இந்தியன் 2 விவகாரம்… விவேக் மறைவை காரணம் காட்டும் ஷங்கர்… அட்வைஸ் கொடுத்த ஐகோர்ட்..!!!

22 April 2021, 2:01 pm
Quick Share

சென்னை : இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்தியன் படத்திற்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். தற்போது தேர்தல் வேளைகளில் கமல் பிசியாக இருந்ததால், இந்த படத்தின் படிப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. இதனால், சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவை வைத்து படம் இயக்கப் போவதாகவும், தெலுங்கு பட உலகில் பிரபலமான தயாரிப்பாளரான தில் ராஜு என்பவர் இந்த படத்தை தயாரிக்கப் போவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பால் அதிர்ந்து போன இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, இயக்குநர் ஷங்கர் மீது வழக்கு தொடுத்துள்ளது. அந்த மனுவில், “கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில், அந்த படத்தை முழுமையாக முடித்து கொடுத்த பின்னர்தான், வேறு படங்களை அவர் இயக்க செல்ல வேண்டும். இந்த திரைப்படத்துக்கு ரூ. 150 கோடி பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், ரூ.236 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை முடிக்கும்வரை இயக்குனர் ஷங்கர் பிறபடங்களை இயக்க தடை விதிக்க வேண்டும், என வலியுறுத்தியிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்தது. இதற்கு பதிலளித்த ஷங்கர் தரப்பினர், நடிகர் விவேக் இறந்து விட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளதாகக் கூறியது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்தியன் 2 பட பிரச்சனை தொடர்பாக இரண்டு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவால் இந்த பிரச்சனையில் சுமூக சூழல் ஏற்படாது எனக் கூறி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Views: - 108

1

0