அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தால் யாருக்கு லாபம்?…திசை மாறும் தேர்தல் களம்!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2023, 7:49 pm
admk Bjp - updatenews360
Quick Share

தமிழ் புத்தாண்டு தினத்தன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்து பட்டியலை DMK FILES என்ற தலைப்பில் வீடியோவாக வெளியிட்டு தமிழக மக்களை மட்டுமின்றி இந்தியாவையே அதிர்ச்சியில் மூழ்க வைத்தார்.

பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மீது 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு டெண்டர் கிடைக்க செய்வதற்காக 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார். இது தொடர்பாக நான் சிபிஐயில் புகார் செய்வேன் என்றும் குற்றம்சாட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதை உடனடியாக மறுத்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “யார் யார் மீதெல்லாம் குற்றம் சாட்டினாரோ அவர்களெல்லாம் அண்ணாமலை மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இனி அவர் தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளில்தான் நடைபயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்” என்று எச்சரிக்கையும் விடுத்தார். இந்த நிலையில்தான் மெட்ரோ ரயில் திட்டத்தில் எந்த முறை கேடும் நடக்கவில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மறுத்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி நடத்தியவர்களின் சொத்து பட்டியல்

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சி தலைவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறியது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அப்படியென்றால் ராஜாஜி, காமராஜர்,பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருடைய ஆட்சி காலத்தில் சொத்து சேர்த்த தலைவர்களின் பட்டியலையும் அண்ணாமலை வெளியிடுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது.

இதற்கு “திமுகவின் சொத்து பட்டியலை முதலில் வெளியிட்டு முடிக்கிறேன். அதன் பிறகு மற்ற தலைவர்களின் பட்டியலை வெளியிடுகிறேன். 2024 தேர்தல் வரை சொத்து பட்டியல் வெளியிடுவது தொடரும்” என்று அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.

அதிமுக கடும் விமர்சனம்

இது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக- பாஜக கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக அமைந்துவிட்டது.

ஏனென்றால் அண்ணாமலையின் குற்றச்சாட்டை அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமியும் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

“அண்ணாமலை பேட்டி கொடுத்து, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். அவரைப்பற்றி என்னிடம் இனி கேட்காதீர்கள். முதிர்ந்த தலைவர்களைப் பற்றிக் கேளுங்கள். பதில் சொல்கிறேன்”என்று எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டி இருக்கிறார்.

கே.பி. முனுசாமியோ, “திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோரின் சொத்துப் பட்டியலை பாஜக தலைவராக இருந்து அண்ணாமலை வெளியிட்டாரா அல்லது தனிப்பட்ட முறையில் வெளியிட்டாரா என்பதை முதலில் விளக்கவேண்டும்.

இதேபோல பாஜக ஆட்சியில் இல்லாத ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் பாஜக தலைவர்களும், ஆளுங்கட்சியினரின் சொத்து, ஊழல் பட்டியல்களை வெளியிடுவார்களா? ஊழலை எதிர்த்து பாதயாத்திரை மேற்கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இவர் மட்டும்தான் ஊழலை ஒழிக்கப் பிறந்தவரா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டி?

கடந்த மாதம் சென்னையில் நடந்த மாநில பாஜக நிர்வாகிகள் குழு ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி நான் சாதாரண ஒரு தொண்டனாக பணியாற்றுவேன் என்று அண்ணாமலை ஆவேசமாக பேசியதாக கூறப்பட்ட நிலையில் அது தமிழக பாஜக மூத்த தலைவர்களிடம் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
அவர்களில் சிலர் அண்ணாமலை அப்படி பேசவே இல்லை என்றும் இன்னும் சிலர் கூட்டணி அமைக்காமல் எதையும் சாதிக்க முடியாது என்றும் கூற இந்த விவகாரம் இன்னும் விஸ்வரூபம் எடுத்தது.

அதேநேரம் ஆட்சியில் இருந்த அத்தனை கட்சித் தலைவர்களின் சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என்று அண்ணாமலை அறிவித்திருப்பதன் மூலம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தல் இரண்டிலும் தமிழகத்தில் பாஜக தனித்தே போட்டியிடும் என்பதை அவர் பட்டவர்த்தனமாக உணர்த்தி இருக்கிறார் என்பதும் உண்மை.

டிடிவி கோரிக்கை

மேலும் எடப்பாடி பழனிசாமியின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் ஒரு கேலிப் பொருளாகவே பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் 1994-ல் லண்டனில் 450 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹோட்டல் மற்றும் சொத்துகளை டிடிவி தினகரன் எப்படி வாங்கி குவித்தார்? முதலில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருடன் சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட அவரை முந்தைய திமுக அரசு 2009-ல் அந்த வழக்கில் இருந்து ஏன் விடுவித்தது? என்ற கேள்விகள் இப்போது மீண்டும் எழுப்பப்படுகிறது.

அதேபோல ஓ பன்னீர்செல்வம் வாங்கி குவித்த சொத்துக்கள் குறித்த வழக்கை ஸ்டாலின் அரசு தூசி தட்டி எடுக்கவேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி இருக்கிறார். ஏனென்றால் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளில் ஓ பன்னீர்செல்வம் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், தமிழகத்தில் தேனி உள்பட பல மாவட்டங்களில் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும் சொத்துக்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறார் என்று பரவலாக பேசப்படுவதுதான்.

“தமிழகத்தில் அண்ணாமலை பாஜகவை தனித்துப் போட்டியிட வைக்கும் முடிவை நோக்கி தள்ளுவது அக்கட்சிக்கு உடனடியாக எந்த பலனையும் தரப்போவதில்லை. இன்னும் இரண்டு, மூன்று தேர்தல்களுக்கு தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் அதன் மூலம் பெயர் சொல்லக் கூடிய அளவிற்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சிக்கும் பாமக?

“ஏனென்றால் பாஜக கூட்டணியில் உள்ளதாக கூறப்படும் கட்சிகளில் பாமகவின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி அளித்தார் என்ற சிபிஐயின் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்.

பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் போலவே இந்திய ஜனநாயக கட்சியின் எம்பி பாரிவேந்தரும், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகமும் ஏராளமான கல்வி நிறுவனங்களுக்கு அதிபர்கள். இதனால் இந்த இருவரும் எப்படி சொத்து சேர்த்தார்கள் என்கிற விவரத்தையும் வெளியிடும் நிலைக்கு அண்ணாமலை தள்ளப்பட்டுள்ளார். எனவே இந்த இரு கட்சிகளும் பாஜக கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

ஒரே அணியில் சசிகலா, டிடிவி, ஓபிஎஸ்?

சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் மூன்று பேரையும் ஒரே அணியாக இணைத்து அவர்களுடன் பாஜக போட்டியிட வாய்ப்பு உண்டு என்றும் கூறுகிறார்கள். அதைத்தான் டெல்லி மேலிட பாஜகவும் விரும்புகிறது என்கின்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தனக்கு இருந்த செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்து அவருடைய ஆட்சி காலத்தில் தன்னைச் சுற்றியிருந்த 32 மன்னார்குடி குடும்பத்தினருக்காக 65 ஆயிரம் கோடி ரூபாய் வரை சசிகலா சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு பல்வேறு தரப்பினராலும் வைக்கப்படுகிறது. இது தவிர டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு 15 ஆயிரம் கோடி ரூபாய், ஓ பன்னீர் செல்வத்தின் சொத்து மதிப்பு 12 ஆயிரம் கோடி என்று கூறப்படும் நிலையில் இந்த மூவரையும் ஒரே அணியாக இணைத்து போட்டியிட நேர்ந்தால் பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் கட்சித் தலைவர்கள் மீது சுமத்தும் ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் கண்துடைப்பு நாடகமோ என்ற சந்தேகத்தைதான் ஏற்படுத்தும்.

திமுக கூட்டணி நீடிக்கும்?

இதுபோன்ற சூழலில் சொத்து பட்டியல் விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாமே அண்ணாமலைக்கு ஒரே நேரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதால் 2024 தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் விசிக, மதிமுக கட்சிகள் தங்களுக்கு ஒரு தொகுதியை திமுக ஒதுக்காவிட்டாலும் கூட பாஜகதான் எங்கள் முதல் எதிரி என்று கூறி தொடர்ந்து தங்கள் கூட்டணியிலேயே நீடிக்கும் என்பதுதான் எதார்த்த நிலை.

ஆனால் மறுபக்கமோ வலிமையான அதிமுக தலைமையில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ்,தேமுதிக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் ஆகியவை இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகிவிடும் வாய்ப்பும் உள்ளது. ஏனென்றால் தேர்தல் வெற்றி மூலம்தான் அரசியலில் நீண்ட காலத்துக்கு பயணம் செய்ய முடியும் என்பதை இக்கட்சிகளின் தலைவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.

மிக அதிக சொத்துக் குவித்த தலைவர்கள் என்ற பட்டியலில் சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் வருவார்கள் என்பதால் அவர்கள் அண்ணாமலையின் பாஜக அணியில் இணைய முடியாத சூழல்தான் ஏற்படும்.

சீமானின் புதிய வியூகம்

அதனால் இந்த மூவரும் சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நிலையில் தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் அது திமுக, அதிமுக கூட்டணிகளுக்குத்தான் சரி சம வெற்றி வாய்ப்பை உருவாக்கித் தரும். நாம் தமிழர் கட்சி கூட்டணியும் பாஜகவும் 8 அல்லது 9 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற முடியும்.

தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக தலைவர் அண்ணாமலை கொண்டு வர விரும்புவது முதல் தலைமுறை வாக்காளர்களிடமும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமும் நல்ல வரவேற்பை பெறும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

அதிரடி காட்டும் அண்ணாமலை

ஆனால் இந்த வாக்குகள் மட்டுமே தேர்தல் வெற்றியை தீர்மானிப்பதாக அமைந்து விடாது. 2029, 2034 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழக பாஜக தனித்தே போராட வேண்டிய நிலையே ஏற்படும். அப்போது வேண்டுமென்றால் குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவிற்கு நாடாளுமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கலாம்.

அதேபோல் 2026, 2031 சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் 10 முதல்15 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஏனென்றால் அப்போது தமிழகத்தில் குறிப்பிட்ட அளவிற்கு வாக்கு வங்கியை அக்கட்சி பெற்றிருக்கும் என்று உறுதியாக நம்பலாம். அதுவரை மாநில பாஜக தலைவராக அண்ணாமலை
நீடித்திருக்கவும் வேண்டும். எனினும் வளரும் இளம் தலைவர்களை பாஜக மேலிடம் ஊக்குவித்து வருவதால் இன்னும் 10 வருடங்கள் வரை தமிழக அரசியலில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபடுவார் என நம்பலாம்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் ஆருடம் கூறுகிறார்கள்.

Views: - 259

1

0