று கேள்விகள் இந்த கோர்ட்டில் எழுப்பப்பட்டிருந்தன.

பரபரப்பு தீர்ப்பு

முதலாவதாக இஸ்லாத்தின் கீழ் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறையா? இரண்டாவதாக, கருத்துச் சுதந்திரம் தனி உரிமைக்கான உரிமையா? மூன்றாவதாக பிப்ரவரி 5-ம் தேதியிட்ட கர்நாடகா கல்வித்துறை அரசாணை, மனப்பூர்வமற்ற முறையிலும் தன்னிச்சையாகவும் வெளியிடப்பட்டதா? என கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

அதற்கான எங்களது விடை, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் கீழ் அத்தியாவசியமான மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை. சீருடையின் தேவை என்பது அரசியலமைப்பின் 19(1)a-ன் கீழ் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைக்கு ஒரு நியாயமான கட்டுப்பாடு. எனவே பள்ளி சீருடையை பரிந்துரைப்பது என்பது ஏற்புடைய ஒரு கட்டுப்பாடு மட்டுமே, அதை மாணவிகள் எதிர்க்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசாணை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்று குறிப்பிட்டனர்.

அத்துடன் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடையை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த அத்தனை மனுக்களையும் நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து விட்டது.

144 தடை உத்தரவு

இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பெங்களூரு முழுவதும் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், போராட்டங்கள், கொண்டாட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இதையொட்டி பெங்களூரு முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பதற்றமான பகுதிகளில் குவிக்கப்பட்டும் உள்ளனர். மாநிலத்தின் பெரும்பாலான பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பு கல்வியாளர்களிடையே வரவேற்பு, எதிர்ப்பு என்கிற இரு வேறு சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்வியாளர்கள் கோரிக்கை

“பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களுக்குள் நுழைந்துவிட்டால் அனைவரும் ஒன்றுதான். அவர்களிடையே எந்த பாகுபாடும் கிடையாது. அது கூடவும் கூடாது.மாணவ மாணவிகள் சீருடை அணிந்திருந்தால்தான் சாதி, மத பேதமின்றி மனம்விட்டு பேசுவார்கள் பழகுவார்கள். அது இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதற்கும் அடையாளமாகத் திகழும்.

அதன் அடிப்படையில்தான் பெங்களூர் ஐகோர்ட்டின் நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் ஹிஜாப் அணிவது தொடர்பான கேள்விக்கு முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் கீழ் அத்தியாவசியமான மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டி இருப்பதை அப்படியே புறம் தள்ளிவிட முடியாது.

பொதுவெளியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய எந்தத் தடையும் இல்லாதபோது கல்விக் கூடங்களில் மட்டும் சீருடைக்கு மேலாக ஹிஜாப் அணிவோம் என்று மாணவிகள் கூறுவது ஏற்புடையது அல்ல. உள்ளே வருவதற்கு முன்பும் வெளியே செல்லும் போதும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய எந்த தடையும் கிடையாதே. அதேபோல கல்வி நிறுவனங்களின் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றை மாணவ-மாணவிகள் அவசியம் பின்பற்றி நடக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பொறுப்புணர்வும், சமுதாய விழிப்புணர்வும் ஏற்படும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேநேரம் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள், ஆசிரியைகள் அவர்கள் நுழைவுவாயில் பகுதியிலேயே அதை அகற்றுவதற்கு பிரத்தியேக அறைகளை அமைப்பதும் அவசியமானதாகும். அந்த வசதிகளை செய்து கொடுப்பதிலும் கல்வி நிறுவனங்கள் அக்கறை செலுத்த வேண்டும்” என்று அந்த கல்வியாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

மதசம்பிரதாயம்

கல்வியாளர்களின் இன்னொரு தரப்பினர் கூறும்போது, “இந்திய கல்வி நிறுவனங்களில் படிக்கும் அத்தனை மாணவ மாணவிகளும் அவரவர் மத சம்பிரதாயங்களை கடைபிடிக்கும் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றனர். அப்படி இருக்கும்போது முஸ்லிம் மாணவிகள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்குள் ஹிஜாப் அணியக் கூடாது என்று கட்டாயப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை.

ஒரு மாணவ, மாணவியின் பெயரை வைத்தே அவர் யார் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை உயர் பள்ளிகளில் படிப்போர் எளிதில் அடையாளம் கண்டுகொண்டு விடுவார்கள். அதனால் முஸ்லிம் மாணவி என்றால் ஹிஜாப் அணியத்தான் செய்வார் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

Allow us to wear hijab on Fridays and Ramzan, Muslim girls tell Karnataka  HC - India News

கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு திருப்திகரமாக இருக்காது என்றபோதிலும் கூட மேல்முறையீட்டின்போது சுப்ரீம் கோர்ட்டில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கலாம்” என கருத்து தெரிவித்தனர்.

Views: - 847

0

0