திமுக இறுதி தொகுதி பங்கீடு பட்டியலை ஸ்டாலினிடம் ஒப்படைத்த ஐபேக் நிறுவனம் : காங்கிரஸுக்கு இத்தனை தொகுதிகள் தானா..?

17 November 2020, 12:32 pm
DMK - Congress - Updatenews360
Quick Share

திமுகவின் அடையாளமான மு. கருணாநிதி இல்லாமல் அக்கட்சியினர் சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல், அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலாகும். திறம்பட கட்சியை வழிநடத்த முடியாத நிலையில், உட்கட்சி பூசல், கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல முடியாதது உள்ளிட்ட பிரச்சனைகளுடன், இந்தத் தேர்தல் பணிகளை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டார் முக ஸ்டாலின்.

வேட்பாளர்களை தேர்வு செய்தல், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஐபேக் நிறுவனமே முடிவு செய்து வருகிறது. இதனால், திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

stalin prasanth kishore - updatenews360

தேர்தலுக்கு தேவையான அனைத்து வியூகங்களையும் வகுத்து வரும் ஐபேக் நிறுவனம், தற்போது இறுதி தொகுதி பங்கீடு பட்டியலை திமுக தலைமையிடம் ஒப்படைத்துள்ளது. அதில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட்டால் திமுக வெற்றி பெறும் எனவும் கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பட்டியலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தகவலும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அதில், காங்கிரஸ் 27 தொகுதிகள், மதிமுக 6 தொகுதிகள், கம்யூனிஸ்ட்கள் தலா 6 என மொத்தம் 12 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் 6 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றிற்கு தலா 3 தொகுதிகள் என மொத்தம் 63 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 171 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிட முடிவு செய்துள்ளது.

கடந்த தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு இந்த முறை 27 தொகுதிகளே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரணம் பீகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவின் தோல்விக்கு காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதுதான் என்று கூறப்படுவதுதான். எனவே, பீகார் நிலைமை இங்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, காங்கிரஸுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.