திமுகவுடன் பாமக கை கோர்க்கிறதா?… அதிர்ச்சியில் விசிக, காங்.!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2023, 7:16 pm
DMK PMK
Quick Share

திமுகவுடன் பாமக கை கோர்க்கிறதா?… அதிர்ச்சியில் விசிக, காங்.!!!

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்று இரண்டரை வருடங்களை கடந்து விட்ட நிலையில் பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதல் முறையாக டிசம்பர் 29ம் தேதியன்று அவரை சந்தித்து பேசி இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி விட்டு இருக்கிறது.

அதுவும் சென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலினை அவர் சந்தித்தது தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசு பொருளாகவும் மாறியுள்ளது.

சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் திமுக தரப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோரும், பாமக தரப்பில் தரப்பில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோரும் பங்கேற்றனர்.

அப்போத முதலமைச்சர் ஸ்டாலினிடம், “தமிழகத்தில் நடைமுறையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை, உடனே நிறைவேற்ற வேண்டும்” என்று, ராமதாஸ் வலியுறுத்தியதுடன் இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் வழங்கினார்.

இதனால் முதலமைச்சர் ஸ்டாலினும், டாக்டர் ராமதாசும் அரசியல் பேசியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டாலும் கூட அதையும் கடந்து 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்றே தெரிகிறது.

இதற்கு முக்கிய காரணம் பாமகவை எப்படியாவது திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்று கடந்த ஆறு மாதங்களாகவே திரை மறைவில் டாக்டர் ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்தான் இந்த சந்திப்புக்கு மூல காரணம் என்றும் திமுக தேர்தல் பணிக் குழு தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கே என் நேருவும், விரைவில் துணை முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படும் உதயநிதியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டது தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

வட மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கியை பயன்படுத்திக் கொண்டால் தற்போதைய சூழலில் அதிமுக மற்றும் பாஜகவை எதிர்க்க உதவும் என்ற கருத்தும் திமுகவில் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல தலைவர்களிடம் இருக்கிறது.

அதேநேரம் பாமக இடம் பெறும் அணியில் நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து கூறி வருவதால் அவரையும் சமாளிக்க வேண்டிய நெருக்கடியான நிலை திமுகவுக்கு உள்ளது. விசிகவை சமாதானப்படுத்தி பாமகவை இணைத்தாலும் கூட தொகுதிகளை பங்கிடுவதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. எனினும் இதற்கு எளிதில் தீர்வு கண்டுவிட முடியும் என்று அறிவாலயம் நம்புகிறது.

ஏனென்றால் 2024 தேர்தலில் அதிக சீட் கேட்டு திமுகவிடம் பேரம் பேச முடியாது. அதனால் கூட்டணி விஷயத்தில் விட்டுக் கொடுக்கும் நிலைக்கு பாமக இறங்கி வந்து விட்டது என்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் வெற்றி பெறும் அணியில் இருக்கவேண்டும் என்ற பாமகவின் நிலைப்பாடுதான். அந்த வகையில்தான் திமுக கூட்டணியை டாக்டர் ராமதாஸ் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

2021 தமிழக தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஐந்து இடங்களில் வென்றது.தேர்தல் முடிந்ததும், அதிமுக அணியிலிருந்து வெளியேறிய பாமக, திமுக அரசு மீது மென்மையான போக்கையே கடைப்பிடித்து வருகிறது. டாக்டர் ராமதாஸும், பாமக தலைவர் டாக்டர் அன்புமணியும் திமுக அரசுக்கு எதிராக பெரிய அளவில் கண்டன குரல்கள் எதையும் இதுவரை எழுப்பியதில்லை.

டாக்டர் அன்புமணி மட்டும், அவ்வப்போது திமுக அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டாலும் கூட அதில் வலியுறுத்துகிறேன், வேண்டுகிறேன், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சொற்கள்தான் அதிகம் காணப்படுகிறது.

2024 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து விடவேண்டும் என்ற எண்ணத்தில்தான் இப்படி பட்டும், படாமலும் மென்மையான போக்கை பாமக கடைப்பிடித்து வருகிறது என்பது எதார்த்தமான உண்மை. அதேநேரம் கட்சியின் நிறுவனர், டாக்டர் ராமதாஸ் என்பதால் கூட்டணி விஷயத்தில் அவருடைய முடிவு தான் இறுதியானதாக இருக்கும் என்பது உறுதி.

திமுக, பாமக இடையேயான அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தைகள் பொங்கல் பண்டிகைக்கு பின்பு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் திமுக கூட்டணிக்குள் பாமக வருவதை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், காங்கிரசும் விரும்பவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஏனென்றால் வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், பாமகவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். பாமகவுக்கு எதிராக தீவிர அரசியலை முன்னெடுத்ததால்தான் வட மாவட்டங்களில் விசிக வேகமாக வளர்ச்சியும் கண்டது. அது போன்ற நிலையில் திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால் விசிக வெளியேறும் வாய்ப்புகளே அதிகம். என்ற போதிலும் பாஜகவை வீழ்த்துவதுதான் இண்டியா கூட்டணியின் முதல் நோக்கம் என்று கூறிவரும் திருமாவளவன், திமுக தலைமையின் சமரச முயற்சியை ஏற்றுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதேநேரம் பாமகவுக்கு இரண்டு தொகுதிகளுக்கு மேல் கொடுக்கக் கூடாது, எங்களுக்கும் 2019 தேர்தல் போல் சீட்களை ஒதுக்க வேண்டும் என்று விசிக, திமுக தலைமையிடம் கோரிக்கை வைக்க வாய்ப்பும் உள்ளது.

அதேபோல காங்கிரசும் பாமகவின் வரவை அவ்வளவாக ரசிக்கவில்லை. ஏனென்றால் பாமகவுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கினாலும், தங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு குறைந்து போய்விடுமோ என்று காங்கிரஸ் பயப்படுகிறது.

இத்தனை இடியாப்பச் சிக்கல்கள் இருந்தாலும், இதை திமுக எப்படி சமாளிக்கும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஏனென்றால் இண்டியா கூட்டணிக்குள் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிக உறுதியாக இருக்கிறார்.

“இப்படி திமுக கூட்டணியில் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால் 2024 தேர்தலில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு போட்டியிட தொகுதிகள் கிடைக்குமா” என்பது சந்தேகம்தான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்பது தொகுதிகளை ஒதுக்கியது போல் இம்முறையும் அதே அளவிற்கு எம்பி சீட்டுகளை திமுக தலைவர் ஸ்டாலின் ஒதுக்கிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம். அதில் ஒரு தொகுதியை கமல் கட்சிக்கு கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படலாம்.

சரி, பாமகவுக்கு ஒதுக்கும் இரண்டு தொகுதிகள் எங்கிருந்து வரும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?… மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை கொடுத்து இதை ஈடு கட்டிவிட முடியும் என்று அறிவாலயம் கணக்கு போடுவதாக தெரிகிறது. மேலும் கம்யூனிஸ்டுகளுக்கு 50 கோடியோ 100 கோடியோ தேர்தல் நன்கொடை வழங்கினால் அவர்கள் ஏன் தொகுதிகள் குறைந்தது என்ற கேள்வியையே எழுப்பமாட்டார்கள்.

அதேநேரம், பாமகவின் வரவை விரும்பாத இன்னொரு கட்சியும் திமுக கூட்டணியில் இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அது வேல்முருகன்
எம்எல்ஏவின் தமிழக வாழ்வுரிமைக் கட்சிதான்.

தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கை எடுக்கவேண்டும் என்று திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் இக்கட்சியும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கும் தொகுதிகளை திமுக ஒதுக்கவேண்டும் என்று திடீர் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறது. இதை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்காவிட்டால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்பது நிச்சயம். ஏனென்றால் டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் 2012ம் ஆண்டு பாமகவில் இருந்து நீக்கப்பட்டதால் தனிக் கட்சி தொடங்கியவர்தான் வேல்முருகன்”
என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பாமகவை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் அதனால் ஏற்படும் நெருக்கடிகளை திமுக தலைமை எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

Views: - 221

0

0