இந்திக்கு அடிபணிந்தாரா உதயநிதி…? கருணாநிதியின் கொள்கையை விட வியாபாரம்தான் அவருக்கு முக்கியம்… அண்ணாமலை அதிரடி..!!

Author: Babu Lakshmanan
8 August 2022, 7:03 pm
Quick Share

இந்தி விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கொள்கையை அவரது பேரனும், திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கைவிட்டு விட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளில் முதன்மையானது திமுக. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதற்கொண்டு தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் வரையிலும் இந்தியை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அதேபோல, திமுக எம்எல்வும், ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின், இந்தி தெரியாது போடா உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அணிந்து இந்தியை எதிர்த்தார். அப்போது, அவரது செயல் பலராலும் கவரப்பட்டது.

அண்மை காலமாக தமிழகத்தில் வெளியாகும் திரைப்படங்களின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் நிறுவனம் தான் அதிகம் பெற்று வருகிறது. இது அரசியல் கட்சியினரிடையே கடுமையான விமர்சனங்களை முன்வைக்கப்பட்டது. சினிமா அவரது தொழில், அரசியல் அவருடைய கொள்கை ரீதியானது என்றெல்லாம் திமுகவினர் கூறி வந்தனர்.

இந்த நிலையில், நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவான ‘லால் சிங் சத்தா’ என்னும் இந்தி படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமததை ரெட் ஜெயின்ட் நிறுவனம் பெற்றது. இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினிடம், “இந்தி தெரியாது போடா, பானி பூரி விற்பவர்களை விமர்சித்து வரும் நீங்கள், இந்தி திரைப்படத்தை வெளியிடுவதால் கடுமையான விமர்சனங்கள் எழுமே..?,” என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர், இந்தியை யாரும் கற்றுக் கொள்ளக் கூடாது என்று நான் கூறவில்லை. விருப்பப்பட்டால் கற்றுக் கொள்ளலாம். யாரிடமும் இந்தியை திணிக்கக் கூடாது என்றுதான் கூறுகிறேன், எனக் கூறினார். அவரது இந்தப் பதிலுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதனிடையே, இந்தி விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பின்வாங்கியது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி இந்தி மொழி எந்த ரூபத்தில் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம் என்று தீவிரமாக இருந்தார். இன்று அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அந்த கொள்கையை கைவிட்டு விட்டார். ‘லால் சிங் சத்தா’ படத்தின் வினியோக உரிமையை பெற்று வெளியிட்டுள்ளார். அரசியலை விட வியாபாரத்திற்குத்தான் முக்கியத்துவம் என்பது வெளிப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 460

0

0