அண்ணாமலையால் ஆட்டம் காண்கிறதா, திமுக அரசு?…பரபரக்கும் தமிழக அரசியல் களம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2023, 9:15 pm
Annamalai - Updatenews360
Quick Share

தமிழக அரசியலில் திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு சில நேரங்களில் ஏதாவது ஒரு சம்பவம் அரங்கேறுவது உண்டு. அது அரசியல் களத்தை அப்படியே புரட்டிப் போடுவதாக அமைந்தும் விடும்.

DMK FILES டீசர்

அதுபோன்ற ‘டீசர்’ ஒன்றுதான் அண்மையில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
DMK Files என்ற தலைப்புடன் 10 வினாடிகள் ஓடும் ஒரு வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அது, அவர் தமிழ் புத்தாண்டு தினத்தன்று திமுக தலைவர்கள் யார் யார் மீதெல்லாம் சொத்து குவிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறப் போகிறாரோ? என்ற திக் திக் எதிர்பார்ப்பை உருவாக்கியும் விட்டிருந்தது.

ஏனென்றால் அண்ணாமலையின் வீடியோ பதிவை பலரும் பகிர்ந்துகொள்ள அது அடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே 5.7 லட்சம் Viewsசையும் பெற்றது. தவிர 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதை ரீ ட்விட் செய்தும் இருந்தனர். இதனால் திமுக அரசு மீது அண்ணாமலை வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான பரபரப்பு இன்னும் எகிறியது.

இதற்கு முன்பாக அண்ணாமலை 2021-ம் அக்டோபர் மாதம் மின்சாரம் கொள்முதல் செய்வதில் பி.ஜி.ஆர் என்ற தனியார் மின் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து கொண்டதில் முறைகேடு, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடம் வாங்காமல் 100 கோடி ரூபாய்க்கு குறையாமல் வர்த்தகம் செய்யும் தனியாரிடம் மட்டுமே பெறும் வகையில் டெண்டர் விட்டது போன்ற குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது கூறியிருந்தார்.

ஆனாலும் இவற்றில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று அப்போது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் இருவரும் மறுத்தனர். எனினும் 100 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் இனிப்பு நிறுவனங்கள் என்ற நிபந்தனையை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நீக்கி இனிப்புகளை ஆவினில் மட்டுமே கொள்முதல் செய்யவேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்தார்.

அப்போது அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டு சில மாதங்களே ஆகியிருந்ததால் அவர் வைத்த குற்றச்சாட்டுகள் திமுக அரசு மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மை.

அமைச்சர் செந்தில்பாலாஜி VS அண்ணாமலை

இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன்பு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி “நீங்கள் கையில் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச்சிற்கான பில்லைக் காட்டுங்கள்” என்று சவால் விடுத்தார்.

மேலும் இந்த ரபேல் வாட்ச்சின் மதிப்பு 4 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும். தன்னை விவசாயி எனக் கூறிக்கொள்ளும் அண்ணாமலையால் இந்த வாட்ச்சை எப்படி வாங்க முடிந்தது? என திமுகவினர் கேள்வியும் எழுப்பினர். அது மட்டுமல்லாமல், கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக இருந்த போது லஞ்சமாக பெறப்பட்ட வாட்ச்தான் இது என்று அவர்களில் சிலர் கிண்டலாகவும் கூறினர்.

அதன் பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே தொடங்கிய பனிப்போர் இன்றுவரை நடந்து வருகிறது. அது தற்போது உச்சத்தை எட்டியும் விட்டது.

அண்ணாமலை வெளியிட்ட பட்டியல்

இந்த நிலையில், தான் ஏற்கனவே அறிவித்தது போல தமிழ் புத்தாண்டு தினத்தன்று திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். இது பகுதி ஒன்றுதான். இரண்டாம் பகுதியில் திமுகவினரின் கருப்பு பணம், பினாமி நிலம், வைத்துள்ள தங்க நகைகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும்” என்றும் இணைய வழி திரையில் தோன்றி அவர் அறிவிக்கவும் செய்தார்.

Part One சொத்து பட்டியல் அண்ணாமலை திமுக மீது அணுகுண்டு வீசியது போலவே இருந்தது. அவதூறு கூறுவதற்காக இந்த தகவல்களை நான் வெளியிடவில்லை என்று கூறிவிட்டு முதலில் ரபேல் கைக்கடிகாரத்தை மூன்று லட்ச ரூபாய்க்கு 2021ம் ஆண்டு மே மாதம் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்கிற நண்பர் மூலம் வாங்கியதாக தெரிவித்தார். பின்னர் திமுக தலைவர்கள் மீதான சொத்துக்கள் பட்டியலையும் அவர் திரையில் காட்டினார்.

பாஜகவின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், “நான் திமுகவுக்கு சவால் விடுத்தேன். என் பில் மட்டும் இல்ல. திமுக ஊழலையும் வெளியிடுகிறேன். நான் கேள்வி கேட்கும் நேரம் இது. நான் பட்டியலை வெளியிட்ட பின்னர் நீங்கள் அதனை முழுமையாக ஆராய்ச்சி செய்துவிட்டு பின்னர் கேளுங்கள். ஒரு வாரம் கழித்து வருகிற 21ம் தேதி உங்களை சந்தித்து விரிவாக பேசுகிறேன்” என்று குறிப்பிட்டு விட்டு ரபேல் கைக்கடிகாரம் வாங்கியதற்கான பில்லையும் காண்பித்தார்.

15 நிமிட வீடியோ

அண்ணாமலை வெளியிட்ட 15 நிமிட முதல் பகுதி வீடியோ பட்டியலில் ஜெகத்ரட்சகன் எம்பி 50 ஆயிரத்து 219 கோடி, அமைச்சர் எ வ வேலு 5 ஆயிரத்து 442 கோடி கே என் நேரு 2495 கோடி, கனிமொழி எம்பி 830 கோடி, கலாநிதி மாறன் 12 ஆயிரத்து 450 கோடி, டி ஆர் பாலு எம்பி 10,841 கோடி, அமைச்சர் உதயநிதி 2039 கோடி, முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் 902 கோடி, அமைச்சர் அன்பில் மகேஷ் 1023 கோடி, கலாநிதி வீராசாமி எம்பி 2923 கோடி, அமைச்சர் பொன் முடி மற்றும் மகன் கவுதம சிகாமணி எம்பி 581 கோடி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் மகன் கதிர் ஆனந்த் எம்பி 579 கோடி, ஜி ஸ்கொயர் வருமானம் 38,827 கோடி ரூபாய் உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திமுக தலைவர்களின் சொத்துகளை, தான் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் மற்றும் மது பார்கள் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதைவிட அவர் வைத்த இன்னொரு குற்றச்சாட்டுதான் தமிழக அரசியலையே ஒரு உலுக்கு உலுக்கி இருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் செய்த ஊழல்!!

கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டப் பணிக்கான டெண்டர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டுமே கிடைக்க செய்வதற்காக இரண்டு வெளிநாட்டு ஷெல் கம்பெனிகளிடம் இருந்து ஸ்டாலின் 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார். இந்த துறை அப்போது ஸ்டாலினிடம்தான் இருந்தது. இது தொடர்பாக நானே சிபிஐக்கு புகார் அளிக்கப் போகிறேன். மத்திய அரசின் 15 சதவீத நிதி இதில் உள்ளதால் இதை விசாரிக்க சிபிஐக்கு உரிமை உள்ளது” என்று ஒரு புதிய குண்டைத் தூக்கிபோட்டார்.

திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது பற்றி திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,”அண்ணாமலை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட வெளியிடவில்லை. சொத்து விவரத்தை மட்டும் வெளியிட்டு இருக்கிறார். அவர் யாருக்கு காதில் பூ சுற்றுகிறார் எனத் தெரியவில்லை. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். யார் யார் பெயரில் அவதூறு பரப்பினாரோ அவர்களே சட்ட நடவடிக்கைகளை எடுப்பார்கள். அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு இனி செல்ல நேரிடும்.

அமைச்சர்கள் காட்டம்

திமுக ஒரு திறந்த புத்தகம். எதை பற்றியும் கவலையில்லை எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ரபேல் வாட்ச் பில் என்று ஏதோ ஒரு பேப்பரை காட்டி அண்ணாமலை ஏமாற்றியுள்ளார். முதலமைச்சரை களங்கப்படுத்தும் அண்ணாமலையின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது”என்று காட்டமாக குறிப்பிட்டார்.

அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது “பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார் என்பது எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட்” என்றார்.

சரி, மூத்த அரசியல் விமர்சகர்கள் இது பற்றி கூறுவது என்ன?….

“அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் வீடியோவில் அதற்கான ஆதாரங்கள் இருப்பது போன்ற தகவல் வெளியாகி இருப்பது உண்மையிலேயே ஆய்வுக்குரிய விஷயம். ஏனென்றால் திமுகவின் முக்கிய தலைவர்கள் எங்கு எங்கெல்லாம் எவ்வளவு மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிறார்கள் என்ற விவரங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது.

பாஜக மேலிடம் அனுமதி?

அதுவும் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் முந்தைய திமுக ஆட்சியின்போது 200 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று அண்ணாமலை நேரடியாக குற்றம் சாட்டியிருப்பதையும் எளிதில் புறம் தள்ளி விட முடியாது.

இவற்றில் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழும் என்பது அண்ணாமலைக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அதனால் டெல்லி பாஜக மேலிடத்திடம் நிச்சயம் இது பற்றிய தகவல்களை தெரிவித்து இருப்பார். எனவே மேலிடத்தின் அனுமதி பெற்றே அவர் இந்த சொத்து பட்டியலை வெளியிட்டு இருக்கும் வாய்ப்பும் உள்ளது.

திமுகவினரின் சொத்து விவரங்களை திரட்டுவதற்காகத்தான் அண்ணாமலை சுமார் 5 மாதங்கள் வரை கால அவகாசம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

நெருக்கடியில் திமுக?

அதேநேரம் அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் போலியானவை என்று மறுத்தால் அதற்கான முழு ஆதாரங்களையும் பொதுவெளியில் காட்டவேண்டிய நெருக்கடி திமுக அமைச்சர்களுக்கும், தலைவர்களுக்கும் ஏற்படும்.

குறிப்பாக சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிடும்போது, தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் குறிப்பிட்டதை விட சொத்தின் மதிப்பு பல மடங்கு கூடுதலாக இருந்தால் அது பெருத்த சிக்கலை ஏற்படுத்தும். அதிக சொத்து குவித்தது எப்படி?என்ற கேள்வி தானாகவே எழும்.
எனவே இந்த விவகாரத்தை திமுக தலைமை எப்படி கையாளப் போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதேநேரம் திமுக வழக்கு தொடர்ந்தால் இந்த குற்றச்சாட்டுகளை கோர்ட்டில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அண்ணாமலைக்கும் ஏற்படும்.

அலற விட்ட அண்ணாமலை

ஆர் எஸ் பாரதி கூறுவதுபோல இந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு அலையக்கூடிய நிலை அண்ணாமலைக்கு ஏற்பட வாய்ப்பில்லை. ஏனென்றால் ஒட்டுமொத்த வழக்குகளையும் ஒரே கோர்ட்டில் விசாரிக்கும் நிலைதான் ஏற்படும்”என்று அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அண்ணாமலை அரசியல் களத்தில் ஆளும் கட்சியை அலற விடும் வகையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 286

2

0