தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டம்… CM ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் காணாமல் போய் விடும் ; எச்.ராஜா எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
17 April 2023, 8:36 am
Quick Share

கோவை; தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை தேர்நிலை திடலில் ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு பின்னர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்) இந்தியா உட்பட 8 அமைப்புகள் மத்திய அரசால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். தடைக்கு மறுநாள் தமிழ்நாட்டில் திருமாவளவன் , சீமான் ஆகியோர் மனித சங்கிலி நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது என கூறிய அவர், அது மனித சங்கலி அல்ல சங்கிலியின் ஒரு பிட்டு தான் என விமர்சித்தார்.

ஆனால் தொடர்ந்து ஆர் எஸ் எஸ் பேரணிக்கு இவர்கள் தடை விதித்து வந்தார்கள் எனவும், சென்னை உயர்நீதிமன்றம் மன்றம் அனுமதி கொடுக்க அறிவுறுத்தியும், காசை கொண்டு உச்சநீதிமன்றம் சென்று தடை விதிக்க கூறினார்கள் எனவும், ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என கூறிவிட்டதாக தெரிவித்தார். எனக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தமிழக அரசு, டிஜிபி யாருக்காக இருக்கின்றனர்? தேசதுரோகிகளுக்கா? பயங்கரவாதிகளுக்காக? என கேள்வி எழுப்பினார்.

இந்த மாநில அரசு தேச துரோகிகளின் அரசு என நான் பலமுறை கூறி வந்துள்ளேன், அது நேற்று நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் காவல்துறை மற்றும் அரசாங்கம் பிரிவினைவாத தீய சக்திகள். குறிப்பாக, தனி தமிழ்நாடு கேட்கும் தமிழ் தேசிய இயக்கங்கள், திருமாவளவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். பழனியில் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர் எனவும், அது ரவுடித்தனமான செயல் எனவும் கூறிய அவர், அந்த தீய சக்திகளை செயல்பட அனுமதித்து விட்டு , தேசபக்த சக்திகளை நசுக்க பார்க்கின்றீர்கள், அது உங்களால் முடியாது எனவும், ஒவ்வொரு முறையும் தோற்றுதான் போவீர்கள் எனவும் தெரிவித்தார்.

இன்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது என தெரிவித்த அவர், இனிமேலாவது திருந்துங்கள் என்றார். காவல்துறை இன்று பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. தீய சக்திகளின், பிரிவினைவாதிகளின், பயங்கரவாதிகளின் ஏவல் துறையாக காவல் துறை மாறிக் கொண்டிருக்கிறது என்ற அய்யப்பாடு ஏற்படுகிறது என்றார். நான் ஓராயிரம் முறை சொல்லுவேன், பி எஃப் ஐ தேசத்துரோகிகள். அதனால்தான் அவர்கள் தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள் எனவும், ஒரே நாளில் 19 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வன்முறைவாதிகள், பயங்கரவாதிகள் என்றார்.

ராகுல் காந்தி ஒரு சாதியை இழிவாக பேசினார் என்பதால் அந்த சாதியை சேர்ந்த ஒரு நபர் வழக்கு தொடுத்தார் எனவும், அதற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றார். ராகுல் காந்தி கொல்லி கட்டையால் தலையை சொறிந்து கொள்கிறார் என்றார்.பாஜகவிற்கு பெரிய பிரச்சார பீரங்கியே ராகுல் காந்திதான் என தெரிவித்த அவர், ராகுல் காந்தி பேசி விட்டு வந்தால் பத்தாயிரம் ஓட்டுக்கள் எங்களுக்கு அதிகமாக தான் விழும் என கூறினார்.

பாஜக தலைவர் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர்கள் 17 பேரும் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யட்டும், அண்ணாமலை சொல்லியது அனைத்தும் பொய், இந்த சொத்து எதுவும் எங்களுடையது இல்லை என தாக்கல் செய்யட்டும், அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவர், அவர் வெளியிட்டது பா.ஜ.க கட்சியின் கருத்துதான் என்றார்.

தமிழ்நாடு அரசு ஆளுநர் விவாதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருக்கிறது என கூறினார். ஆளுநர் கையில் தகவலும், தரவுகளும் இருக்கின்ற காரணத்தால் பேசியிருக்கிறார். ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என தெரிவித்தார்.

Views: - 238

0

0