தமிழக சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தலா..? சென்னையில் தேர்தல் ஆணைய குழு பதில்..!!

22 December 2020, 2:07 pm
ec - election commission - updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது தொடர்பாக சென்னையில் இந்திய தேர்தல் ஆணையக் குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தேர்தல் ஆணையக் குழுவினர் 2 நாட்கள் ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அவர்கள் பேசியதாவது :- சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்த 2 நாள் ஆலோசனை மிகவும் ஆரோக்கியமனதாக இருந்தது. சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு ஏற்ப தேர்தல் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பீகார் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஒரு மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமானால், தேர்தல் ஆணையத்திற்கு குறைந்தது 6 மாதங்கள் தேவைப்படும். தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்களிக்க வரும் அனைவருக்கும் தேவையான வசதிகளை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா வழிமுறைகள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படும். வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். தொற்று பரவல் குறைந்திருந்தாலும் அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்படும்.

வாக்குச் சாவடிகளுக்கு வர இயலாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். இது தொலைநோக்கு நடவடிக்கையாகும். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்கு உரிமை வழங்குவதில் முறைகேடு செய்ய முடியாது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்துதான் வாக்களிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது சரியான நடவடிக்கையல்ல.

இந்த இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட ஆலோசனையின் போது, வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தியுள்ளோம். தமிழகத்தை பொறுத்தவயில் தேர்தல் அமைதியான முறையில் நடப்பதுதான் வழக்கம். வாக்குப் பணம், மது, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா..? என்பது குறித்து தற்போது முடிவு செய்ய முடியாது. தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. இந்தக் கோரிக்கை தேர்தல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க பறக்கும் படை, கண்காணிப்பு படை அதிகம் அமைக்கப்படும்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் விவிபேட் அமைக்கப்படும். ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்னும் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகமாகும். கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும், எனத் தெரிவித்தனர்.

Views: - 1

0

0