மத்தியில் காங்கிரஸ், திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்… பட்டியலிட தயாரா..? அமித்ஷா சவால்..!!

21 November 2020, 7:07 pm
amit shah challange - updatenews360
Quick Share

சென்னை : காங்கிரஸ் மற்றும் திமுக 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்கு செய்த திட்டங்களை பட்டியலிட முடியுமா..? என உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பிறகு, விழா மேடையில் அவர் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது :- உலகிலேயே தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாதது வருத்தமளிக்கிறது. இதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். தமிழகத்தின் பாரம்பரியமும், கலாச்சாரமும் மிகவும் தொன்மையானது. வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் கொரோனாவில் மீளுபவர்களின் எண்ணிக்கை அதிகம். தமிழகத்தை போல கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் வேறு எந்த மாநிலத்திலும் எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் நீர் பாதுகாப்பு, நீர் மேலாண்மை ஆகிய இரண்டிலும் தமிழகமே முதலிடத்தில் உள்ளது. ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மத்திய அரசு முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, 13 கோடி வீடுகளுக்கு எரிவாயு வசதி கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கு வீடு திட்டம் நிறைவேற்றப்படும். அனைத்து திட்டங்களிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இதுவரையில் விவசாயிகளுக்கு 95,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 செலுத்தப்படுகிறது. கடல்மாலை திட்டத்திற்காக தமிழகத்திற்கு ரூ.2.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் ரூ.12,460 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டியது மோடி அரசுதான்.

நாடு முழுவதும் குடும்ப ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி வருகின்றனர். அதே மாதிரி வரும் தேர்தலிலும் தமிழகத்திலும் குடும்ப ஆட்சியை அகற்றி மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள். காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்திற்கு செய்த திட்டங்களை பட்டியலிட முடியுமா..? நாங்கள் பட்டியலிட தயார், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 15

0

0