அணி மாறுகிறாரா, வேல்முருகன்?…திமுக கூட்டணியில் திடீர் சலசலப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2023, 9:36 pm
Velmurugan - Updatenews360
Quick Share

திமுக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கடி அளிப்பது போல அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதை கடந்த ஓராண்டாகவே பார்க்க முடிகிறது.

எனினும் நாளடைவில் அந்த சலசலப்பு அடங்கிப் போய் விடுவதால் அதைக் கண்டு திமுக தலைமை கலக்கம் அடைவதில்லை.

திமுக மீது பாய்ந்த எம்எல்ஏ

ஆனால் சமீபகாலமாக மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை திமுக அரசின் சில திட்டங்களை கடுமையாக எதிர்ப்பதால் ஸ்டாலின் அதிர்ச்சியில் உறைந்து இருப்பது நன்றாகவே தெரிகிறது.

இதற்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான வேல்முருகன்தான்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது
“சமூக ஊடகங்களில் என்னை திமுகவுக்கு சிங் சாங் அடிப்பவன் என்று கேலி செய்கிறார்கள். நான் ஒருபோதும் திமுகவுக்கு சிங் சாங் அடிக்க மாட்டேன். துணிந்து கேள்விகள் கேட்பேன், கூட்டணி தர்மத்துக்காக வாய்மூடி இருக்க மாட்டேன். ஏனென்றால் ஒரு கூட்டணி கட்சியின் தலைவர் என்கிற முறையில் கூட திமுக எனக்கு எந்த மரியாதையும் தருவதில்லை” என்று பொங்கி இருந்தார்.

குத்திக் காட்டக் கூடாது!

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், “சபாநாயகர் என்னை துணைக் கேள்விகளை கேட்கவே அனுமதிப்பதில்லை. இது நியாயமா?” என மனக்குமுறலை வெளிப்படுத்தினார். அதற்கு சபாநாயகர் அப்பாவு
“உங்களுக்கு மார்ச் மாத கடைசி வாரத்தில் நான்கு நாட்கள் துணைக் கேள்விகள் கேட்க அனுமதி அளித்தேன். அவையில் நீங்கள் சத்தம் போடக் கூடாது. இப்படி மிரட்டல் விடுப்பதெல்லாம் கூடாது” என்று கூறியதுடன் வேல்முருகன் பேசியதை அவை குறிப்பில் இருந்தும் நீக்கினார்.

ஆனாலும் வேல்முருகனின் கொதிப்பு அடங்கவில்லை. பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர் “நான் திமுகவின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவன் என்பதற்காக சபாநாயகர் என்னை இப்படி குத்திக் காட்டக் கூடாது. அவமதிக்கக் கூடாது” என்று ஆதங்கப்பட்டார்.

திமுக அதிருப்தி

இதற்கிடையே என்எல்சி நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் வேல்முருகன் கடலூர் மாவட்ட மக்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததும் திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று அவர் அறிவித்திருப்பது அறிவாலயத்தை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

எதிர்க்கட்சியுடன் இணைந்த போராட தயார்

அரியலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கது. 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நோக்கமாகும். அது விஷ சாராயம் ஆக இருக்கலாம், கள்ள சாராயமாக இருக்கலாம், நல்ல சாராயமாக இருக்கலாம், அரசு விற்கிற சாராயமாகவும் இருக்கலாம். ஒரு சொட்டு கூட தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை. அதற்காக யாரோடு வேண்டுமென்றாலும் கைகோர்த்து போராட தயாராக இருக்கிறேன். 

அது அதிமுகவாக இருக்கலாம், விடுதலை சிறுத்தைகள் கட்சியாக இருக்கலாம். தமிழகத்தில் இருக்கிற எந்த கட்சியுடனும் சேர்ந்து போராட நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

திருமாவை பாலோ செய்யும் வேல்முருகன்

இரு தினங்களுக்கு முன்புதான் விசிக தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி அதிமுக தீவிர போராட்டத்தில் குதித்தால் அவர்களுடன் நாங்களும் இணைந்து போராடுவோம் என்று கூறி முதலமைச்சர் ஸ்டாலினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தார். அதே யுக்தியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனும் இப்போது கையில் எடுத்திருக்கிறார்.

“அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை பெயரளவிற்குதான் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மதுவிலக்கிற்கு எதிராக போராட்டத்தில் குதித்தால் அதில் எங்கள் கட்சியும் இணைந்து கொள்ளும் என்று வேல்முருகன் கூறியிருப்பதுதான் திமுக தலைமையை கடும் எரிச்சலுக்கு
உள்ளாக்கி இருக்கிறது”என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

முரசொலி மூலம் பதிலடி

“திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படையாகவே திமுக அரசின் மீது தங்களுக்கு உள்ள அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திமுக அரசு மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்திய போது, அதை வன்மையாக கண்டித்த மார்க்சிஸ்ட், திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி மாதம் ஒருமுறை மின்கணக்கீடு எடுப்பதை உறுதி செய்யவேண்டும் என்று போர்க் கொடி உயர்த்தியது. இதற்காக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியிடம் அக் கட்சி வாங்கி கட்டிக் கொள்ளவும் செய்தது.

திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பாலகிருஷ்ணன்

அதேபோல 12 மணி நேர வேலை திட்டத்திற்கும் தனது கடுமையான எதிர்ப்பை மார்க்சிஸ்ட் தலைமை பதிவு செய்தது. மேலும் கோவை,தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடக்கும் கனிம வள கொள்ளையை திமுக அரசு தடுக்கவேண்டும் என்றும் கண்டித்தது.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தை கண்டிக்கும் விதமாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்” என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திமுக அரசை வலியுறுத்தினார்.

அதேபோல விசிகவும் தங்களது கட்சி கொடியை பல கிராமங்களில் ஏற்ற விடாமல் தடுப்பதையும், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைந்தால் அவர்கள் விரட்டி அடிக்கப்படுதையும், வேங்கை வயல் கிராம மக்களின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தையும் முன்னிறுத்தி திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு

இப்படி மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் திமுக அரசுக்கு எதிர்ப்பான நிலையில் இருந்தாலும் கூட 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் இவை மத்திய பாஜக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் இப்போதைக்கு வெளியேற மாட்டார்கள் என்பது நிச்சயம்.

அதேநேரம் இரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் பயனடையும் விதமாக ஒரு சில திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் கூட சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றால் தமிழக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதை இந்தக் கட்சிகள் உணர்ந்தும் உள்ளன.

அதேபோல திமுக அமைச்சர்களின் பொதுவெளி நடவடிக்கைகள், கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்களின் அத்துமீறல்கள், நில அபகரிப்பு போன்றவை மக்களை முகம் சுளிக்க வைத்து இருப்பதால் 2026 தமிழக தேர்தலின்போது திமுக கூட்டணியில் நீடித்தால் நாம் வெற்றி பெறுவது மிக கடினமாக அமையும் என்று மார்க்சிஸ்ட், விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருத வாய்ப்பு உண்டு. அதனால் அந்த நேரத்தில் திமுக கூட்டணிக்கு இந்தக் கட்சிகள் விடை கொடுக்கலாம். இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து கொள்ளும் என்றே தோன்றுகிறது.

2026 தேர்தலை நோக்கி..

இந்த நான்கு கட்சிகளுக்கும் 6 முதல் 7 சதவீத வாக்கு வங்கி இருக்கலாம். இந்தக் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாகும்.
ஏனென்றால் ஏற்கனவே 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவும், பாமகவும் தனித்து போட்டியிடுவது உறுதி என்று அறிவித்து விட்டன.

அதனால் பாமக, பாஜக இல்லாத அணியில் அதிமுகவுடன் மார்க்சிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை கூட்டு வைக்க தயக்கம் காட்டாது.

எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை இந்தக் கட்சிகள் திமுக கூட்டணியை விட்டு வெளியேறாது என்பதை உறுதியாக கூற முடியும். அதே நேரம் திமுக அரசு மீது மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக 2024 தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிர்பார்க்கும் வெற்றிகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

அதனால்தான் திமுக அரசு தவறான போக்கை கடைபிடித்தால் கூட்டணி தர்மம் பற்றி கவலைப்படாமல் இந்த கட்சிகள் அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதும் உண்மை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

எது எப்படியோ 2026 தமிழக தேர்தலில் கூட்டணி கணக்குகள் மாறும் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது!

Views: - 274

0

0