அறிவாலயவாசிகளை காப்பாற்றுவது காவல்துறையின் முதன்மை பணியா? எச்சரிக்கை அளித்தும் கோட்டை விட்ட உளவுத்துறை : அண்ணாமலை குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2022, 7:19 pm
Ask Anamalai - Updatenews360
Quick Share

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முன்னரே எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை கோட்டைவிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறைக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், கடந்த 23ம் தேதி அதிகாலை கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி என்ற செய்தி வந்தது. அன்று மதியம் இதைப்பற்றி பதிவிட்டிருந்த நான் காவல்துறை உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கியதை பாராட்டினேன். மேலும் இந்த வெடி விபத்தில் இருக்கும் மர்மத்தை காவல்துறை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.

23ம் தேதி இரவு நடந்த விபத்து சிலிண்டர் விபத்து இல்லை. இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்றும் இதை மேற்கொண்ட நபருக்கு ஐஎஸ்ஐஎஸ் என்கிற தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது என்றும் நான் பதிவிட்டிருந்தேன். இதை தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு மறுக்க முடியுமா?

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்து 36 மணி நேரம் ஆன பின்பும் தமிழக முதல்வர் இதைப்பற்றி பேச மறுப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைத்தேன். ஆனால் இன்றுடன் இந்த சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை தமிழக முதல்வர் மவுனம் காப்பது ஏன்?

6 தனிப்படை அமைத்து விசாரித்து கொண்ருக்கிறோம் என சொல்லும் காவல்துறை அடுத்த கட்ட உண்மைகளை சொல்வதற்கு தயங்குவது ஏன்? இதுவரை இது ஒரு தீவிரவாத சதிச்செயல் என்று சொல்ல மறுப்பது ஏன்? அக்டோபர் 21ம் தேதி ஜமேஷா முபின் வைத்திருந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இதை காவல்துறை மறுக்க முடியுமா?

இறந்த ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டினோம். காவல்துறை இதை மறுக்குமா? அக்டோபர் 23ம் தேதி முன்னரே ஜமேஷா முபின் பற்றிய தகவல்கள் காவல்துறை தலைமை மற்றும் உளவுத்துறையில் இயங்கும் ஒரு தனிப்பிரிவு வழங்கியுள்ளது. 96 நபர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் தனி நபராக திடீர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாவும் ஒரு பட்டியலை கொடுத்துள்ளது அந்த தனிப்பிரிவு. அதில் ஜமேஷா முபின் 89ஆம் இடத்தில் உள்ளார். இந்த வருடம் ஜூன் 19ம் தேதி கொடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கைக்கு பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல்துறையின் உளவுத்துறை.

கோவை தற்கொலைப்படை தாக்குதல் வழக்கின் போக்கை திசைதிருப்பும் விதமாக என்ன கேட்டுவிட்டோம் என்பதை காவல்துறை உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும்

ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக ஆதாரங்களுடன் உங்களை கேட்கும் கேள்விகள் உங்களை அச்சத்தில் ஆழ்த்தி அறிவாலயத்தடம் அறிக்கை பெறும் அளவிற்கு தள்ளியுள்ளது என்பது வருத்தமே.

வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க இளவரசர் உதயநிதி போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தால் பத்திரிகை செய்தி மிக சிறப்பாக இருந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் நிகழாமல் இருக்க உடனடியாக சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுங்கள் என்பதையும் தமிழக மக்களின் சார்பாக ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Views: - 306

2

0